அமைச்சரின் வாக்கு உறுதியாச்சு! சிலைக்கு அடிக்கல் நாட்டியாச்சு!

அமைச்சரின் வாக்கு உறுதியாச்சு! சிலைக்கு அடிக்கல் நாட்டியாச்சு!
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அமைச்சர்களாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் இராஜகம்பள மகாஜனசங்க முன்னாள் தலைவர் வையப்ப நாயக்கரின் 32-வது குருபூஜையில் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தபோது மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு விருதுநகர் மாவட்டத்தில் ஆளுயரசிலை அமைத்துத்தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. நிகழ்வில்பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் சிலைக்கான இடத்தை கொடுத்தால் தனது சொந்த செலவில் சிலை அமைத்துத் தருவதாக அப்போதே வாக்குறுதியளித்துவிட்டார்.
இதையடுத்து, சமுதாயத்திலுள்ள முன்னனி தலைவர்கள் சிலைக்கான இடத்தை தேர்வு செய்வதில் முனைப்புக்காட்டி வந்தனர். அதுசமயம் அமைச்சர் பல்வேறு சிலை மாதிரிகளை ஆய்வு செய்து, சமுதாயத் தலைவர்களோடு கலந்துபேசி, மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலையை தேர்வு செய்தார். அதே கம்பீரத்தோடு மாவீரன் சிலையை வடிவமைக்க, சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பியை மதுரைக்கு வரவழைத்து, மதுரை சிலையைப் பார்வையிடச்செய்து, சிற்பிக்கு முன்பணமாக ரூ 20000/- சமுதாயத் தலைவர்கள் முன்னிலையில் அன்றே அமைச்சர் வழங்கிவிட்டார்.
இதற்கிடையே, சிலை அமைப்பதற்கான பல்வேறு இடங்களை ஆய்வு செய்தும் பல்வேறு காரணங்களால் இறுதிவரை தகுந்த இடத்தை தேர்வுசெய்யமுடியாமல் போனது. இது சிலை வந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த பாமர மக்களுக்கு பெருத்த ஏமாற்றமாகிப்போனது. ஒருகட்டத்தில் சமுதாய மக்களின் பிரச்சினையாக உருவெடுத்து, அரசியல் அரங்கில் பேசுபொருளாகி, தேர்தல் களத்தில் எதிரொகித்தது. கடந்த சட்டமன்ற , நாடாளுமன்றத் தேர்தலின்போது, விருதுநகர் மாவட்டத்தில் கம்பளத்தார் வசிக்கும் கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் பரவலாகப்பேசப்பட்டது.
மக்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்ட அமைச்சரும் சமுதாயத் தலைவர்களிடம் இடத்தைத் தேர்வு செய்து தரும்படி முடிக்கிவிட்டுக்கொண்டே இருந்தார். அவர்களும் அவ்வப்போது தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியநாயகிபுரம் விலக்கு சந்திப்பில் தனக்கு சொந்தமான நிலத்தில் 51/2 சென்ட் இடத்தை கட்டபொம்மன் சிலை அமைக்க தானமாகக் கொடுக்க பெருமாள் நாயக்கர் குடும்பத்தினர் முன்வந்தனர். அமைச்சரும் கடந்த மாதம் இடத்தை நேரடியாகப் பார்வையிட்டதைத் தொடர்ந்து மீண்டும் சிலை விவகாரம் பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடம் தானமாக அளிக்க முன்வந்த பெருமாள் நாயக்கர் குடும்பத்தினருக்கு பலரும் நன்றிதெரிவித்தனர்.
தொடந்து நடைபெற்ற கூட்டத்தில் அதே நெடுஞ்சாலையில் கம்பளத்தார்கள் அதிகம் வசிக்கும் பந்தல்குடி சந்திப்பில் தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை சிலையமைக்க தானமாகத் தருவதாக மகேந்திரன் என்பவர் முன்வந்தார். இதனையடுத்து இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வதற்காக சமுதாயத் தலைவர்கள் நேரடியாக இடங்களைப் பார்வையிட்டு, சாதக பாதக அம்சங்களையும், மக்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்தும் பந்தல்குடி இடத்தை தேர்வு செய்து இறுதி செய்தனர்.
இதனைத்தொடரந்து, தொழிலதிபர் மு.மணிவாசகன் அவர்களைத் தலைவராகக்கொண்டு கட்டபொம்மன் அறக்கட்டளை நிறுவப்பட்டு, கடந்த வாரம் அந்த அறக்கட்டளை பெயரில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு, சிலைக்கான அனுமதிக்கோப்புகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேவேகத்தில், சென்ற ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் கட்டபொம்மன் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்விழாவில் அறக்கட்டளை தலைவர் மு.மணிவாசகன், செயலாளர் எஸ்பி.கிருஷ்ணன், பொருளாளர் என்எம்.மகேஷ்வரன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகளும், வை.மலைராஜன், சந்திரபாபு, தங்கப்பாண்டியன், முருகன், மகேந்திரன், பிரேம்குமார், விஜயராஜ் உள்ளிட்ட சமுதாயப்பிரமுகர்களும், முன்னாள் சேர்மன் சுப்பாராஜ், சாகுல்ஹமீது, பாலகணேஷ் உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.