இந்திய மாநிலங்கள் உருவான வரலாறு!
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபொழுது, இந்திய நிலப்பரப்பு ஒரே நாடாக இல்லை. இங்கே, 565 சிற்றரசுகள் இயங்கி வந்தன. இந்தியத் துணைக்கண்டத்தில் வணிக நடவடிக்கைகளைத் துவக்கிய கிழக்கு இந்திய வணிக நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாக, இந்திய நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆயினும், பிரித்தானியப் பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டே, அந்த ஆட்சிப் பகுதிகள் இயங்கி வந்தன. 1857 ஆம் ஆண்டு, இந்தியாவில் நிகழ்ந்த ‘சிப்பாய் கலகம்’ எனப்படுகின்ற முதல் விடுதலைப் போருக்குப் பிறகு, 1859 ஆம் ஆண்டு, பிரித்தானியப் பேரரசி விக்டோரியா, கிழக்கு இந்திய வணிக நிறுவனத்திடம் இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகளை, நேரடியாகத் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.
அப்போதும்கூட, ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம், மைசூர், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகியவை ஆங்கில அரசின் நேரடி ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருக்கவில்லை. இந்திய விடுதலை வரையிலும், அவர்கள் தனித்தே சட்டங்களை இயற்றி, ஆட்சி நடத்தி வந்தார்கள். ஆங்கில அரசுக்கு வரி கட்டி வந்தார்கள். புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலும், கோவா, டாமன்-டையூ, தத்ரா நகர் ஹவேலி உள்ளிட்ட சில பகுதிகள் போர்த்துகல் ஆதிக்கத்திலும் இருந்து வந்தன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கில அரசுக்கு எதிரான, இந்திய விடுதலைப் போர் தீவிரம் அடைந்ததாலும், இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட நெருக்கடிகளின் விளைவாகவும், 1947 ஆம் ஆண்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் தமது பிடியின் கீழ் இருந்த சிற்றரசுகளுக்கு, பிரித்தானியப் பேரரசு விடுதலை அளித்தது.
ஹைதராபாத் நிஜாம், திருவாங்கூர் மகாராஜா ஆகியோர், தங்களுடைய ஆட்சிப் பகுதிகளை பாகிஸ்தானோடு இணைக்கப் போவதாக அறிவித்தனர். இவ்வாறு, வட இந்தியாவிலும் பல சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடு சேரப் போவதாகவும், தொடர்ந்து தனித்து இயங்கப் போவதாகவும் அறிவித்தன. அப்போது, சர்தார் வல்லபாய் மேற்கொண்ட படை நடவடிக்கைகளின் விளைவாக, ‘இந்தியா’ என்ற ஒரு நாடு உருவாகியது.
காஷ்மீர் பிரச்சினை:
காஷ்மீர் தனித்து இயங்க முற்பட்டது. பாகிஸ்தான் படைகள் அதைக் கைப்பற்ற முயன்றன. காஷ்மீர் மன்னர் ஹரிசிங், இந்தியப் படைகளின் உதவியை நாடினார். இந்தியா உதவியது. அதனால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். ஆனால், மக்கள் அந்த இணைப்பை ஏற்கவில்லை. இன்றுவரையிலும், காஷ்மீர் தனி நாடு கோரி அங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த மாநிலத்துக்கு எனத் தனியாக ஒரு கொடி உள்ளது. அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது; மத்திய அரசு கொண்டு வருகின்ற சட்டத் திருத்தங்களை, காஷ்மீர் மாநிலச் சட்டமன்றமும் ஏற்றுக் கொண்டால்தான், அந்தச் சட்டங்கள் அங்கே நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட, உள்ளிட்ட பல்வேறு சலுகைகள், இந்திய அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ளன.
மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு:
1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய ஆட்சிப் பகுதிகள் விடுதலை பெற்றன. புதிய மாநிலங்களை அமைப்பது தொடர்பான விவாதங்கள் எழுந்தன.
‘மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக்கூடாது’ என, எஸ். கே. தார் ஆணையம், 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய பரிந்துரையை, 1949 ஆம் ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் நாள், நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவர் கொண்ட குழு (ஜேவிபி) ஏற்றுக்கொண்டது.
ஆனால், தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளை ஒருங்கிணைத்து, ‘ஆந்திர மாநிலம்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூரில் உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்ட பொட்டி ஸ்ரீ ராமுலு, 1952 ஆம் ஆண்டு, டிசம்பர் 15 ஆம் நாள் இயற்கை எய்தினார். அதனால், ஆந்திரப் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
1953 ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன. எனவே, பிரதமர் நேரு, மாநிலங்கள் மறு சீரமைப்பு ஆணையத்தை அமைத்தார். 1955 ஆம் ஆண்டு, அந்தக் குழு தனது பரிந்துரைகளை அளித்தது. ஏ பி சி டி என நான்கு பிரிவுகளாக இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகளை, 16 மாநிலங்கள், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகள் 3 என வரையறுத்தது.
அக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதன்படி, மாநிலங்கள் மறுவரையறைச் சட்டம் 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 14 புதிய மாநிலங்களும், மத்திய அரசின் ஆட்சிப் பகுதிகள் 5 ம் உருவாகின.
அப்போதே, ஹைதராபாத் என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டும் என, மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரை அளித்து இருந்தது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை.
1956 ஆம் ஆண்டு மே மாதம், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி இந்திய அரசுடன் இணைந்தது. அதுவும் ஒரு மத்திய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1961 ஆம் ஆண்டு, போர்த்துகல்லின் பிடியில் இருந்து கோவா விடுவிக்கப்பட்டு, இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டு, மும்பை மாகாண அரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மராட்டியம், குஜராத் ஆகிய இரு மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
1963 ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ‘நாகாலாந்து’ பிரிக்கப்பட்டது.
1966 ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தின் கேரோ, காசி மலைப்பகுதிகளைத் தனியாகப் பிரித்து, ‘மேகாலயா’ என்ற புதிய மாநிலம் அமைக்கப்பட்டது. ‘பஞ்சாபி சுபா’ என்ற பஞ்சாப் தனி மாநிலக் கோரிக்கை எழுந்தது. அதே ஆண்டில், பஞ்சாப் பகுதிகளில் இருந்து ஹரியாணா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.
1971 ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தின் மேலும் சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து ஹிமாச்சல் பிரதேஷ், அஸ்ஸாம் மாநிலப் பகுதிகளைப் பிரித்து மணிப்பூர், திரிபுரா ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அத்துடன், சிக்கிம், அருணாச்சல் பிரதேஷ் ஆகிய மத்திய ஆட்சிப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. 1975 ஆம் ஆண்டு, சிக்கிம், தனி மாநிலம் என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டது.
2000 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் நாள், பீகாரில் இருந்து ஜார்கண்ட், உத்தரப் பிரதேசத்தின் மலை மாவட்டங்களைப் பிரித்து உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசத்தைப் பிரித்து சத்தீஷ்கர் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, 2013 ஜூலை மாதம், ஆந்திர மாநிலத்தின் பத்து மாவட்டங்கள், 17 நாடாளுமன்றத் தொகுதிகள், 119 சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக "தெலுங்கானா" உதயமானது.
பிரிவினைக் கோரிக்கைகள்:
உத்தரப் பிரதேச மாநிலத்தை, அவாத், பந்தேல்காண்ட், பூர்வாஞ்சல், மேற்கு மாநிலம் (பஸ்சிம் பிரதேஷ்) என நான்கு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என அன்றைய மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசு, உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மேற்கு மாநிலத்துக்கு, ‘ஹரீத் பிரதேஷ்’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நிலப்பரப்பில் பெரிதாக உள்ள மராட்டிய மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து, ‘விதர்பா’ என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. எனவே, அப்பகுதி மக்களைச் சமாதானப்படுத்த, ஆண்டுதோறும் மராட்டிய மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு கூட்டத் தொடர், விதர்பா பகுதியின் தலைநகரான நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நேபாளி மக்கள் பெரும்பான்மையாக உள்ள "டார்ஜிலிங்" பகுதியின் மூன்று மலை மாவட்டங்களைப் பிரித்து, ‘கூர்க்காலேண்ட்’; அஸ்ஸாம் மாநிலத்தின் "போடோ" இன மக்கள் வசிக்கின்ற பகுதிகளைப் பிரித்து, ‘போடோலாண்ட்’ உள்ளிட்ட பல சிறிய மாநிலங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி - அருணகிரி