விடைபெறும் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு நன்றி!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகர்புற உள்ளாட்சி தவிர்த்து தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் 2019 டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட்டது.
இத்தேர்தலில் தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம். மதுரை, தேனி. திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பாளர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தொடங்கி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வரை பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பதிவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஊராட்சி மன்ற தலைவர்களாகவும், ஒன்றியக்குழு உறுப்பினர்களாகவும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
உள்ளாட்சி அமைப்புப் பதவிகளில் உட்சபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியக்குழு தலைவராக திருமதி,சுசீலா தனஞ்செயன் அவர்களும், ஒன்றியக்குழு துணைத்தலைவர்களாக இராசிபுரம் ஒன்றியத்தில் திருமதி சந்திரா சிவக்குமார் அவர்களும், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திரு.ராம்குமார் அவர்களும், மாவட்டக்குழு உறுப்பினர்களாக திரு.ஞானகுருசாமி (புதூர்), திருமதி இந்திரா புகழேந்தி (கரூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஊராக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிகாலம் நேற்று முன்தினம் (05.01.2025) ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடும், அதிகாரங்களும் பெருமளவில் குறைக்கப்பட்ட நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் தங்களால முடிந்த அளவு நிறைவேற்றி வைத்துள்ளாத ஊராட்சி மன்றத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சமுதாயத்தின் தேவைகள் ஒருநாளோடு முடிந்துவிடுவதில்லை, தினம் தினம் புதிய புதிய தேவைகளும், கோரிக்கைகளும் மக்களிடமிருந்து வந்துகொண்டே இருப்பது இயல்பான ஒன்று. எதிர்வரும் காலங்களில் மக்கள் தங்களுக்கு வாய்ப்பளித்தால் ஏற்கனவே கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இன்னும் சிறப்பாக செயல்படக் காத்திருப்பதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு விடைபெறும் நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், தங்களோடு பயணித்த பொதுமக்கள், ஆதரவளித்த அரசியல் கட்சித் தலைமைகள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளாட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.