🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தென்னக ரயில்வே போர்டு வழக்கறிஞராக திரு.ஜி.ஆனந்தகுமார் நியமனம்!

மத்திய நிர்வாகத் தீர்ப்பாய வழக்கறிஞராக திரு.ஆனந்தகுமார் நியமனம்!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அகில இந்திய பணிகள் மற்றும் அனைத்து பொதுசேவை சார்ந்த மத்திய அரசு பணிகளில் 219 துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், பணி விதிகள், சேவை நிபந்தனைகள், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பிற புகார்கள் குறித்த வழக்குகளை பிரத்யேகமாக விரைந்து விசாரிப்பதற்காக, மத்திய நிர்வாக தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன. இவை நாடு முழுவதும் டெல்லி, சென்னை, அகமதாபாத், லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, எர்ணாகுளம் உள்ளிட்ட 19 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த தீர்ப்பாயங்கள் கடந்த 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றங்களில் இருந்து 13,350 வழக்குகள் இங்குமாற்றப்பட்டன. தற்போது வரை நாடு முழுவதும் 8 லட்சத்து 82 ஆயிரத்து 85 வழக்குகள் தொடரப்பட்டு, அதில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 272 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆண்டுதோறும் 1,400 முதல் 1,600 மனுக்கள் தாக்கலாகின்றன. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயங்கள் தொடங்கப்பட்டதன் நோக்கமே, அரசுப் பணியாளர்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென்பதே. ஆனால் சென்னை அமர்வில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களால், நூற்றுக்கணக்கான வழக்குகளில் விசாரணை முடிந்தும் தீர்ப்பளிக்கப்படாமல் கிடப்பிலுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த தீர்ப்பாயங்களின் நோக்கமே கேள்விக்குறியாகி வருகிறது. 

சென்னை உயர் நீதிமன்றத்துக்குரிய அதே அதிகார வரம்பு, ஆளுகை இந்த தீர்ப்பாயத்துக்கும் உள்ளது. தற்போது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் இயங்கி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்தியன் இரயில்வே, 67956  கிமீ நீள இருப்புப்பாதையும், உலகின் மிகப்பெரிய தொடர்வண்டி கட்டமைப்பும், ஆண்டுக்கு 500 கோடி பயணிகளையும், 35 கோடி டன் சரக்குகளையும் இந்தியன் ரயில்வே கையாண்டு வருகிறது. தினமும் 14,444 தொடருந்துகளை இயக்கும் இந்தியன் ரயில்வேயில் 12.54 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இந்திய ரயில்வே அமைச்சகத்தால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி முழுமையாகவும் ஆந்திரா, கர்நாடகாவின் சில பகுதிகளும் அடங்கும். 

இந்நிலையில், தென்னக ரயில்வே சம்மந்தமாக தீர்ப்பாயங்களில் நடைபெற்றுவரும் வழக்குகளில் ஆஜராவதற்கான வழக்கறிஞர் பட்டியலை தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி சென்னை தீர்ப்பாயத்தில் ஆஜராவதற்காக 5  மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் 20 ஜூனியர் வழக்கறிஞர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.இராதாகிருஷ்ணன் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், இப்பட்டியலில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான திரு.ஜி.ஆனந்தகுமார் அவர்கள் தென்னக ரயில்வே சார்பில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாய வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூத்த வழக்கறிஞர் வி.இராதாகிருஷ்ணன் அவர்களிடம் ஜூனியராக பயிற்சிபெற்று, தற்போது "தமிழரசி லா ஃபர்ம்ஸ்" என்ற வழக்கறிஞர் நிறுவனத்தை நிறுவி உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறார்.

தென்னக ரயில்வேயின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஆனந்தகுமார் அவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved