தமிழும், தெலுங்கும் ஒன்னு - அறியாதவன் வாயில மண்ணு!
தந்தை பெரியாரைப் பொறுத்தவரை திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், துளு உள்ளிட்டவை அனைத்தும் வட்டார வழக்கு மொழிதானே தவி,ர அதுவும் தமிழ்மொழிதான் என்பார். இம்மொழிகளிலுள்ள சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழி எழுத்துக்களை நீக்கிவிட்டால், தமிழ் எழுத்துக்கள் மட்டுமோ மிஞ்சும் என்பது அவரது ஆணித்தரமான கருத்து. அக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பேராசிரியர் இரா.மதிவாணன் எழுதியுள்ள ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் விவரம் வருமாறு,
தெலுங்கு என்னும் சொல் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு வழக்கில் இல்லை. The words Telugu or Tenugu were never used before 10th century to denote either the language or the people or the country. The word 'Andhra' was used in its place. S. Ramakrishna Sastry-'Annals of Oriental Research'. Madras University, 1952 (p.152) ஆந்திரர் என்னும் சொல்லே அம் மக்களைக் குறித்தது. ஆந்திரர்க்குப் பிராகிருதமே ஆட்சிமொழியாக இருந்தது. வட புலத்துப் பிராகிருதம் பேசிய ஆந்திரர்க்குத் தென்புலத்தார் பேசிய தமிழ் நடுவணிந்தியாவில் திரிபுற்றதால், 'தென்குலு'-தென்மொழியினர் என்னும் பொருளில் தெலுங்கர் புதுப்பெயரிடப்பட்டனர்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை புகழ் பெற்று விளங்கிய ஆந்திர சாதவாகனர் காலத்தில் பிராகிருத இலக்கியங்களே புகழ்பெற்றிருந்தது. தெலுங்கு மொழியின் சுவடே சிறிதும் அறிப்படவில்லை. பிராகிருத இலக்கியங்களில் தெலுங்குச் சொற்களாகச் சுட்டப்படுபவை தமிழ்ச் சொற்களாகவே உள்ளன.
பிராகிருத இலக்கண இலக்கியக் கட்டுக்கோப்பில் தமிழின் தாக்கமே வடமொழித் தாக்கத்தினும் விஞ்சி நின்றது. பிராகிருதப் புலவர்கள் வடமொழியை வல்லொலிமொழி என இகழ்ந்தனர். பிராகிருதம் தமிழைப் போன்றே சமற்கிருதச் சொற்களை மெல்லொலிச் சொற்களாக மாற்றிக்கொள்வதால் பிராகிருதம் பாட்டுமொழி, இன்மொழி எனப்பாராட்டப்பட்டது. கி.பி. முதல் நூற்றாண்டில் ஆளன் என்னும் சாதவாகன மன்னன் எழுநூறு அகப்பாடல்களை 'காதா சப்தசதி' என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தான். இதிலுள்ள பல பாடல்கள் கடைக்கழகத் தமிழ்ப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள் போலவே காணப்படுகின்றன. திணை துறை வகுக்கப்படாமல் வெறும் பாடல்களாக உள்ளன. ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையானர் பாடிய புறநானூற்று 175ஆம் பாடலில் வரும் "என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே" என்னும் வரி ஆந்திர நாட்டு அகநானூறு: 1978 பக் 55) சொற்பிறழாமல் அப்படியே பிராகிருதப் புலவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளது.
சமற்கிருதத்தில் இத்தகைய தனிநிலைப் பாடல்களான அகப்பாடல் வகை இன்மையால் இந்நூலை கோவர்தனாசாரியார் என்பவர் 'ஆரிய சப்தசதி' என்னும் பெயரில் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். இதிலிருந்து தமிழிலக்கண இலக்கியக் கூறுகள் எண்ணிறந்தன பிராகிருதத்திலும் சமற்கிருதத்திலும் கால வெள்ளத்திலும் ஊடுருவிச் சென்றுள்ளன என்பதும், பிராகிருத, சமற்கிருத வல்லுநர்கள் அவ்வுண்மையை மறைத்து வருகின்றனர் என்பதும் வெளிப்படுகிறது. வடபுலத்து ஆரிய அரசன் பிருகத்தனுக்குத் (அசோகனுக்குப் பின் மூன்றாவதாகப் பட்டம் பெற்றவன்) தமிழ் அறிவுறுத்தக் கபிலர் 'குறிஞ்சிப் பாட்டு' இயற்றியதும், வடபுலத்தார் அக்காலத்தில் தமிழை விரும்பிப் படித்ததை உறுதிப்படுத்தும்.
பழந்தமிழில் 'தொன்மை' என்றும். இந்திய மொழிகள் அனைத்திலும் 'சம்பு காவியம்' என்றும் அழைக்கப்படும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் அமைப்பு, தமிழிலிருந்து பிறமொழிகள் பெற்ற கொடை என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. இதனைச் சமற்கிருதத்துக்கோ பிராகிருதத்துக்கோ சொந்தமானதாகக் கூறுவது அறியாமை. ஆரிய மொழிகளும் பிராகிருதம் உருப்பெறாத அறப்பழங்காலத்திலேயே செய்யுளும் உரைநடையும் விரவிவரும் பாங்கு, தமிழ் மொழிக்கே தனியுடைமையாகக் குமரிநாட்டில் தோன்றி, தொல்காப்பியத்தில் எண்வகை வனப்பு (எட்டுக் காப்பிய வகை)களுள் ஒன்றாகத் 'தொன்மை' என்னும் பெயரில் நிலை பெற்றுள்ளது.
"தொன்மை தானே
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே"
என்று தொல்காப்பியர் கூறுகிறார். இத்தகைய வரலாற்றுப் பின்னணி சமற்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகள் எவற்றுக்கும் அறவே இல்லை.
தெலுங்கில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுவரை தமிழுக்கே உரிய சிறப்பு ழகரம் இருந்தது என்பது ஆந்திரநாட்டுக் கல்வெட்டுகளால் புலனாகிறது. யுவான் சுவாங் கோதாவரி யாற்றைக் கடந்ததும் தமிழ் நாட்டைக் கண்டதாகக் கூறுகிறான்; இன்றும் குச்சரம், மராத்தி, இந்தி மொழிகளைப் பேசும் மக்களின் பேச்சுமொழியில் ழகர ஒலிப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். தெலுங்கரில் முற்போக்கு எண்ணமுடைய சிலர் தெலுங்கு எழுத்துகளில் வலியப் புகுத்தப்பட்டிருக்கும் வேண்டாத வட எழுத்துகளில் சிலவற்றையேனும் நீக்கவேண்டும் என்கின்றனர். பங்காரு ஐயா என்னும் தனித்தெலுங்கு அறிஞர், ஆந்திர மண்ணில் தோன்றிய பெருமக்கள் மீது காப்பியம் பாடாமல், பாரத இராமாயண (வட நூற்) காப்பியங்களை என்று தெலுங்கர் பேரிலக்கியமாகக் கொண்டார்களோ அன்றே தெலுங்கின் மேன்மை அழிந்துவிட்டது என்றும், 'தல்லிநுடினி மறசினவாடு சச்சினவாடே' (தாய்மொழியை மறந்தவன் இறந்தவனே) என்றும் தந்நூலில் அவருடைய உள்ளக் கொதிப்பை உருக்கமாக எடுத்துரைக்கிறார்.
தெலுங்குப் புலவர் ஒருவர், தெலுங்கு தனிமொழியென்று நிலைநாட்டத் தமிழினின்றும் வேறான தெலுங்குச் சொற்கள் பலவுள்ளன என்றார். அவ்வாறாயின் அவற்றின் வேர்ப்பொருளை விளக்கி நிறுவுக என்றேன். கோடாலு (மருமகள்), வல்லகாடு (சுடுகாடு), நூன (எண்ணெய்) என்னும் முச்சொற்களைக் குறிப்பிட்டு, கோடாலு என்பதை, கோட (மென்மை)+ஆலு (பெண்) எனப் பிரித்தார். ஏனையவை வேர்ப்பொருளறியாத் தொன்மையான என்றார். கோடாலு என்னும் சொல் விளக்கத்தின்படி, மருமகள் மட்டுந்தான் மென்மையான பெண்ணா? மற்றப் பெண்டிர் மென்மையற்றவரா? என வினவினேன்? அவர் மறுமொழியேதும் சொல்லவில்லை.
அவர் தனித்தெலுங்குச் சொற்களாகக் காட்டும் அனைத்தும் தனித்தமிழ்ச் சொற்களே என்றும், அவற்றுக்குத் தமிழிலன்றித் தெலுங்கில் வேரும் பொருளும் காணமுடியாது என்பதையும் பின்வருமாறு விளக்கிக் காட்டினேன்.
தெலுங்கு = தமிழ்
1. கோடாலு (மருமகள்) கோடல்-பிறர் வீட்டிலிருந்து கொண்ட பெண். கொளல்-கோடல். தமிழ்மக்கள் 'கொள்வினை' 'கொடுப்பினை' என்று பேசுவதைக் காணலாம்.
2. வள்ளகாடு (சுடுகாடு) வெள்காடு-ஆள் இயங்காக் காடு. வெண்களமர் (பிறரைக்கொண்டு வேளாண்மை செய்பவர்), கருங்களமர் (தாமே உழுது உழைப்பவர்) என்னும் சொல்லாட்சிகளில் வெள்- செயற்படாமையைக் குறித்தல் காண்க. இச்சொல் பழங்கன்னடத்திலும் பெள்காடு என வழங்குகிறது. (தமிழில் வெண்காடு / திருவெண்காடு)
3. நூன (எண்ணெய்) நூ+நெய்-நல்லெண்ணெய், நூ=எள். தெலுங்கிலும் எள் நூகுல் எனப்படுகிறது. நோலை-எள்ளுருண்டை.
இவ்விளக்கம் கேட்டு அவர் அகமகிழ்ந்தார். ஆரிய இலக்கண இலக்கியக் கூறுகள் தெலுங்கிலும் விரைந்து புகுத்தப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கண இலக்கியத் தாக்கம் தெலுங்கு கன்னட மலையாள மொழிகளில் ஏற்படாதது தவக்குறைவேயாகும். ஆண்டாள் வரலாறு ஒன்று மட்டும் கிருட்டிணதேவராயரால் தெலுங்கு இலக்கியமாயிற்று.
தெலுங்கு இலக்கண நூலாகிய பால வியாகரணத்தில் ராமுடு, தம்முடு (இராமன், தம்பி) என்னுஞ் சொற்களின் பயைழய வடிவத்திற்கு ராமுடு, தம்முடு என ஆண்பாலீற்று 'ன்' (னகர) மெய் கூறப்பட்டிருந்தும், ஆரியப் புலவர்களால் தெலுங்கில் பண்டேயிருந்த மெய்யெழுத்து வரிசையில் னகர மெய்களையப்பட்டு நகர மெய்யே எல்லா இடத்திலும் ஆளப்படுகிறது. னகர மெய்யீற்றுச் சொற்களுக்குத் தெலுங்கில் 'த்ருதப்ரக்ரதமு' என்று பெயர் உள்ளது. எழுவாய் (முதல் வேற்றுமை) பெயர் தோன்று நிலையாகவே நின்று வேற்றுமை உருபு எதனையும் கொள்ளாது என்பது தொல்காப்பிய நெறி. இதனையே அனைத்துத் திரவிட மொழிகளிலும் கொண்டிருக்க, தெலுங்கில் முதல் முதல் வேற்றுமைக்கு (சமற்கிருத இலக்கணத்தையொட்டி) உருபு கூறப்பட்டிருப்பது திரவிடமொழிக் குடும்பத்துக்கு வடமொழி வெறியர் இழைத்துவரும் கொடுமைகளில் மிகப் பெரிய கொடுமையாகும். ராமுடு, தேவுடு, (இராமன், தேவன்) என வரும் சொற்களில் 'டு' முதல் வேற்றுமை உருபாம். அல்லமு (இஞ்சி) என்பதில் 'மு' முதல் வேற்றுமை உருபாம். கோட (சுவர்) என்னும் சொல்லுக்கு கோடமு என ஏன் முதல் வேற்றுமை உருபு 'மு' வரவில்லை என்று கேட்டால் தக்க மறுமொழி சொல்வாரில்லை.
தெலுங்குச் சொற்களில் பத்து விழுக்காட்டுச் சொற்களுக்கு மட்டும் பெயரீற்றில் 'டு' ஈறும் ஐந்து விழுக்காட்டுச் சொற்களுக்கு மட்டும் 'மு' ஈறும் உள்ளன. எஞ்சிய 85% சொற்கள் எழுவாயாகும் நிலையில், ஈறு எதுவும் பெறாத நிலையில், தெலுங்கில் எழுவாய் பெற்றமைக்குச் சமற்கிருதம் போல் உருபு உண்டு என்பது மிகத் தவறான செய்தி என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.
சமற்கிருதத்தில் மேலாண்மையை வலுப்படுத்தவும், மாநில மொழிகளின் தனித்தன்மையைச் சீரழிக்கவும் இலக்கணம் வகுக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டால், அந்த இலக்கண முறையைத் தாய்மொழியினர் உண்மையுணர்ந்து உதறித்தள்ளிவிடுவர். ஏனைத் திரவிடமொழியினர் உணர்வும் தெளிவும் பெறும் காலம் தொலைவிலில்லை.
நன்றி:பேரா.மதிவாணன்