தளி எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் – தமிழக அரசுக்கு பாராட்டுவிழா!
தளி எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபமும், ஆளுயர சிலையும் நிறுவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் பாராட்டு விழா இன்று பிற்பகல் உடுமலை நகரில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக அரசு சார்பில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கம்பளத்தாரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கின்றனர். இப்பாராட்டுவிழாவில் பல்வேறு தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தமிழக அரசைப் பாராட்டுகின்றனர். இதன் விவரம் பின்வருமாறு,
2021-சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட அன்றைய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. அதில் வரிசை எண் 455-இல் இடம்பெற்றிருந்த வாக்குறுதிப்படி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தது.
சட்டமன்றத்தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதில் மிகுந்த முனைப்புக்காட்டி வந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர், மாவீரன் கட்டபொம்மனுக்கு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் முழுவுருவச்சிலை அமைக்கும் அறிவிப்பினை வெளியிட்டார். இப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற்று தமிழக முதல்வரின் பொற்கரங்களால் திறந்துவைக்கப்பட்டது. இதன் மூலம் கம்பளத்தாரின் அரைநூற்றாண்டு காலக்கனவை திமுக அரசு நிறைவேறியது.
இந்நிலையில், தளி பாளையத்தை ஆட்சி செய்து ஆங்கில அதிகாரியைத் தூக்கிலிட்ட எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டம் அமைத்துத்தரக்கோரி பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனையடுத்து தளி எத்திலப்பருக்கு மணிமண்டபமும், ஆளுயரச்சிலையும் நிறுவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கி அறிவிப்புச் செய்தார். வெறும் அறிப்போடு நிற்காமல் உடனடியாக அதற்கான நிதியை ஒதுக்கியதோடு, மணிமண்டபம் அமைக்கும் வேலையும் உடனடியாகத் தொடங்கியது தமிழக அரசு.
தளி எத்திலப்ப நாயக்கர் மணிமண்டப பணிகளையும், சிலை வடிவமைக்கும் பணியையும் தமிழக அமைச்சர் சாமிநாதன் அவர்களும், பண்பாட்டுக்கழக பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் அவர்களும் தொடர்ந்து கண்காணித்து பணியைத் துரிதப்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முழுப்பணிகளும் உரிய காலத்தில் நிறைவுபெற்று, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் அடையாளங்களாகவும், விடுதலைப்போராட்ட தியாகிகளாகவும் போற்றப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன், தளி எத்திலப்ப நாயக்கர் ஆகியோருக்கு தமிழக அரசு செய்த மரியாதையால் இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டையில் பாராட்டு விழா இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கம்பளத்தாரின் பாராட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
இவ்விழாவில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் தமிழக அரசை பாராட்டிப் பேசுகின்றனர். பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை த.வீ.க.பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.