🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பூச்சிகளை அழிப்பதால் ஆண்டுக்கு 5 லட்சம் மனிதர்களை இழந்து வருகிறோம் என்பது தெரியுமா?

உணவுப் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளின்(தேனீக்கள், எறும்புகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகள்) அழிவால், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஐந்து இலட்சம் மனிதர்கள் அகால மரணமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் காய், கனி போன்ற ஆரோக்கியமான உணவுகளின் விளைச்சல் குறைகிறது. இதனால் மனிதர்கள் அதிகம் நோய்வாய்ப்படுகின்றனர். உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் முக்கால் வீதம் பூச்சிகளின் மகரந்த சேர்க்கையை நம்பியே இருக்கிறது. ஆனால் இந்த வகைப் பூச்சியினங்கள் இன்று அழிந்து வருகின்றன.

போதிய அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாததால் 3 முதல் 5% காய்கள், கனிகள் மற்றும் கொட்டைவகை உணவுகளின் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால் குறைவான உணவு நுகர்வு, பூமியில் ஏற்படும் ஒட்டுமொத்த மரணங்களில் ஒரு சதவிகிதத்திற்குக் காரணமாகிறது. இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய், சில வகை புற்றுநோய்கள் போன்ற உயிர் பறிக்கும் நோய்கள் சத்துள்ள உணவுகளின் நுகர்வின் மூலம் முற்றிலும் தடுக்கப்படக் கூடியவை.

நன்மை செய்யும் பூச்சிகளுக்கும், ஆரோக்கியத்தை இழப்பதால் நிகழும் மனித மரணங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவே. இந்த ஆய்வுகள் உலகம் முழுவதும் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயப் பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள், விளைச்சல் பற்றிய தகவல்கள் மற்றும் உணவு தொடர்பான ஆரோக்கியப் பிரச்சனைகள், உலக உணவு விநியோகம் பற்றிய கணினி மாதிரி ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது.

உயிர்ப் பன்மயத்தன்மை பற்றிய சர்வதேச அரங்குகளில் உயிர்ப் பன்மயத்தன்மையின் இழப்பிற்கும், மனித உடல் நலத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுவதில்லை என்று ஹார்வோர்டு பல்கலைக்கழக டி ஹெச் சான் (TH Chan) பொது சுகாதாரப்பள்ளி விஞ்ஞானி மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரியர் டாக்டர் சாமுவெல் மயர்ஸ் (Dr Samuel Myers) கூறுகிறார்.

ஏற்கனவே இருந்து வரும் ஆரோக்கியப் பிரச்சனைகளுடன் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், சத்துப் பொருட்கள் குறைவினால் உருவாகும் உடல் மற்றும் மனநலக் கோளாறுகள் அதிகரிக்கின்றன. என்றாலும் இதற்குத் தீர்வு மனிதர்களாகிய நம் கையில் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நன்மை செய்யும் பூச்சிகளுக்கு நட்புடைய ரீதியில் பயிர் வளர்ப்பு, வயல்களில் பூ பூக்கும் தாவரங்களை அதிகம் வளர்ப்பது, நியோநிக்கோட்டினாய்ட்ஸ் (Neonicotinoids) போன்ற களைக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்தல், வயல்களுக்கு அருகில் இருக்கும் இயற்கை வாழிடங்களைப் பாதுகாத்தல் அல்லது மீட்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை மீண்டும் வயல்களுக்கு வரவழைக்கலாம். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வயல்களில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. விளைச்சல் அதிகரித்ததால் பொருளாதாரம் மேம்பாடு அடைந்தது.

சூழல் சுகாதாரம் (Environment Health Prospective) என்ற ஆய்விதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பல பூச்சியினங்கள் பற்றிய விவரங்கள் ஆராயப்பட்டது. அதிக மற்றும் குறைந்த விளைச்சலுக்கு இடையே உள்ள வித்தியாசத்தில் கால் பகுதிக்கு போதிய மகரந்தச் சேர்க்கையின்மையே காரணம் என்பது தெரிந்தது. பூச்சிகள் குறைவாக இருக்கும் இடங்களில் குறைவான விளைச்சல் ஏற்படுவது தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.

உலகளவில் பழ உற்பத்தியில் 4.7%, காய்கறி உற்பத்தியில் 3.2%, கொட்டைகள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் உற்பத்தியில் 4.7% குறைவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மக்களின் உணவு நுகர்வில் இந்தக் குறைவு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மதிப்பிடப்பட்டது. பழங்கள், காய்கறிகள், இருவித்திலை தாவர உணவுப் பொருட்கள், கொட்டைகள் ஆகியவை மக்களின் உடல் நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், இதன் மூலம் தோன்றும் அகால மரணங்கள் பற்றி ஆராயப்பட்டது.

நடுத்தர வருமானம் உள்ள சீனா, இந்தியா, இரஷ்யா, இந்தோனேஷியா போன்ற நாடுகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சத்துணவு குறைவு, புகை பிடித்தல், குறைவான உடற்பயிற்சியால் ஏற்படும் இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய்கள் போன்றவை அதிகம் உள்ள இந்நாடுகளில் இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

பணக்கார நாடுகளில் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைவதால் விலைவாசி உயர்ந்தாலும் மக்கள் சத்துள்ள உணவுகளை வாங்கி உண்கின்றனர். ஆனால் அங்கும் வருமானம் குறைவாக இருக்கும் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் குறிப்பிட்ட ஒரு நாட்டில் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் அந்நாட்டில் மட்டும் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ஆனால் அந்நாடுகள் மற்ற நாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்து நிலைமையைச் சமாளித்தன. இப்போது இது உலகளாவிய ஒன்றாக மாறியுள்ளது.

பெருமளவில் நன்மை செய்யும் பூச்சிகள் மறைந்ததால் வருமானம் குறைந்த நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் வைட்டமின் ஏ, ஃபாலேட்டுகள் (Folates) போன்ற நுண் சத்துகளின் குறைவு மற்றும் விவசாயிகளுக்கு இதனால் ஏற்படும் இழப்பு பற்றி ஆராயவில்லை.

காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் நெல், கோதுமை, சோளம், பார்லி போன்ற கார்போஹைடிரேட் அதிகமுள்ள, மற்ற சத்துகள் குறைவாக உள்ள பயிர்களையே உலக மக்கள் அதிகம் உண்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் உடற்பருமன் , சர்க்கரை நோய் அதிகமாகிறது. மகரந்த சேர்க்கை அவசியமாக நடைபெற வேண்டிய ஆப்பிள், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி போன்ற காய், பழ வகைத் தாவரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை நாம் அதிகம் உண்பதில்லை.

பயிருக்கு தீங்கு செய்யும் களைகளை அழிக்க உதவும் மற்ற பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதாலும் விளைச்சல் பாதிக்கிறது. மோசமான உடல்நிலை, அதனால் ஏற்படும் வேலையிழப்பு, சத்துணவுக் குறைவினால் ஏற்படும் உடல் ஊனங்கள் போன்றவை பொருளாதாரத்திலும், சுகாதார சேவைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலக மக்கத்டொகை 10 பில்லியன் தொடும்போது வருங்காலத்தில் பூச்சிகள் அழிவினால் ஏற்படும் பயிர் உற்பத்தி பாதிப்பு இன்றுள்ளதைவிட பல மடங்கு மோசமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஒவ்வொரு இயற்கை சூழலையும் மனிதன் மாற்றியமைக்கிறான். இதன் பலன்களை இன்றே அனுபவித்துக் கொண்டிருக்கிறான். கார்பன் டை ஆக்சைடின் உயர்வினால் உணவுப் பொருட்களில் சத்துகள் குறைவதை முந்தைய ஆய்வு முடிவுகள் கூறின. இந்நிலையில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நாளை உண்ண உணவில்லாமல் மனித குலம் அழிய வேண்டி நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

நன்றி: சிதம்பரம் இரவிச்சந்திரன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved