பாஞ்சாலங்குறிச்சி போர்கள் நூலை வெளியிடுகிறார் மேதகு ஆளுநர்!
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரும், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட முதல் பாளையக்காரருமான வீரபாண்டியகட்டபொம்மனாரின் விடுதலைப்போராட்ட வரலாற்றை முழுமையாக உள்ளடக்கிய "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12.11.2024) மாலை கிண்டி ராஜ்பவனில் நடைபெறவுள்ளது. இதன் விவரம் வருமாறு,
கட்டபொம்மன் பதிப்பகம் சார்பில், பாஞ்சைப்போர்முழக்கம் ஆசிரியர் பி.செந்தில்குமார் அவர்கள் தொகுத்து வெளியிடும் "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" என்ற நூல் தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்களால், கிண்டி ராஜ்பவன் வளாகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (12.11.2024) மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இந்நூல், கட்டபொம்மன் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் போலி தமிழ்தேசியவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இதுவரை வெளிவராத ஆவணங்களையும், தகவல்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு இந்நூல் வெளியாகிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ளவை குறித்து நூலாசிரியர் வெளியிட்டுள்ள செய்தியில், "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" என்ற பெயரில் தமிழிலும், "The Battles Of Panchalankurichi" என்ற பெயரில் ஆங்கிலத்திலும், "पंचालंकुरिची की लड़ाई" என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியாகிறது. மேலும் இப்புத்தகத்தில்,
1857-சிப்பாய் கலகத்திற்கு அரைநூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் இந்திய விடுதலைப் போராட்டத்தை துவக்கி வைத்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டியக் கட்டபொம்மனாரின் விடுதலைப் போராட்ட உணர்வுகளை முழுமையாக படம்பிடித்துக்காட்டும் வகையில், ஏராளமான ஆவணங்களோடு ஆய்வுப் புத்தகமாக இந்நூல் வெளியாகிறது.
1792-ம் ஆண்டு முதல் 1801-ம் ஆண்டு வரை பாஞ்சாலங்குறிச்சி பற்றியும், அதன் தலைவர் கட்டபொம்ம நாயக்கர் பற்றியும், கிழக்கிந்தியக் கம்பெனி இராணுவ அதிகாரிகள் எழுதி வைத்த கடிதக் குறிப்புகளின் மூலம் (Circumstantial Evidence - சூழ்நிலைச் சான்றாதாரங்கள்) சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து வெளிவரக் கூடிய புத்தகம்.
654 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், 53 இராணுவ அதிகாரிகள், மற்றும் கலெக்டர்களால் எழுதப்பட்ட 190 கடிதங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மார்னிங்டன் எழுதிய கடிதங்களும் அடங்கும். மேலும், பின்னாளில் இங்கிலாந்து பிரதமரான ஆர்த்தர் வெல்லெஸ்லி எழுதிய கடிதங்கள், இராபர்ட் கிளைவ் மகன் எட்வர்ட் கிளைவ் கட்டபொம்மனை தூக்கில் போடுவதற்காக முன்முடிவு எடுத்து எழுதிய கடிதங்கள், மேஜர் பானர்மேனின் கட்டபொம்மன் தூக்குத்தண்டனை விசாரணைக் குறிப்புகள் (17-10-1799) உட்பட 60 ஆய்வுக் கட்டுரைகள், 75 - களஆய்வுப் புகைப்படங்கள், பக்கிங்காம் அரண்மனையில் இடம் பெற்றிருக்கிற "இராயல் கலெக்சன் டிரஸ்டில்" கட்டபொம்மனின் வாள் சம்மந்தமாக மின்னஞ்சல் மூலம் உறுதி படுத்தப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
கட்டபொம்மனோடு போரில் பங்கேற்ற கர்னல் வெல்ஷின் இராணுவ நினைவுகள் 1830-ல் லண்டனில் வெளியிடப்பட்டது.1803-ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது பாஞ்சாலங்குறிச்சி பற்றி தங்கள் கருத்தை பதிவு செய்த பயணக் கட்டுரை மற்றும் 1876-ல் VII எட்வர்டு பிரபுவின் பயணக் கட்டுரைகளோடு, திருவாடுதுறை ஆதீனம் செப்பேடு, திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவில் செப்பேடு, 1801-ம் ஆண்டு ஊமைத்துரை மறைவிற்கு பிறகு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்த விபரங்கள் போன்ற எண்ணற்ற சூழ்நிலைச் சான்றுகளோடு "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.