🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வெறும் 48.77 கோடியில் உலக வல்லரசை மிரளவைத்த DEEPSEEK

உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மய்யத்துக்குக் கொண்டுவந்துள்ளது. 

குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின் வருகையானது, அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, AI துறையில், குறிப்பாக AI திறன் கொண்ட சாட்பாட்கள் பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் பல மில்லியன் டாலர்களைக் கொட்டி உருவாக்கிவரும் தொழில்நுட்பத்தை மிக மிக சொற்ப செலவில் சீன நிறுவனம் வெளியிட்டுள்ள "டீப்சீக் செயலி" நியூயார்க் பங்குச் சந்தையை ஆட்டம் காண வைத்துள்ளது.

அமெரிக்காவின் சட் ஜிபிடி (ChatGPT) மற்றும் சீனாவின் டீப்சீக் (Deepseek) என இரண்டுமே நாம் அனுப்பும் தரவுகளை மனிதர்களை போல புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும். இவை சாதாரணமாக கட்டுரை எழுதுவது, ஆராய்ச்சி, கோடிங் என பல்வேறு பணிகளை இலகுவாக மேற்கொள்ள நமக்கு உதவுகின்றது. சட்ஜிபிடியை போலவே டீப்சீக்கையும் செயலியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதோடு, நேரடியாக வெப்சைட்டிலும் பயன்படுத்தலாம். சட் ஜிபிடி மற்றும் டீப்சீக் என இரண்டுமே இலவசமாகக் கிடைத்தாலும் சட்ஜிபிடியில் நாம் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். புதிய வெர்ஷன்களை பயன்டுத்த அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் டீப்சீக்கில் தற்போது அனைத்துமே இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்:

அமெரிக்கப் பங்குச்சந்தையில் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு ஏற்பட்ட ரத்தக்களரி நிலையில் இருந்தே டீப்சீக்கின் தாக்கத்தை உணரலாம். மேலும், ‘அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மணி இது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இதன் அரசியல் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம்.

சீனப் போட்டி:

AI துறையில் சீனாவின் போட்டி தொடர்பான விவாதங்கள் புதிதல்ல என்றாலும், அதிகம் அறியப்படாத சீன புத்தாக்க நிறுவனமான டீப்சீக் தனது ‘R1’ சாட்பாட் மூலம், அமெரிக்க AI ஆதிக்கத்துக்கு எதிரான சவாலை உறுதிசெய்துள்ளது, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன், சராசரிப் பயனாளிகள் முதல் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் வரை பலதரப்பினரும் டீப்சீக் மூலம் சீனாவின் கை ஓங்குவதற்கான வாய்ப்பு பற்றிப் பரபரப்பாகப் பேசிவருகின்றனர். ‘சாட்ஜிபிடி’, ‘கிளாடு’, ‘கூகுள் ஜெமினி’, ‘கிராக்’ போன்ற இன்னொரு AI சாட்பாட் தான் என்றாலும், டீப்சீக் வேறு எந்த AI சாட்பாட்டும் பெறாத கவனத்தைப் பெற்றுள்ளது.

தடையும் செலவும்! 

இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. AI ஆய்வில் சீனா முன்னிலை பெற்றுவிடக்கூடாது என்னும் நோக்கத்தில், அந்நாட்டுக்கு அதிதிறன் வாய்ந்த AI சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்தது. AI செயலிகளை உருவாக்க வேண்டும் என்றால், பெரும் ஆற்றல் கொண்ட சிப்கள் அவசியம் எனக் கருதப்படுகிறது. இத்தகைய சிப் தயாரிப்பில் அமெரிக்காவின் என்விடியா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இந்தத் தடையை மீறி, முன்னணி AI சாட்பாட்களுக்கு நிகரான சாட்பாட்டை டீப்சீக் சத்தம் இல்லாமல் உருவாக்கிக் காண்பித்துள்ளது.

இரண்டாவது காரணம், டீப்சீக் உருவாக ஆன செலவு. அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் டாலர் கணக்கில் முதலீடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, டீப்சீக் வெறும் ரூ.48.77 கோடியில் சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது. AI சாட்பாட்களை இயக்கும் மொழி மாதிரிகளை உருவாக்கவும், அவற்றுக்குப் பயிற்சி அளிக்கவும் பெரும் பொருள்செலவு தேவைப்படும் எனக் கருதப்படும் நிலையில், சொற்ப முதலீட்டில் டீப்சீக் தயாராகி உள்ளது. ஆனால், அதன் ஆற்றலும் செயல்பாடும் சாட்ஜிபிடிக்கே சவால் விடுகிறது.

AI-யின் வளர்ச்சி:

AI உலகின் தற்போதைய நிலையைக் குலைக்க இந்த இரண்டு காரணங்களுமே போதுமானது. வன்பொருள் தடை, பெரும் முதலீடு தேவை ஆகிய இரண்டு சவால்களையுமே, தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான அணுகுமுறையால் டீப்சீக் வென்றெடுத்திருக்கிறது. டீப்சீக் நிறுவனர் லியான் வென்பென் (Liang Wenfeng), தன்வசம் இருந்த பழைய ஆற்றல் குறைந்த என்விடியா சிப்களைக் கொண்டே, AI சாட்பாட் செயல்பாட்டுக்குத் தேவையான செயல்திறனைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதேபோல, பயிற்சி செயல்பாடுகளுக்கும் தொழில்நுட்பப் புதுமையாக்கத்தின் மூலம் செலவைப் பல மடங்கு குறைத்து, முதலீடு ஒரு பொருட்டல்ல என உணர்த்தியிருக்கிறார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved