🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கழிவுநீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம் கண்டுபிடிப்பு!

கழிவுநீரில் கலந்துள்ள மருந்துப் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், தொழிற்சாலை வேதிப்பொருட்கள் போன்ற மாசுகளை வடிகட்டி சுத்தப்படுத்தி பாதுகாப்பான நீராக மாற்ற நீர் வாழ் நுண்ணுயிரினங்களான (Crustaceans) வகையைச் சேர்ந்த உண்ணிகளைப் (Fleas) பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "இதற்காக டைசன் சுத்திகரிப்புக் கருவி (Dyson Vacuum Cleaner) மாதிரியில் உயிரி உபகரணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகப் பயனுள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் கார்ல் டியர்ன் (Prof Karl Dearn ) கூறுகிறார்.

நடைமுறையில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுநீரில் உள்ள எல்லா நச்சுகளையும் அகற்றுவதில்லை. இதனால் இந்த மாசுகள் நதிகள், நீரோடைகள், பாசன வாய்க்கால்களில் கலக்கின்றன. இது அந்த சூழல் மண்டலங்களைப் பாதிக்கிறது, உணவையும் நீரையும் நஞ்சாக்குகிறது. ஆனால் பயன்பாட்டில் இப்போது உள்ள நீர் வடிகட்டிகள் அனைத்தும் அதிக செலவு பிடிக்கக் கூடியவை. கார்பனை அதிகமாக உமிழ்பவை. இவை தங்களைத் தாங்களே மாசுபடுத்திக் கொள்ளும் இயல்புடையவை. இதனால் விஞ்ஞானிகள் கழிவு நீரை சுத்தப்படுத்த உதவும் இயற்கை வடிகட்டிகள் பற்றி ஆராயத் தொடங்கினர்.

உதவிக்கு வரும் உண்ணிகள்:

இதற்காக சூழலுக்கு நட்புடைய, அதிக செலவில்லாத, சுலபமாக அளக்க உதவும் நீர் வாழ் உண்ணிகளைப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்தனர்.

"டாஃப்னியா (Daphnia) குடும்பத்தை சேர்ந்த இந்த உயிரினங்கள் உண்மையில் உண்ணிகள் இல்லை. இவை நானூறுக்கும் மேற்பட்ட நுண் உயிரினங்கள். இவை நுண் கழிவுகளை வடிகட்டுகின்றன. பாக்டீரியாக்கள், பாசிகள் போன்றவற்றை சிதைவடையச் செய்கின்றன. பரவசம் ஏற்படுத்தும் கண்டுபிடிப்பு இது” என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக சூழல்இயல் பேராசிரியருமான யுயிசா ஆர்சீனி (Luisa Orsini) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை Journal Science of the Total Environment என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

பொது சுகாதாரத் துறையினருக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சில மாசுப்பொருட்களை நுகரும் நானூறு வகை நீர் வாழ் உண்ணி இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டன.

டிக்ளொபினாக் (Diclofenac) என்ற கூட்டு மருந்துப்பொருள், அட்ரெசின் (Atrazine) என்ற பூச்சிக்கொல்லி, கன உலோகம் ஆர்சினிக் மற்றும் நீரால் பாதிக்கப்படாத ஆடைகள் தயாரிக்கப் பயன்படும் தொழிற்சாலைக் கழிவுப்பொருள் எஃப் ஓ எஸ் (FOS) என்ற சங்கிலித்தொடர் பாலிமர் போன்ற மாசுகளை வடிகட்ட சரியான உண்ணியினத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இந்த உண்ணிகளின் கருப்பைகள் இணைக்கப்பட்ட பேழைகள் தடாகங்களின் அடிப்பகுதியில் படிந்துள்ள மண்ணில் விடப்பட்டன.

உண்ணிகளின் கருவில் இருந்து முட்டைகள் உருவாகி பொரியும் சூழ்நிலை வரும்வரை ஆய்வாளர்கள் காத்திருந்தனர். உகந்த சூழ்நிலை வராவிட்டால் இவை செயலற்ற நிலையில் பல நூறாண்டுகள் வரை அப்படியே கிடக்கும். நீர் நிலைகளில் மாசுகள் மிக அதிகமாக கலந்திருக்கும்போது மற்றும் மாசுகள் இல்லாத சமயங்களிலும் ஆய்வாளர்கள் கருப்பைகளை நீருக்கடியில் விட்டு ஆராய்ந்தனர்.

ஆய்வகத்தில் உண்ணிகளின் இனப்பெருக்கம்:

1900, 1906, 1980 மற்றும் 2015 ஆகிய மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. ”வேதிப்பொருட்களை வடிகட்டும் பணியில் மிகச்சிறந்த முறையில் இவை செயல்படுகின்றன” என்று ஆர்சீனி கூறுகிறார். இந்த ஆய்விற்கு முன்பு விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் குளோனிங் முறையில் உண்ணிகள் கூட்டத்தை இனப்பெருக்கம் செய்தனர். அவற்றின் மரபணு கட்டமைப்பு மற்றும் நீடித்து வாழும் பண்பிற்கான திறன்கள் (Survival Skills) ஆராயப்பட்டது.

இந்த உயிரினங்களின் சுத்திகரிப்பு ஆற்றலை அறிய முதலில் ஒரு நீர் வாழ் உயிரினங்களுக்கான காட்சிக்கூட தொட்டியிலும், பிறகு 100 லிட்டர் நீரிலும், 2000 லிட்டர் கொள்ளளவு உடைய உண்மையான நீர் சுத்திகரிப்புத் தொட்டியிலும் விடப்பட்டு ஆராயப்பட்டது. பின்னர் 21 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடைய நீர் சேகரிப்புத் தொட்டியில் ஆராயப்பட்டது.

ஆய்வுக்கூடத்தில் உண்ணிகள் 90% டிக்ளொபினாக் மருந்து கூட்டுப்பொருளையும், ஆர்சினிக்கின் 60 சதவிகிதத்தையும், 59% அட்ரெசினையும், 50% எஃப் ஓ எஸ்ஸையும் உறிஞ்சின. இந்த உயிரினங்கள் ஆய்வகத்தில் செயல்பட்டது போலவே வெளிப்புற சூழலில் ஒரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் செயல்பட்டன.

“இது அற்புதமானது. 50% எஃப் ஓ எஸ் மாசை நடைமுறையில் இப்போது உள்ள வேறெந்தப் பொருளும் நீக்கவில்லை. அல்லது வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தவில்லை” என்று ஆர்சீனி கூறுகிறார். இப்போது உள்ள மற்ற அணுகுமுறைகள் அனைத்தும் விலை உயர்ந்தவை. இத்தகைய முறைகளில் நச்சுத் தன்மையுள்ள துணைப்பொருட்களும் உருவாகின்றன.

“உண்ணிகள் நீடித்து வாழக்கூடியவை. அவற்றின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கக்கூடிய சத்துப்பொருட்களின் அளவைப் பொறுத்து அவை குளோனிங் முறையில் சுயமாக இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன. தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்கின்றன. தேவைக்கேற்ப பெருக்கமடைகின்றன. அல்லது எண்ணிக்கையில் குறைகின்றன. இவை வெவ்வேறு வகையான வாழிடச் சூழல்களில் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன.

இவற்றை பலதரப்பட்ட சூழல்கள் மற்றும் பலவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த முறை மலிவானது. நடுநிலை கார்பன் உமிழ்வு (Carbon Neutral) உடையது என்பதால் இதை உயர் தரமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தலாம். குறைவான உட்கட்டமைப்பு உடைய வளரும் நாடுகளில் இம்முறை மிகப் பயனுடையது. இதனால் இந்த புதிய சுத்திகரிப்பு முறை இத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

மரபணுத் தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சூப்பர் டாஃப்னியா (Daphnia) உண்ணிகளை உற்பத்தி செய்து அவற்றை மிக அதிக நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் குறிப்பிட்ட வேதிப்பொருளை வடிகட்ட, சுத்திகரிக்கப்பட வேண்டிய மாசுகளை இலக்காகத் தேர்ந்தெடுத்து அகற்றும் இந்த உண்ணிகளின் திறனை மேம்படுத்தலாம்.

நான் டாஃப்னியா உண்ணிகளின் மிகப்பெரிய விசிறி” என்று இண்டியானா பல்கலைக்கழக சூழல் நச்சு உயிரியல் துறை பேராசிரியர் ஜோசப் ஆர்ஷா (Joseph R Shaw) கூறுகிறார்.

மாசுகளை அகற்ற உதவும் இந்த அற்புத உயிரினங்கள் மனிதகுலத்திற்கு இயற்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய வரம். வானமே இதன் எல்லை!

நன்றி: சிதம்பரம் இரவிச்சந்திரன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved