அதிகரிக்கும் புற்றுநோய் ஆபத்து - வரும் முன் தடுப்பது எப்படி?
புற்று நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுவதுமாக குணப்படுத்த முடியும் என்பது மருத்துவ அறிவியலின் கூற்றாக இருக்கிறது.
புற்று நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியுமா?
புற்று நோய் என்பது குறிப்பிட்ட இடத்தில் செல்கள் கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகுவதும், அளவில் பெரிதாவதும், வளர்சிதை மாற்றத்தில் தீவிரத் தன்மை கொண்டிருப்பதும், புற்றுக் கட்டியாக உருமாறுவதும், இன்னும் வளர்ச்சி அடைய உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதும் என இருக்கும்.
சில காலம் பொருத்து தான் முதலில் இருந்த உறுப்பு அல்லது இடத்தை விட்டும் அருகில் உள்ள இடங்களை ஆக்கிரமிக்கும் .இன்னும் சில காலத்தில் புற்று செல்கள் உடைந்து ரத்தத்தில் கலந்து தூரத்து உறுப்புகளையும் சென்றடைந்து ஆங்காங்கே புற்று கட்டிகளை உருவாக்கிக் கொள்ளும்.
மேற்கூறியவற்றில் குறிப்பிட்ட உறுப்பில் இருந்து நீண்ட தூரப் பரவலுக்கு உள்ளாகாமல் இருக்கும் கட்டிகள் ஆரம்ப நிலை கட்டிகள் ஆகும். இவற்றைக் கண்டறிய வயதுவாரியாக முன்கூட்டிய பரிசோதனைகள் உள்ளன. இவற்றை ஸ்க்ரீனிங் டெஸ்ட் என்கிறோம்.
அதாவது ஒரு குறிப்பிட்ட நோய் சமூகத்தில் எவ்வளவு அளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய குறிப்பிட்ட நோய்க்கான காரணிகளைக் கொண்டோருக்கு இந்த பரிசோதனைகள் செய்யும் போது, அவர்களிடத்தில் நோயின் இருப்பை அறிய முடியும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் தான் ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றில்லை. குறிப்பிட்ட வயதில் இருப்பவர்கள் அனைவரும் இத்தகைய பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
எனினும் ஸ்க்ரீனிங் பரிசோதனைகளில் பாசிடிவ் என்று வந்து விட்டால் கண்டிப்பாக புற்று நோய் இருக்கிறது என்று அர்த்தமில்லை. அதற்கடுத்து ஸ்க்ரீனிங் பாசிடிவ் வந்த நபர்களுக்கு நோயை உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் செய்யப்படும். அதற்குப் பிறகே நோய் இருப்பது உறுதி செய்யப்படும். இத்தகைய பரிசோதனைகளை தங்களின் குடும்பத்தில் புற்று நோய் யாருக்கேனும் ஏற்பட்டிருப்பின் அவர்கள் இன்னும் முக்கியத்துவம் தரலாம்.
இப்போது நமது நாட்டில் அதிகம் காணப்படும் புற்று நோய்களுக்கான வயது வாரியான கண்டறிதல் பரிசோதனைகளைப் பார்ப்போம்.
பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்கள்
1. கர்ப்ப பை வாய் புற்று நோய்:
21 வயதிலிருந்து 29 வயது வரை - மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கர்ப்பபை வாய் தடவல் பரிசோதனை (பேப் ஸ்மியர்). அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.
VIA / VILI அசிடிக் அமிலம் தடவி நேரடியாக ஆய்வு செய்யும் பரிசோதனையையும் செய்து கொள்ளலாம்.
30 முதல் 65 வயது வரை - ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பேப் ஸ்மியர் இதனுடன் பேப்பிலோமா வைரஸ் பரிசோதனையும் சேர்த்து செய்து கொள்ளலாம். ( ஹியூமன் பேப்பிலோமா வைரஸ் - கர்ப்பபை வாய் புற்று நோய்க்கு காரணியாக இருப்பதால் அதையும் சேர்த்து பார்ப்பது நல்லது)
65 வயதைத் தாண்டியவர்களுக்கு கடந்த பத்து வருடங்களாக நார்மல் என்றால் இனி இந்தப் பரிசோதனையைத் தொடர வேண்டியதில்லை.
கர்ப்ப பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் இந்த பரிசோதனைகளைச் செய்ய வேண்டியதில்லை.
2. மார்பகப்புற்று நோய்:
வளர் இளம் பருவத்தில் இருந்தே பெண்கள் மாதம் ஒருமுறையேனும் தங்களது இருபக்க மார்பகங்களையும் மாதவிடாய் முடிந்த ஒரு வாரம் கழித்து தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளும் Self Breast Examination செய்யும் பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.
40 முதல் 44 வயது வரை - வருடம் ஒருமுறை மருத்துவரிடம் நேரடியாகச் சென்று மருத்துவரிடம் மார்பகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதை CLINICAL BREAST EXAMINATION என்கிறோம். இதனுடன் மேமோகிராம் எனும் மார்பகங்களில் உள்ள சிறு கட்டிகளையும் அடையாளம் காணும் எக்ஸ்ரே பரிசோதனையை அவரவர் விருப்பம் போல செய்து கொள்ளலாம்.
45 முதல் 54 வயது வரை - வருடம் ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
55 வயதுக்கு மேல் - இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவையன்றி தங்களது குடும்பத்தில் மார்பகப்புற்று நோய் வரலாறு இருப்பவர்கள் CA 15-3 எனும் ரத்தப் பரிசோதனையை வருடம் ஒருமுறை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
3. கர்ப்பபை புற்றுநோய் ( எண்டோமெட்ரியல் கேன்சர்):
மாதவிடாய் நிற்கும் காலமான மெனோபாஸுக்கு பிறகு அல்லது நிற்கும் காலத்தில் திடீரென அதீத உதிரப்போக்கு / ரத்தகக்கட்டிகள் வெளியேறுதல் / லேசாக ரத்தம் படுதல் ஆகியவை இருப்பின் கர்ப்பபை சுவர் பகுதியில் இருந்து நுண் துண்டை எடுத்து பரிசோதனை செய்ய அனுப்ப வேண்டும். இதை பயாப்சி என்று அழைக்கிறோம். கூடவே கர்ப்பபை வாய் தடவல் (பேப் ஸ்மியர்) அதனுடன் பிறப்புறுப்பு வழியாக செலுத்தி செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும் செய்து கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்:
4. ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோய்:
45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆசனவாய் வழியாக விரல் விட்டு மருத்துவரால் செய்யப்படும் . ப்ராஸ்டேட் சுரப்பி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இதை டிஜிட்டல் ரெக்டல் எக்சாமினேஷன் ( DRE) என்கிறோம். கூடவே ரத்தப் பரிசோதனை ப்ராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆண்டிஜென் ( Prostate Specific Antigen) செய்து பார்த்து அதிகமாக இருப்பின் மருத்துவர் பரிந்துரையில் அடுத்தக்கட்ட பரிசோதனைகள் செய்யலாம்.
70 வயது வரை இந்த பரிசோதனைகளை வருடம் ஒருமுறை மேற்கொள்வது நல்லது.
இருபாலினங்களுக்கும் பொதுவான புற்று நோய்கள்
5. குடல் புற்றுநோய்கள்:
- இரிடபிள் பவல் சிண்ட்ரோம் இருப்பவர்கள்
- குடும்பத்தில் குடல் புற்று நோய் இருப்பவர்கள்
- ஏற்கனவே புற்று நோய் ஏற்பட்டு மீண்டவர்கள்
- மலம் வழியாக ரத்தம் வெளியேறும் அறிகுறி கொண்டவர்கள்
- கொலொனோஸ்கோபி / சிக்மாய்டோஸ்கோப்பி எனும் ஆசனவாய் வழியாக நுண் இழை குழாய் செலுத்தி குடலில் புற்று நோய் கட்டி இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
- சிடி ஸ்கேன் மூலம் குடல் பகுதியைப் படம் பிடித்துப் பார்க்கும் சிடி கொலனோகிராபி பரிசோதனை
புற்று நோய் இருந்து மீண்டவர்கள் / குடும்ப வரலாறு கொண்டவர்கள்
45 வயதுக்கு மேல்
- மலம் கொண்டு செய்யப்படும்
FIT (Faecal Immuno Chemical Test)
gFOBT ( மலத்தில் நுண்ணிய அளவு ரத்தம் வெளியேறினாலும் கண்டறியும் பரிசோதனை)
MT- Ds DNA ( மலத்தில் புற்றுநோய் செல்கள் வெளியேறுவதை கண்டறியும் பரிசோதனை) ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.
இவையன்றி, ரத்தப் பரிசோதனையில் CA 19-9, CEA ( CARCINO EMBRYONIC ANTIGEN) ஆகிய பரிசோதனைகளும் உதவும்.
6. நுரையீரல் புற்று நோய் :
நீங்கள் புகை பிடிப்பவரா? அதனுடன் நுரையீரல் அழற்சி நோய் இருக்கிறதா? ஏற்கனவே நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டு மீண்டவரா? ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் என்று கடந்த முப்பது வருடங்கள் பிடித்திருக்கிறீர்களா?
55 வயது முதல் 74 வயது வரை வருடம் ஒரு முறை குறைந்த அளவு கதிர்களைக் கொண்டு செய்யப்படும் லோ டோஸ் நுரையீரல் சிடி ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
7. தலை மற்றும் கழுத்துப் பகுதி புற்று நோய்கள்
குட்கா, புகையிலை போடுபவரா? வாயில் புகையிலை ஒதுக்குபவரா?
காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் வருடம் சென்று வாய், மூக்கு, தொண்டை, கழுத்துப் பகுதி நேரடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தைராய்டு புற்று நோய்களையும் அடையாளம் காண முடியும். வருடம் ஒருமுறை பல் மருத்துவரிடம் நேரடி பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தாடை / வாய் புற்று நோயை இனங்காணலாம்.
நாக்கு / ஈர்ப்பகுதியில் ஆரம்ப கட்ட புற்று நோய் இருந்தால் உடனடியாக பயாப்சி எடுத்து சிகிச்சை பெற முடியும். இவையன்றி ரத்தம் சாரந்த புற்று நோய்களை ஒட்டு மொத்த ரத்த அணுக்களை ஆய்வு செய்யும் ரத்த பரிசோதனை கொண்டு செய்ய முடியும். அதற்குப் பிறகு தேவையான மேல் பரிசோதனை செய்து புற்று நோயை உறுதி செய்யலாம்.
மேற்கூறிய பரிசோதனைகளை அனைவரும் செய்து கொள்ள வேண்டும் என்பது நிர்பந்தமில்லை. எனினும் புற்று நோய்க்கான காரணிகள் கொண்டவர்கள், இன்னும் தங்களின் உடல் நலனின் மேல் அக்கறை கொண்டோர், இந்த பரிசோதனைகளை தங்களின் வயதுக்கு ஏற்றவாறு செய்து கொள்வது ஒருவேளை அவர்களுக்கு புற்று நோய் ஏற்படுமாயினும் அதை விரைவில் கண்டுகொள்ள உதவக்கூடும்.
இப்பதிவு யாரேனும் ஒருவருக்கு விரைவில் புற்று நோயைக் கண்டறிய உதவினாலும் பதிவு எழுதிய நோக்கம் நிறைவேறும்.
நன்றி: Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா