🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒரே நாளில் 16 முறை சூரியன் உதயமாவதைப் பார்க்கவேண்டுமா?

பன்னாட்டு விண்வெளி மய்யம் தோராயமாக மணிக்கு 28,000 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இதனால் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றிவிடுகிறது. ஒவ்வொரு முறை பூமியின் இரவு பகுதிக்குச் செல்லும்போது இரவாகவும், பகல் பகுதிக்கு வரும்போது பகலாகவும் இருக்கும்.

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களுக்கு சூரியன் தோன்றுதலும் மறைதலும் நாளுக்கு ஒருமுறை காணும் நிகழ்வன்று. இப்போது அங்கு வசிக்கும் சுனிதா வில்லியம்ஸ் ஒரு நாளுக்கு 16 முறை சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் பார்க்கிறாராம்.

“நான் விண்வெளிக்கு செல்வதை விரும்பவும், அதற்காக கடுமையாக உழைக்கவும் ஒரு காரணம் உள்ளது. அங்கு ஒரு நாளுக்கு 16 முறை சூரியன் புலர்வதையும், 16 முறை மறைவதையும் பார்க்கும் நற்பேறு எனக்கு கிடைக்கும்” என்று ஒருமுறை கூறியிருக்கிறார் சுனிதா.

தற்போது தொழில்நுட்ப காரணங்களால் நீண்டநாள்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், பிப்ரவரி 2025இல் பூமி திரும்பவுள்ளார். அவரால் அடிக்கடி சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் பார்க்க முடிவதற்கு பின்னாலிருக்கும் அறிவியல் என்ன?

பூமியில் 12 மணி நேரம் பகலும், 12 மணி நேரம் இரவும் இருப்பதுபோலல்லாமல், பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் 45 நிமிடங்கள் வெளிச்சமும் 45 மணி நேரங்கள் இருளும் இருக்கும். இதனால் ஒரு நாளிலேயே 16 முறை பகலும் இரவும் வந்து சென்றுவிடும்.

இரவும் பகலும் சட்டென மாறிவிடுவதனால் விண்வெளி வீரர்களால் நேரத்தை சரியாக கணக்கிட முடியாது. அதனால் அவர்கள் ஒருங்கிணைந்த யூனிவர்சல் நேரத்தைப் பயன்படுத்தி (UTC – Coordinated Universal Time) தங்களது பணிகளை அமைத்துக்கொள்கின்றனர்.

எனவே அவர்கள் சாப்பாடு, வேலை, ஓய்வு, தூக்கம் எல்லாமும் அட்டவணைப்படிதான் நடக்கும். இதுவே அவர்களது உடல், மன நலத்தை பாதுகாக்க சிறந்த வழியும் கூட.

நாமும் சர்வதேச விண்வெளிக்குச் சென்றால் 16 முறை சூரிய உதயமாவதையும், மறைவதையும் பார்க்கலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved