இது என்ன ஆற்றுநீரா? அல்லது கண்ணாடி விரிப்பா?
அன்றாட வாழ்க்கையில் நாம் பல ஆறுகளைக் கடந்து செல்வது இயல்பு. ஒவ்வொரு முறை ஆற்றைக் கடக்கும்போதும் தம் மனதில் தோன்றும் எண்ணமாக இருப்பது எவ்வளவு தண்ணீர் போகிறது என்பது பற்றியோ அல்லது வறண்டு கிடப்பது பற்றியோ அல்லது ஆற்றில் குவிந்து கிடக்கும் மணல் பற்றியோ அல்லது மணலை அள்ளிச்செல்ல அணிவகுத்து நிற்கும் லாரிகள் குறித்தோ சிந்தித்தவாறு கடந்து செல்கிறோம். சென்னை நகரில் வசிப்பவர்கள் கூவம் ஆற்றைக் கடக்கும்போது ஒருசில விநாடிகள் மூக்கை மூடிக்கொன்று, அதற்கும் நமக்கும் சம்மந்தமோ இல்லாதது போல் கடந்துவிடுவோம். ஆனால் உலகிலேயே மிகச்சுத்தமான ஆறு ஒன்று இந்தியாவில் ஓடிக்கொண்டிருப்பது குறித்து நமக்குத் தெரியுமா?
ஆற்றில் பயணிக்கும் படகு வானத்தில் மிதப்பது போல தோன்றுகிறது. ஆற்றின் அடியில் உள்ள தாவரங்கள், கற்கள் ஆகியவை கண்ணாடி மூலம் பார்ப்பது போல தெள்ளத் தெளிவாக தெரிகின்றன. அந்த அளவுக்கு அந்த ஆற்று நீர் அவ்வளவு சுத்தமாக உள்ளது. பார்க்கும்போதே ஒரு வாய் அள்ளிக்குடிக்கலாமே என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு வசீகரிக்கும் நதி ஏன்றால் அது "உம்காட் நதி". 7 சிஸ்டர்ஸ் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆறு, உலகிலேயே சுத்தமான ஆறுகளில் ஒன்றாக திகழ்கிறது.
உம்காட் நதி ‘டௌகி’ என்றும் அழைக்கப்படுகிறது. டௌகி இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள ஒரு சிறிய நகரம். இந்த தூய்மைக்கு காரணம் இங்கு வாழும் பழங்குடி சமூகங்களின் முன்னோர்களிடமிருந்து வரும் பாரம்பரியம் என்று நம்பப்படுகிறது. இது பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெரியவர்களால் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.