உலகத்திற்கு வெளிச்சம் தந்த படிக்காத மேதை!
1830-ஆவது ஆண்டு வரை இந்த உலகம் இருட்டில்தான் இருந்திருக்கும். இங்கிலாந்திலே பிறந்த மைக்கேல் பாரடே என்கிற ஒரு மாமனிதன் 1831-இல் மின்சாரம் என்கிற ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் இன்னமும் இந்த உலகம் இருட்டில்தான் இருந்திருக்கும். அதற்கு முன்பும் பல்வேறு விஞ்ஞானிகள் அந்த முயற்சிகளிலே ஈடுபட்டார்கள். ஆனாலும் மின்னியல் யுகம் அப்போதுதான் தொடங்கிற்று. யுகங்களைப் பிரிப்பதென்றால் புராணிகர்கள் கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்காகப் பிரிப்பார்கள். ஆனால் அறிவியல் அடிப்படையிலே பிரிப்பது என்று சொன்னால், வேளாண்மை யுகம், அதைத் தொடர்ந்து தொழில் துறையுகம், மின்னியல் யுகம். பிறகு மின்னணுவியல் யுகம், இன்றைக்கு அணுயுகம் என்று ஐந்தாக அதைப் பிரிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கிற அணு யுகத்திற்கும் முந்திய மின்னணுவியல் யுகத்துக்கும்கூட இந்த மின்னியல் யுகம்தான் அடிப்படை. மின்சாரம் என்கிற ஒன்று, இந்த உலகத்தின் முகத்தை முற்றிலும் மாற்றிப்போட்டு விட்டது என்று சொல்லவேண்டும்.
19-ஆம் நூற்றாண்டினுடைய மையப்பகுதியிலே மின்சாரம் கண்டறியப்பட்டாலும், ஏறத்தாற 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேதான் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வந்து சேர்ந்தது. 1831-இல் மின்சாரத்தினுடைய ஒரு கண்டறிதலை மைக்கேல் பாரடேயும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு எர்னஸ்ட் வெர்னர் வான் சீமென்ஸ் என்கிற பிரஷ்ய விஞ்ஞானி மின்சாரத்தை உற்பத்தி செய்கிற கருவியையும் கண்டுபிடித்தார்கள். அதற்கும் 23 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தார். மின்சாரம், மின்சாரத்தை உற்பத்தி செய்கிற கருவி, மின்சாரத்தால் பயன்படுகிற பொருள்கள் என்று அந்த மூன்று நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துசேர ஏறத்தாற 50 ஆண்டுகளாயிற்று, பிறகு நடை முறைக்கு வருவதற்கு இன்னொரு கால் நூற்றாண்டாயிற்று. இதுதான் மின்சாரத்தினுடைய கதை. மைக்கேல் பாரடேயின் கதையையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.
மைக்கேல் பாரடே இங்கிலாந்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். 14 வயதிற்குமேல் அவரைப் படிக்க வைக்க முடியவில்லை. குடும்ப வறுமை காரணமாக இதற்குமேல் அவரால் பள்ளிக் கூடத்திற்குப் போக இயலவில்லை. இந்த இடத்திலே நாம் இன்னொரு செய்தியை விளங்கிக் கொள்ளவேண்டும். மிகப் பல புகழ்பெற்ற அறிவாளிகள், அறிஞர்கள் பள்ளிக்கூடம் போகாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு அறிஞர் ஆகவேண்டும் என்றால் பள்ளிக்கூடத்துக்குப் போகக்கூடாது என்ற பொதுக் கருத்துக்கு யாரும் வந்துவிடக்கூடாது. அவர்கள் விதி விலக்குகள்தான், ஆனாலும் என்னவோ தெரியவில்லை, விதி விலக்குகள்தான் பல விஞ்ஞான நுட்பங்களை, அறிவியல் செய்திகளை இந்த உலகுக்குத் தந்திருக்கிறார்கள்.
அவர்களிலே ஒருவர்தான் மைக்கேல் பாரடே. 14-ஆம் வயதோடு படிப்பு முடிந்து போய்விட்டது. புத்தகங்களை எல்லாம் கட்டுமானம் செய்து (பைண்டிங் செய்து) விலைக்குக் கொண்டுபோய்த் தெருக்களில் விற்கிற ஒரு வேலை அவருக்கு வாய்த்தது. மிகப்பெரிய செய்திப் புத்தகங்களை விலைக்கு விற்பதுதான் அந்தப் பையனின் வேலை. ஆனால் விற்பனைக்கு முன்பு முடிந்தவரை படித்துவிட்டுதான் விற்பனை செய்தான் என்பதுதான் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி.
பேராசிரியப் பெருமக்கள்கூட, படிக்க நேரமில்லை என்று சொல்லுகிற கால கட்டத்தில், புத்தகங்களைக் கட்டுமானம் செய்து தெருக்களிலே கூவி விற்ற பையன் பெரும்பான்மையான புத்தகங்களைப் படித்துவிட்டு விற்பனை செய்கிறான் என்பதும், அதிலும் அவன் தேடித்தேடி படித்த புத்தகங்கள் எல்லாம் அறிவியல் புத்தகங்களாக இருந்தன என்பதும் ஒரு வியப்பான செய்திதான்.
அப்படி அறிவியல் நூல்களைப் படித்தபோதும், அதற்குப் பிறகு சில அறிவியல் சொற்பொழிவுகளைக் கேட்டபோதும், அம்சட்டேவி என்கிற ஒரு பெரிய விஞ்ஞானியினுடைய பேச்சுகளாலும், எழுத்துகளாலும் அந்தச் சிறுவன் கவரப்பட்டான். ஒருநாள் அம்சட்டேவிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். நான் உங்களினுடைய எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். உங்களுடைய விஞ்ஞான கட்டுரைகளின் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது. உங்களுடைய சோதனைச்சாலையில் என்னை ஒரு எடுபிடியாக வைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டு ஒரு கடிதம் எழுதுகிறான். அவன் எதிர்பார்க்கவில்லை. அம்சட்டேவியிடமிருந்து அழைப்பு வருகிறது. எடுபடியாக அல்ல. வா! சோதனைச்சாலையில் என் கூடவே இரு, உதவியாளராய் இரு, இத்தனை ஆர்வமுள்ள ஒரு பையன்தான் விஞ்ஞானத்துறைக்குத் தேவைப்படுகிறான் வா என்று டேவியிடமிருந்து வந்த அழைப்பு மைக்கேல் பாரடேக்கு வந்த அழைப்பன்று. இந்த உலகத்தினுடைய மாற்றத்துக்கு, இந்த உலகத்தினுடைய முகம் புதிய பொலிவை பெறுவதற்கு வந்த அழைப்பு என்றுதான் நாம் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த டேவியினுடைய சோதனைச் சாலையிலே பணியாற்றுகிற, புதிய செய்திகளையெல்லாம் கண்டுபிடிக்கிற ஒரு பெரிய வாய்ப்பு மைக்கேல் பாரடேக்கு வந்தது. அவன் பல்வேறு விதமான சோதனைகளைச் செய்தான். குறிப்பாக மின்சாரம், காந்தம் என்ற இரண்டு துறைகளிலேதான் அவனுடைய ஆர்வம் இருந்தது. மின்சாரம் என்கிற ஒன்றை, அது எப்படி வருகிறது, அதனுடைய விளைவுகள் என்ன என்பதிலே மிகவும் கவனமாக இருந்தான். எங்காவது ஒன்றைத் தொடுகிறபோது ஷாக் அடிக்கிறது என்று சொல்கிறோமே அங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்தான். அந்த ஏதோ ஒன்றைக் கம்பியின் மூலமாக அனுப்புகிறபோது, பக்கத்திலே இருக்கிற அந்தத் திசைக் காட்டிக் காந்தம் திரும்பி விடுகிறது. பிறகு தொடர்ந்து கவனித்து ஏதோ ஒன்று ஒரு கம்பியிலே வருகிறது.
உடனே இங்கே இருக்கிற காந்த திசைக்காட்டி திரும்புகிறது என்பதைக் கண்டறிந்தான். இப்போது அவன் மாற்றி ஒன்றைச் செய்து பார்க்கிறான். காந்தத்திசை காட்டியை இறுக்கமாக கட்டிவிட்டு, இப்போது அந்த மின்சாரம் அந்த கம்பியிலே வருகிறபோது, என்ன ஆகிறது என்று பார்த்தால், இந்தத் திசைகாட்டி அசையாத காரணத்தினாலே, அந்தக் கம்பிகள் அதிர்கின்றன. ஓ! காந்தத்தின் மூலமாகவும் மின்சாரத்தை இயக்க முடியும் என்கிற காந்தத் தூண்டல் என்ற இன்றைய இயற்பியல் உண்மையை அன்றே அவன் கண்டறிந்தான். பாரடேயின் விதிகள் அங்கே தான் முதலில் தோன்றின. இதுதான் அவனுடைய முதல் அறிவியல் செய்தி.
இது 1820களிலே, அங்கே இருந்துதான் மிகத் துல்லியமாக 1831-ஆவது ஆண்டு இந்த மின்சாரம் குறித்து மின்னியல் குறித்து இது எப்படி வந்து பாய்கிறது என்பது குறித்து, எல்லாச் செய்திகளையும் பாரடே தன்னுடைய விதிகளை வெளியிட்டான். அதைத்தான் உலகம் இன்றைக்கும் பாரடேயின் விதி என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு மேலும் பல ஆய்வுகளிலே ஈடுபட்டான். அவனுடைய ஆய்வுகள் எல்லாம் மின்சாரமும், காந்தமும் தொடர்புடையது. எலக்ட்ரோ மேக்னட் என்கிற துறையில் அவன்தான் தந்தை என்று சொல்லவேண்டும். வாயு (கேஸ்) என்று சொல்லுகிறோமே அதை எப்படித் திரவம் ஆக்குவது என்கிற முயற்சியிலேயும், எலக்ட்ரானிக்ஸ் என்று சொல்கிற அந்த முறையிலேயும் பாரடே புதிய பல ஆய்வுகளையெல்லாம் இந்த உலகுக்குத் தந்தான். ஆகையினாலே வெறும் படிப்பறிவற்ற சிறுவனாக இருந்தும் விஞ்ஞானத்துறையிலே மிகுந்த ஆர்வம் உடையவனாக இருந்த காரணத்தினாலே புதிய கண்டுபிடிப்புகளிலே மட்டுமல்லாமல், உலகத்தையே மிகத் தெளிவாகப் புரட்டிப் போட்டான் என்றுகூடச் சொல்லலாம்.
மின்னியலிலே அவன் கண்டுபிடித்த ஆய்வுகள், அதனைத் தொடர்ந்து பலரும் கொண்டு வந்த ஆய்வுகள் இன்றைக்கும் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன எனும்போது மைக்கேல் பாரடேயை இந்த உலகம் மறக்கக்கூடாது அல்லவா?
ஒன்றே சொல்! நன்றே சொல்! நூலிலிருந்தது பேரா.சுபவீ.