இறப்பே இல்லாத உயிரினம் கண்டுபிடிப்பு!

சிலிநாட்டைச் சேர்ந்த மேக்னஸ் என்ற பெண் ஆய்வாளர் கடல்வாழ் உயிரினம் பற்றி ஆய்வு செய்து வந்தார். தன் ஆய்வின்போது கடற்கரையில் பார்த்த ஒரு உயிரினம் குறித்து குறிப்பு ஒன்றை எழுதி இருந்தார்.
அந்தக் குறிப்பின் மீது நீண்ட காலமாக யாருமே கவனம் செலுத்தவில்லை. 1990 இல் அறிவியல் மாணவர் டேனியல் மார்டினஸ் அக்குறிப்பைப் படித்துக்கொண்டிருந்தார். அதில் ஹைட்ரா (Hydra) எனும் நன்னீர் வாழ் உயிரினத்துக்கு இறப்பே இல்லை என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து ஆர்வம் கொண்டார்.
வேறும் கட்டுக்கதை என்று இதைப்புறக்கணிக்காமல் அந்த உயிரினத்தைத் தேடிச் சென்றார். மெல்லிய குழல் போன்ற அமைப்பை உடலாகப் பெற்ற ஜெல்லி மீன் வகையில் ஒன்றான அந்த உயிரினத்தை, மிகவும் மோசமான காலநிலைகொண்ட அர்ஜெண்டினாவின் தென் கோடிக் கடலில் கண்டுபிடித்தார். ஆய்வகத்திற்குக் கொண்டு வந்து அதை வளர்க்க ஆரம்பித்தார். 1998 இல் தொடங்கி இன்றுவரை அது மரணிக்கவே இல்லை என்பதுடன், நிறையவே இனப்பெருக்கமும் செய்தது. அவற்றில் எதுவும் இறக்கவில்லை. ஹைட்ராவைத் துண்டு துண்டாக வெட்டினாலும் ஒவ்வொரு துண்டும் உயிருடன் செயல்படக் கூடிய தன்மை கொண்டதாக மாறக் கூடியது.
நன்னீரில் அதன் செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதால், இயற்கையாக அது தனக்கேற்ற சுற்றுச்சூழலில் இருக்கும்வரை அதற்கு மரணமே இல்லை, ஹைட்ரா முதிர்ச்சி அடைவதே இல்லை. அதன் செல்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. FoxO genes என்ற ஜீன்கள் தான் இவை இளமையாகவே இருக்க காரணம். இந்த ஜீன்கள் புழுக்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிர்களிலும் இருக்கின்றன.
ஏற்கனவே பல ஆண்டுகாலம் பனிக்கட்டியில் உறைநிலையில் இருந்தாலும் பனிக்கட்டி கரைந்ததும் உயிர்பெறும் தவளைகளின் புரதங்களில் இருந்து, மனிதர்களை உறை நிலைக்குக் கொண்டு சென்று விண்வெளியில் நீண்ட தூரப் பயணத்திற்குப் பயன்படுத்தும் ஆய்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில், மரணமே இல்லாமல் வாழும் ஹைட்ரா என்ற ஜெல்லிவகை மீனின் புதிய செல்களைத் தொடர்ந்து உருவாக்கும் புரதத்தையும் கண்டுபிடித்துவிட்டால், எதிர்காலத்தில் இப்பெருவெளி எங்கும் மனிதர்கள் மரணமடையாமல் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களால் இந்த மானுடத்திற்கு என்ன பயன்? என்பது தான் கேள்விக்குறியாகும்.