எதிர்பார்ப்பு என்னவோ சிலை மட்டும் தான்... கிடைப்பதோ சிலையும், மணிமண்டபமும்!.

இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு இராஜகம்பளத்தார்கள் மிக அதிகம் வசிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் சிலை நிறுவ வேண்டும் என்பது சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கை. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோரிக்கிய இருந்துவரும் நிலையில், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது தேர்தல் களத்திலும் எதிரொலித்து வந்தது. சமுதாய மக்கள் விரும்பும் பகுதியில் சிலை நிறுவுவதற்கான இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்துவந்த நிலையில், மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தனவந்தர் ஒருவர் சிலையமைக்க 10 சென்ட் நிலம் தானமாக வழங்கியதைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகள் வேகம்பெற்றுள்ளது. இதன் விவரம் வருமாறு,
இந்திய விடுதலைக்காக முதல்முழக்கமிட்டு தூக்குமேடையில் தன்னுயிர் துறந்தவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரம், தியாகத்திற்கு உலகிற்கு எடுத்துக்காட்டாககவும், இராஜகம்பள சமுதாய மக்களின் முகவரியாகவும், அடையாளமாகவும் விளங்கும் அம்மாவீரனுக்கு தலைநகர் சென்னையில் சிலை வேண்டுமென்பது அரைநூற்றாண்டு கோரிக்கையாக இருந்ததுபோல், இராஜகம்பள சமுதாய மக்கள் லட்சக்கணக்கில் வசிக்கும் விருதுநகர் மாவட்டத்திலும் சிலையமைக்க வேண்டும் என்பது சமுதாய மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. கம்பளத்தார் சமுதாய மக்களின் விருப்பத்தை உணர்ந்துகொண்ட அம்மாவட்ட அமைச்சரான மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், தன் சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலையமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதனையடுத்து உடனடியாக சிலை அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தநிலையில், கம்பீரமிக்க தலைவனில் சிலை வைப்பதற்கான சரியான இடம் கிடைக்காமல் சமுதாயத் தலைவர்கள் தத்தளித்து வந்தனர்.
கம்பளத்தார்களின் கனவு மெய்ப்படாமல் ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வாராது வந்த மாமணிபோல் வந்தார் பந்தல்குடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான மகேந்திரன் என்பவர். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பந்தல்குடி சந்திப்பில் டி.கொப்புச்சித்தம்பட்டி கிராமத்தில் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை மாவீரன் கட்டபொம்மனாருக்கு சிலை அமைக்க வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளைக்கு கடந்த மாதம் தானமாக வழங்கினார். இதனையடுத்து சிலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், சிலை அமைந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மணிமண்டபமே அமைக்க தீர்மானித்து, அதற்கான முழுவீச்சில் இறங்கியுள்ளனர் அறக்கட்டளை நிர்வாகிகள்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R. இராமசந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவரும் பிரபல தொழிலதிபருமான எம்.மணிவாசகன், அறக்கட்டளை செயலாளரும் ரியல் எஸ்டேட் அதிபருமான எஸ்.பி.கிருஷ்ணன், பொருளாளர் மகேஷ்வரன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலன் இ.ஆ.ப அவர்களை நேற்று (19.03.2025) அவரது அலுவலகத்தில் சந்த்தித்து, கட்டபொம்மன் மணிமண்டம் அமைப்பதற்கான அனுமதியை விரைந்து வழங்கக்கோரி மனு அளித்தனர்.
அறக்கட்டளை நிர்வாகிகளிடம் மனுவைப்பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்கள், மணிமண்டபம் அமைப்பதற்கு விரைந்து அனுமதியளிக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அறக்கட்டளை நிர்வாகிகள் கட்டபொம்மன் மணிமண்பத்தின் வரைபடம், முன்பக்கத் தோற்றப்படங்களை மாவட்ட ஆட்சியரிடன் காண்பித்து திட்டம் குறித்து விளக்கிக்கூறினர். அனைத்தையும் பார்வையிட்ட மாவட்ட சுதந்திரப்போராட்ட மாவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிர்வாகிகளைப் பாராட்டினார்.
இதற்கிடையே, கட்டபொம்மன் சிலையே தங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தநிலையில், சிலையோடு மணிமண்டமும் சேர்த்து அமைக்க அறக்கட்டளை நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். மேலும், மாவீரனார் தூக்கிலப்பட்ட கயத்தாறு செல்லும் இதே மதுரை-தூத்துக்குடி பிரதான சாலையில், அதற்கு முன்பாக இந்த மணிபண்டம் அமையவிருப்பது சுற்றுலா செல்லும் பயணிகளை கவரும் என்பதோடு, மாவீரனாரின் புகழுக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு சமுதாயத்தினரின் வாழ்த்துகள்.