தென்னக ரயில்வே வழக்குரைஞராக வை.பெ.தனபால் நியமனம்!

தென்னக ரயில்வே வழக்குரைஞராக வை.பெ.தனபால் நியமனம்!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானது இந்தியன் இரயில்வே. சுமார் 67956 கிமீ நீள இருப்புப்பாதையும், உலகின் மிகப்பெரிய தொடர்வண்டி கட்டமைப்பும், ஆண்டுக்கு 500 கோடி பயணிகளையும், 35 கோடி டன் சரக்குகளையும் இந்தியன் ரயில்வே கையாண்டு வருகிறது. தினமும் 14,444 தொடருந்துகளை இயக்கும் இந்தியன் ரயில்வேயில் 12.54 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய ரயில்வே, கொங்கன் ரயில்வே, வடக்கு ரயில்வே, வட மத்திய ரயில்வே, தெற்கு ரயில்வே உள்ளிட்ட 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தியன் ரயில்வேக்கு இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் 2.65 லட்சம் கோடி நிதி ஒடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெரிய கட்டமைப்பைக் கொண்டுள்ள இரயில்வேத்துறை தொழிலாளர் வழக்குகள், விபத்து வழக்குகள், இழப்பீட்டு வழக்குகள் என பலவகையான வழக்குகளை சந்தித்து வருகிறது. இந்த வழக்குகளில் ஆஜராவதற்காக ரயிவேத்துறை அவ்வப்போது தேவைக்கேற்ப திறைமையான வழக்குரைஞர்களை தேர்வு செய்து நியமித்து வருகிறது.
அந்தவகையில், மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் வழக்கு சம்மந்தமான இதர இடங்களில் தென்னக ரயில்வேயின் சார்பில் ஆஜராக விருதுநகரைச் சேர்ந்த திரு.வை.பெ.தனபால் M.A.,B.L., அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்னக ரயில்வே வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் அவர்கள், இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் வையப்ப நாயக்கர் அவர்களின் பெயரனாவார். இவரது தந்தையார் பெருமாள் நாயக்கர் மேலமுடிமன்னார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருமுறையும், கமுதி ஒன்றியக்குழு உறுப்பினராக இருமுறையும் பொறுப்பு வகித்துள்ளார்.
தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குரைஞராகப் பணியாற்றிவரும் வை.பெ.தனபால், பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார். கடந்தாண்டு விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலையை வருவாய்துறையினர் காவல்துறை துணையோடு கைப்பற்றி, வருவாய்த்துறை அலுவலகத்தில் பூட்டி வைத்ததை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, மீண்டும் அதே இடத்தில் சிலை நிறுவிட உத்தரவு பெற்றுத்தந்ததில் முக்கியப்பங்காற்றிவர் தனபால் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னக ரயில்வே வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள திரு.வை.பெ.தனபால் அவர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.