ரஷ்யர்களின் சினிமா மோகத்தால் அதிபரான விளாதிமிர் புடின்!
1992-இல் ரஷ்யாவில் கம்யூனிசம் வீழ்ந்து போரீஸ் யெல்ட்சின் ஜனாதிபதி ஆகியிருந்தார். ரஷ்யாவின் ஏராளமான அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும். அதை வெளிநாட்டவர் கைப்பற்றகூடாது. ரஷ்யர்களுக்கே கொடுக்கவேண்டும். கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு சொத்துரிமை இல்லை என்பதால் அத்தனை நிறுவனங்களை வாங்கும் அளவு பணம் ரஷ்யர்களிடம் இல்லை.
கடைசியாக அந்த திட்டத்தை தீட்டினார் யெல்ஸ்டின். எல்லா நிறுவனங்களையும் பங்குச்சந்தையில் பட்டியலிடுவோம். பங்குகளை ரஷ்ய மக்களுக்கே வீட்டுக்கு இத்தனை பங்குகள் என பிரித்து கொடுத்துவிடுவோம் என.
கணக்குவழக்கில்லாத அளவு சொத்துள்ள ரஷ்ய கம்பெனிகள், சைபீரிய எண்ணெய் வளங்கள் கொண்ட கம்பெனிகள் எல்லாம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. பங்கு பத்திரங்கள் அச்சடிக்கபட்டு வீடு, வீடாக வினியோகிக்கபட்டன. இத்தனை நாள் கம்யூனிசத்தில் ஊறியிருந்த மக்களுக்கு பங்குகள், கம்பெனிகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
இதை பயன்படுத்திக்கொண்டு களத்தில் குதித்தார் ஒருவர். அவர் பெயர் மிக்காயில் கோர்டோவ்ஸ்கி (Mikhail Khodorkovsky). தீவிரமான கம்யூனிஸ்ட். அரசு அதிகாரி. ஆனால் கேபிடலிசம் பற்றி சரியாகத் தெரிந்து வைத்திருந்தார். பல வீடுகளில் பங்குகளை தூக்கி போட்டார்கள். சிலர் மலிவு விலையில் விற்றார்கள். சிலர் போய் கேட்டதும் சும்மாவே கொடுத்துவிட்டார்கள்.
வீடு, வீடாக போய் தன் சொத்துக்கள் முழுவதையூம் விற்று, கடன் வாங்கி என பங்குகளை வாங்கிகுவித்து சைபீரியாவின் மிகப்பெரும் எண்ணெய் வளங்களை தன் கைக்குள் கொன்டுவந்தார் மிக்காயில். வெகு சில மாதங்களில் அந்த கம்பனிகளை கையகப்படுத்தி, ஒருங்கிணைக்கையில் ரஷ்யாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகியிருந்தார்.
போரீஸ் யெல்ஸ்டின் சரியான குடிகாரர். உடல்நிலை வேறு சரியில்லாமல் இருந்தது. தனக்கு பின் ரஷ்யாவை ஆள சரியான வாரிசு வேண்டும். தன் வாரிசை தேர்ந்தெடுக்க மீண்டும் மக்களிடம் போனார் யெல்ஸ்டின். மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. "உங்களுக்கு பிடித்த சினிமா கதாபாத்திரம் என்ன?" மக்களும் "உளவுத்துறை அதிகாரி ஸ்டியர்லிட்ஸ்" (Stierlitz) எனும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தார்கள். 1960க்களில் சோவியத் யூனியனில் புகழ்பெற்ற உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரம் "ரஷ்ய ஜேம்ஸ்பாண்ட்".
"சரி என் அடுத்த வாரிசு ஒரு உளவுத்துறை அதிகாரி தான்" என சொல்லி யெல்ஸ்டின் ஒரு கேஜிபி அதிகாரியை தேர்ந்தெடுத்தார். அவர் பெயர் விளாமிதிர் புடின்.
மிக்காயில் கோர்ட்வோவ்ஸ்கி யெல்ஸ்டினின் தீவிர விசுவாசி. புடின் தான் அடுத்த வாரிசு என்றதும் அவர் எதிர்க்கவில்லை. ஆனால் ரஷ்யாவின் அனைத்து கோடிசுவரர்களையும் ஒன்று திரட்டினார். அவர்கள் அப்போது ஒலிகார்ச் (Oligarch) என்ற பெயருடன் ரஷ்யாவில் மிகுந்த ஆதிக்கத்துடன் இருந்தார்கள். புடினிடம் அவர்கள் சார்பில் ஒரே கோரிக்கை வைத்தார் மிக்காயில் "எங்கள் வணிகத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது" என ஒப்புக்கொண்டு ஆட்சிக்கு வந்தார் புடின்.
ஆனால், எந்த அரசியல்வாதியும் தனக்கு போட்டியாக ஒருவர் வளர்வதை விரும்புவதில்லை. மிக்காயில் சொல்லுக்கு ரஷ்யாவின் இத்தனை ஒலிகார்ச்சுகளும் கட்டுப்பட்டால், அவர் எத்தனை பெரிய பவர்சென்டராக இருக்கவேண்டும்? அவரை வளரவிடலாமா?
மிக்காயில் வீட்டுக்கு போலிஸ் சென்றது. கதவை தட்டியது. வரி ஏய்ப்பு குற்ற்சாட்டு சுமத்தி கைது செய்து சைபிரியாவுக்கு அனுப்பினார்கள். அவ்ரது அனைத்து சொத்துக்களும் கையகப்படுத்தபட்டு, அரசு மயம் ஆகின. அனைத்து ஒலிகார்ச்சுகளும் செய்தியை புரிந்துகொண்டார்கள். "இனிமேல் நம் தலைவர் மிக்காயில் அல்ல, புடின் தான்".... அனைவரும் அதன்பின் தீவிர புடின் விசுவாசி ஆனார்கள். வரலாறு ராஜதந்திரங்களால் எழுதப்படுவது.
நன்றி - நியாண்டர் செல்வன்