🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நெடுஞ்சாலையில் கட்டபொம்மன் சிலை! நேரில் களமிறங்கிய அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை அமைப்பதற்கான இடத்தை, கொட்டும் மழையில் பார்வையிட்டார் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள். இதன் விவரம் வருமாறு,


தமிழகத்தில் இராஜகம்பளத்தார்கள் அடர்த்தியாக வாழும் மாவட்டங்களில் முதன்மையானது விருதுநகர். இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக விருதுநகர் இருந்த காலத்திலிருந்து, கம்பளத்தார்கள் அதிக செல்வாக்கு பெற்ற பகுதியாக விருதுநகர் இருந்துவந்துள்ளது. மக்கள் அடர்த்தியும், செல்வாக்குமுள்ள இப்பகுதியில் சமுதாயத்தின் அடையாளமாக இருந்துவரும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது அம்மக்களின் நீண்டநாள் விருப்பம். சமுதாயத்தின் சார்பிலேயே சிலை அமைத்துவிடலாம் என்று பலரும் முயற்சி எடுத்துவந்த நிலையில், அது தொடர்ந்து தாமதப்பட்டுக்கொண்டே வந்தது. 


ஒருகட்டத்தில் இராஜகம்பள மகாஜனசங்கத்தின் தலைவர் வையப்பநாயக்கர் அவர்களின் 32-வது நினைவுவேந்தல் கூட்டத்தில், அம்மாவட்ட அமைச்சர்களாக இருந்த மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டபோது, கட்டபொம்மனாருக்கு சிலை அமைத்துத்தருமாறு அமைச்சர்களிடம் அக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்துப்பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்கள், சமுதாயத்தின் சார்பில் இடம் வாங்கிக்கொடுத்துவிடுங்கள், என்னுடைய சொந்த செலவில் வெங்கலச் சிலை வைத்துக்கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து, சமுதாயத் தலைவர்களைக் கொண்ட குழு 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, சிலை அமைவிடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, கட்டபொம்மனாரின் கம்பீரத் தோற்றத்தை புகைப்படங்களிலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சிலைகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர், இறுதியாக மதுரையில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலையின் கம்பீரம் பிடித்துப் போகவே, அதேபோல் சிலை வடிக்க உத்தரவிட்டார். இதற்காக சென்னை, மீஞ்சூரிலுள்ள புகழ்பெற்ற சிற்பியை தன் சொந்த செலவில் மதுரைக்கு அழைத்துவந்து சிலையைப் பார்வையிடச் செய்த அமைச்சர், சிலைக்கு முன் தொகையாக (அட்வான்ஸ்) ரூ.20000 சமூகத்தார் முன்நிலையில் சிற்பியிடம் வழங்கினார்.


சிற்பியும், சிலையும் உறுதியான நிலையில், மக்கள் விரும்பும் பிரதான இடத்தைக் கண்டுபிடிப்பதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலின்போது அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொட்டிய நாயக்கர், தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும்ம் தங்கள் சமூக தலைவருக்கு சிலைவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சமூகங்களின் கோரிக்கையை ஏற்று சிலை வைத்துத்தருவதாக கே.கே.கே.எஸ்.ஆர் அவர்கள் வாக்குறுதியளித்தார். சட்டமன்றத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டபின் தேவேந்திர குலத்தார் மற்றும் மூப்பர் சமுதாயத்தினர் சிலை வைப்பதற்காக சொந்தமாக இடங்களை வழங்கியதின் அடிப்படையில் தலைவர்களுக்கு சிலை அமைத்துக்கொடுத்தார். இப்போதும் கட்டபொம்மன் சிலை அமைப்பதில் மட்டுமே தாமதம் தொடர்ந்தது.


இந்நிலையில், அவ்வப்போது அமைச்சரை சந்திக்கும் போதெல்லாம் தொழிலதிபர்கள் எம்.மணிவாசகம், எஸ்.பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கட்டபொம்மன் சில தாமதமாவது குறித்து அமைச்சரிடம் நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அருப்புக்கோட்டையில் சமுதாயத்தினரை அழைத்து கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் நடத்தினர். இதில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படாமல் இருந்தது.

இப்படியான சூழலில், தற்போது மீண்டும் கட்டபொம்மன் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்கான நகரின் பல்வேறு இடங்களைத் தேர்வு செய்து, அமைச்சரின் பார்வைக்கு சமுதாயத் தலைவர்கள் கொண்டு சென்றிருந்தனர். இந்நிலையில், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன்  கடந்த இருவாரங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அருப்புக்கோட்டை சென்றிருந்தபொழுது, நமது சமுதாய உறவான மகேஷ்வரன் என்பவர், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியநாயகிபுரம் விலக்கு சந்திப்பிலுள்ள தங்கள் சொந்த நிலத்தில், மாவீரன் கட்டபொம்மனாரின் சிலை நிறுவ இலவசமாக இடம் வழங்குவதாகத் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து, சமுதாயத் தலைவர்களான தொழிலதிபர்கள் எம்.மணிவாசகம், எஸ்.பி.கிருஷ்ணன், திமுக பிரமுகரும் வையப்ப நாயக்கர் மகனுமான வை.மலைராஜன், அமைச்சரின் நேர்முக உதவியாளர் எம்.என்.மகேஷ்வரன் ஆகியோர் கலந்து பேசி, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடங்கள் பட்டியலில், இந்த பெரியநாயகிபுரம் இடமும் சேர்க்கப்பட்டு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். 

இதனைத்தொடர்ந்து, நேற்று மதியம் கொட்டும் மழையில்  நனைந்தபடி  மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியநாயகிபுரம் விலக்கு சந்திப்பில் உள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது சமுதாயத் தலைவர்களோடு இடத்தின் உரிமையாளர் பெருமாள் நாயக்கர் (பொன்ராஜ் நாயக்கர்) மற்றும் அவரது மகன் மகேஷ்வரன் ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் சுப்பராஜ், தொழிலதிபர்கள் எம்.மணிவாசகம், எஸ்.பி. கிருஷ்ணன், வை.மலைராஜன், நேர்முக உதவியாளர் என்.எம்.மகேஸ்வரன், பாலவனத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் ஆகியோரோடு ஆலோசனை நடத்திய அமைச்சர், கட்டபொம்மன் சிலை அமைக்கும்பணியை முடிக்கிவிட்டுள்ளார். 


முன்னதாக, அமைச்சர் நேரடி ஆய்வுக்கு வருவதையடுத்து, கடந்த வாரம் இடத்தைப் பார்வையிட்ட  தொழிலதிபர்கள் எம்.மணிவாசகன் மற்றும் எஸ்.பி.கிருஷ்ணன் ஆகியோர் அங்கிருந்த புதர்களை அகற்றி, ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணிக்கு ஏற்பாடு செய்தனர்.

மாவீரன் கட்டபொம்மன் சிலை நிறுவுவது குறித்தான நீண்ட நாள் விருப்பத்தை எப்படியாவது விரைவில் நிறைவேற்றிட வேண்டுமென்று அமைச்சரும், முன்னனி சமுதாயத் தலைவர்களும் ஆர்வம் காட்டிவருவதால் அருப்புக்கோட்டையின் சிலை விரைவில் அமைவது உறுதியாகியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved