அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளராக மு.எம்.எல்.ஏ திரு.ஆர்.வரதராஜன் நியமனம்!
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளராக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. ஆர்.வரதராஜன் அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திரு. க.பழனிச்சாமி அவர்கள். இதன் விவரம் வருமாறு,
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக-வில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தொகுதிவாரியாக கட்சிப்பணிகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இக்குழு தற்போது மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தி வருகிறது.
அதேவேளையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு ஏதுவாக அக்கட்சியின் விதிகளின்படி உரிய பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக கட்சிக்குள் இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது அக்கோரிக்கை அதிமுக பொதுச்செயலாளர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிப்பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் விருதுநகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆர்.வரதராஜன் அவர்கள் அகில உலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளராக நியமனச் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே அக்கட்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்து வரும் நிலையில். தற்போது அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு இப்புதிய பொறுப்பு வரதராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அக்கட்சியில் இதேபொறுப்பில் நகரமன்ற முன்னாள் தலைவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. க.கலாநிதி அவர்கள் பணியாற்றி வருகிறார். திரு.ஆர்.வரதராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பின் மூலம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் அந்தஸ்தைப்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.ஆர்.வரதராஜன் அவர்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநில அந்தஸ்த்திலுள்ள கட்சிப் பொறுப்புக்கு இராஜகம்பள சமுதாய தலைவரை நியமித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திரு.க.பழனிச்சாமி அவர்களுக்கு தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.