சிறுபான்மை சாதிகளின் அரசியலைப் பேசுவாரா? நடிகர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கி, இந்திய அரசியலின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்டோபர் திங்கள் 27-ஆம் நாள் விக்ரவாண்டி வி.சாலையில் மிகப்பிரமாண்டமான ஒரு மாநாட்டை நடத்தி, இயக்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும், அரசியல் வழிகாட்டிகளையும் அறிவித்து, அரசியல் அரங்கில் வெற்றிநடை போடத்துவங்கியிருக்கும் தவெக-வின் நிறுவன தலைவர் திருமிகு விஜய் அவர்களுக்கு, தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தாரின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ முன்னாள் முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெரும் செல்வந்தர்கள், கல்வித் தந்தைகள் மட்டுமல்ல திரைப்பட நடிகர்ளும் அரசியல் இயக்கங்களை கட்டியமைத்ததை இந்தநாடும், நாட்டு மக்களும் பார்த்துள்ளார்கள். எத்தனைபேர் கட்சி துவங்கினாலும், தங்களின் மனதுக்கு நெருக்கமானவர்கள் கட்சி தொடங்கும்போது மட்டுமே இவர் நிச்சயம் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையோ அல்லது வெற்றி பெற்றுவிடமாட்டாரா? என்று ஏங்குவதையோ பார்ப்பதுண்டு. அந்தவகையில் தவெக-வும் மக்களின் மனங்களுக்கு குறிப்பாக இளைஞர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாகியுள்ளது இயக்கத்தின் முதல் வெற்றி.
இப்போதுதானே குழந்தை பிறந்துள்ளது, தாய் மடியின் கதகதப்பில் கொஞ்சநாள் இருந்துதானே நடைபயிலத்துவங்கும் என்று எண்ணியிருக்கையில், ஒரேவாரத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்தி, புலிப்பாய்ச்சல் காட்டத்தொடங்கியுள்ளது யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். அதுவும் முத்தான 26 தீர்மானங்களை இயற்றி, தவெக-வின் திசைவழிப்பாதையைக் கோடிட்டுக்காட்டியுள்ளது, தங்களால் வேகமாக மட்டுமல்ல, விவேகமாகவும் செயல்படத்தெரியும் என்பதை அரசியல் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
இந்திய தேசியத்தில் தமிழக அரசியல் களம் முற்றிலும் வேறுபாடானது. சித்தாந்தமில்லாமல் வெறும் சினிமா கவர்ச்சியை வைத்தோ, அதிகாரத்தின் துணைகொண்டோ மக்களின் மனங்களை வெல்லமுடியாது என்பதை 70 ஆண்டுகால வரலாறு நிரூபித்துள்ளது. தம்பி, உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தங்களே என்ற மக்களின் இதயத்திற்கு நெருக்கமான வாசகங்களுக்கு இருந்த வலிமை, தலைமுறை தாண்டியும் மக்களிடம் ஊடுறுவியுள்ளதை பார்க்கமுடிகிறது. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் "மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்" தமிழகத்தின் தேவைகளில், இன்றியமையாத தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது, மக்களின் மனவோட்டைத்தை எதிரொலிப்பதாக உள்ளது. தவெக-வை 'ஜஸ்ட் லைக் தட்' என போகிற போக்கில் ஒதுக்கிவிட முடியாதபடி செழுமையான தீர்மானங்கள் அறிவார்ந்த ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி, எதிர்க்கட்சிகளுக்கு வரும் 2026 தேர்தல் ஒரு "நாக் அவுட் சுற்று". கொள்கை சார்ந்து தவெக தனது பயணத்தைத் தொடருமேயானால் முரட்டு தேசியவாதிகளும், போலி தமிழ் தேசியவாதிகளும் களத்தை இழக்க அதிக நாட்கள் இல்லை.
நிற்க. தமிழக வெற்றிக் கழகம் "மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்" ஐ முன்னெடுப்பதாக அறிவித்திருப்பது திராவிடத்தின் பாதையே என்றாலும், சமூகநீதிக்கொள்கைகளை வெறும் கல்வி, வேலைவாய்ப்புகளில் மட்டுமே செயல்படுத்திய திராவிட இயக்கங்கள், அரசியலில் பெரும்பான்மையை மையப்படுத்தியே இயங்கி வருகின்றன. தேர்தல் அரசியலில் பெரும்பான்மை சார்ந்தது என்றாலும் சிறுபான்மை மதத்தினருக்கான அரசியல் இருப்பதுபோல், சிறுபான்மை சாதிகளுக்கான அரசியலும் பேசப்படவேண்டும். முற்பட்டோர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் பிரிவினர் என அனைத்து பிரிவிலும் அரசியல் அதிகார வாய்ப்பற்ற சாதிகள் ஏராளம். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கான காரணங்களையாவது புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தலைமையால் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் கூட சாதிசார்பற்ற சமூகநீதியை நிலைநாட்ட எந்த திராவிட இயக்கமும் இதுவரை முயற்சிக்கவில்லை என்பது வருத்தத்திற்குறியது. தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தும் "திராவிட மாடல் அரசியல்" என்பது நான்கைந்து பெரும்பான்மை சாதிகளின் கைப்பாவையாகவே உள்ளது.
எனவே, தவெக "மதச்சார்பற்ற" என்ற வழக்கமான "திராவிட மாடல்" அரசியலோடு நின்றுவிடாமல், எளிய சாதிகளுக்கும் ஏற்றமளிக்கும் அரசியலையும் சேர்த்தே முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களைப்போன்ற அரசியல் அதிகார வாய்ப்பற்ற சாதிகளின் எதிர்பார்ப்பு.
உங்களது முதல் மாநாட்டில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப்படம் முதல் எண்ணற்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் சமூகங்கள் எண்ணிக்கை, பொருளாதார பலம் இல்லாத காரணத்தால் பல்லாண்டுகளாக மேய்க்கப்படுவோராக மட்டுமே இருந்துவருகிறோம் என்பதை தமிழக வெற்றிக் கழகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
யாரும் தொடாத / தொட அஞ்சிய இந்த வெற்றிடம் தங்களைப்போன்ற பிரபலமான நபர்களால் மட்டுமே கவனம் பெறும் என்று என்று தீர்மானமாக நம்புகிறோம். பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்ததோடு நிற்காமல், குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பதற்கு சத்துணவு திட்டத்தைக் கொண்டுவந்ததுபோல், அதிகாரமற்ற சாதிகளை அரசியல் மயப்படுத்த கட்சி அமைப்புகளில் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்த சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.
இதேபோல் வாய்ப்பற்ற சாதிகளின் எண்ணிக்கைக்கு இணையாக சீர்மரபு பழங்குடி வகுப்பினர் தமிழகம் முழுவதும் விரவியுள்ளனர். இம்மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தமிழக அரசியலில் போதிய கவனம் பெறாமல் இருந்து வருகிறது. சாதிச்சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடிகள், தெளிவற்ற கொள்கையாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும், அரசின் உத்தரவில் சிறு திருத்தங்களைக்கூட செய்யமுடியாத அவலநிலை நீடித்து வருகிறது.
எனவே, அரசியலில் புதியபயணத்தைத் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது கொள்கைப்பிரகடனம் வாய்ப்பற்ற சாதிகளின் எண்ணங்களையும் எதிரொலிப்பதாக இருக்க வேண்டும், அவர்களின் அரசியல் களத்தில் பேசப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.