கம்பளத்தாரின் கட்டபொம்மன் அகாடமிக்கு முதல் வெற்றி!
தமிழகத்தில் இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் கூடும் எந்தவொரு கூட்டத்திலும், நீண்ட நாட்களாக ஒலித்துக்கொண்டிருப்பது, நமது சமுதாயத்திலிருந்து ஒரு எம்எல்ஏ வோ, எம்பி வோ அல்லது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியோ உருவாக்கமுடியவில்லையே என்ற மனக்குமுறல் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.
ஒரு சமுதாயமாக தனித்துநின்று எம்எல்ஏ. எம்பிக்களை உருவாக்கும் வாய்ப்பு எல்லா சமூகங்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை சாதிகளுக்கே கூட்டணியில்லாமல் சாத்தியமாகாதபோது, 234 சட்டமன்றத்தொகுதிகளில் எந்த ஒரு தொகுதியிலும் தனிப்பெரும்பான்மை சமூகமாக இல்லாத தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு அரசியல் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது என்பது எதார்த்தம். சமுதாயத்தின் தனிப்பெருந்தலைவர் க.சுப்பு அவர்களின் தனித்துவமான ஆளுமையே அரசியல் அரங்கில் புறந்தள்ள முடியாத தலைவராக செல்வாக்கு செலுத்தமுடிந்தது. ஆகையால் அரசியல் கட்சிகளில் பயணிப்பவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளில் உரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கடுமையாக முயன்றால் மட்டுமே சாத்தியம்.
ஆனால், அதிகாரத்தைப்பெறுவதற்கான மாற்றுவழி நிர்வாக அமைப்புக்குள் நுழைவது. இதற்காக தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமுதாயங்கள் தொடங்கி, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமுதாயங்கள் வரை பிரத்யோக கவனம் செலுத்தி, தங்கள் சமுதாய இளைஞர்களை அதிகார அடுக்குகளில் நுழைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தனிப்பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றன.
சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் தொட்டிய நாயக்கர் சமூகம் உரிய கவனம் செலுத்தாததின் விளைவு, அரசின் உயர் மட்டப்பதவிகளில் யாரும் இடம்பெறமுடியாத வாய்ப்பு நிலவி வருகிறது. மிகவும் பின்தங்கியநிலையிலுள்ள குடும்பங்களில் இருந்து, தங்கள் சொந்த முயற்சியால் அரசுப்பணியில் சேரவிரும்புகின்றவர்கள், அதிகம் காலம், பொருளாதார விரயமில்லாத கடைநிலையப்பணியிடங்களுக்குக்கான தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று அரசுப்பதவிகளில் அமர்ந்துள்ளனர். இவர்களில் பலரும் இதைவிட உயர்ந்த பணியிடங்களுக்குப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய திறமையிருந்தும், குடும்பசூழல் இடம்கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவலநிலையிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுத்து, அரசு அதிகார மட்டங்களில் கம்பளத்தார் சமுதாய இளைஞர்களை அலங்கரிக்கச்செய்யும் ஒட்டுமொத்த சமூகத்தின் முயற்சிதான் "கட்டபொம்மன் அகாடமி".
2023 இல் நடைபெற்ற முப்பெரும்விழாவில் சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட "கட்டபொம்மன் அகாடமி", 2023-24 ஆம் கல்வியாண்டில் 11 மாணவ, மாணவியரோடு முதலாமாண்டு பயணத்தைத் தொடங்கியது. 6 மாணவர், 5 மாணவியரைத் தேர்வு செய்து, மேத்தா ஐஏஎஸ் அகாடமியோடு இணைந்து டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வந்தது. இதில் 3 மாணவர்கள் காவல்துறையில் சேரும் கனவோடு பயிற்சி பெற்றுவருபவர்கள் என்பது குறிப்ப்டித்தக்கது.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்றுவந்த மாணவர்கள், கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எதிர்கொண்டனர். தேர்வெழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 15.88 லட்சம்பேர் தேர்வெழுதினர். இதற்கிடையே 3 முறை காலிப்பணியிடங்களுக்கள் உயர்த்திப்பட்டு இறுதியாக 9491 என அரசு அறிவித்துள்ளது. இத்தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி வெளியானது.
ஜூனியர் உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கட்டபொம்மன் அகாடமி மூலமாக பயிற்சிபெற்றுவந்த திருமதி.கனகா பெருமாள் என்பவர் வனக்காப்பாளர் (Forest Guard) பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செட்டிபட்டி கிராமத்தில் விவசாயக்கூலித் தொழிலாளர்களின் மகளான கனகா, பி.இ சிவில் இஞ்சினியர் பட்டம் பெற்றுள்ளார். இவரது கணவர் ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும், 8 மாதமே ஆன குழந்தையும் உள்ளனர். கருவுற்றிருந்த நிலையில் கட்டபொம்மன் அகாடமியில் இணைந்து ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்றுவந்த கனகா, தனது விடா முயற்சியால் தேர்வெழுதிய முதல் முயற்சிலேயே குரூப் 4 பணியிடத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியின் விளிம்பைத்தொட்டுள்ள கனகா, அரசுப்பணிக்கு போட்டியிட விரும்புபவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. திருமதி.கனகா வைப்போல் முதல் முயற்சியிலேயே வெற்றிக்கோட்டை எட்டிவிடும் தூரத்தில், ஓரிரு மதிப்பெண்கள் பற்றாக்குறையால் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தொடர் முயற்சிகளில் வெற்றியை சாத்தியப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.