🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொடுப்பது அதிகம், கிடைப்பது கம்மி - மாநிலங்களின் புலம்பல் சரியா?

ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது வரி வருவாயிலிருந்து மத்திய அரசுக்கு குறிப்பிட்ட சதவீதம் அளிக்கும். அதேபோல் மத்திய அரசும் தனது நேரடி வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கும். அப்படி பகிரப்படும் வரியில் மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்மாநிலங்களுக்கு குறைவாகவே ஒதுக்கப்படுவதாக அம்மாநிலங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ஒன்றிய அரசின் வரிப்பகிர்வு கொள்கை மூலம் வரி அதிகம் செலுத்தும் தென்மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு குறைவாகவும், வரி குறைவாகச் செலுத்தும் வடமாநிலங்களுக்கு அதிக வரிப்பகிர்வு அளிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்கள், ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்களித்த மொத்த வரி ரூபாய் 22 லட்சத்து 26 ஆயிரத்து 983.39 கோடி.

அதே ஐந்து ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தால் பங்களிக்கப்பட்ட தொகை ரூபாய் 3 லட்சத்து 41 ஆயிரத்து 817.60 கோடி. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட தென்மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் மொத்தம் ரூபாய் 6 லட்சத்து 42 ஆயிரத்து 295.05 கோடி. உத்தரப்பிரதேசத்துக்கு விடுவிக்கப்பட்ட தொகை 6 லட்சத்து 91 ஆயிரத்து 375.12 கோடி.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெறப்பட்ட வரி விவரம் குறித்தும், வரி ஒதுக்கீடு குறித்தும மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விகளுக்கு, ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி பதிலளித்துள்ளார்.

அதில் ஒவ்வொரு மாநிலமும் செலுத்திய ஒரு ரூபாய் அடிப்படையில், மத்திய அரசு திருப்பி அளித்த தொகை குறித்த விவரங்கள் வருமாறு,

1. தமிழ்நாடு 26 பைசா,

2. கர்நாடகம் 16 பைசா,

3. தெலுங்கானா 40 பைசா, 

4. கேரளா 62 பைசா,

5. மத்திய பிரதேசம் 1 ரூபாய் 70 பைசா, 

6. உத்தரப் பிரதேசம் 2 ரூபாய் 2 பைசா, 

7. ராஜஸ்தான் 1 ரூபாய் 14 பைசா.

இதன் மூலம் தென்மாநிலங்கள் தங்களுக்கு கிடைக்கும் சொற்பக்காசில் நிர்வாகத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதும், அதை வெற்றிகரமாக கையாண்டு இந்தியாவில் முன்னனி மாநிலங்களாக திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved