கள் ஒரு கொடிய விஷம் என்கிறார் மருத்துவர்!

வறட்சி, தொடர்ச்சியான பூச்சி தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற பல காரணங்களால் தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் பொருட்டும். கள் ஓர் ஆரோக்கியமான பானம் என்ற வகையிலும் தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் நீண்டநாட்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எந்த அரசுகளும் செவி சாய்க்காத நிலையில் மதுபான ஆலைகளில் இருந்து ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கைமாறும் பெரும் பணமே காரணம் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 'கள்' ஒரு கொடிய விஷம், அதை அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அதில் அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு,
கள், சாராயம், அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய மற்றும் தத்துவ நூல்கள் அனைத்தும் மதுவின் கொடுமையை எடுத்துரைத்துள்ளன. திருக்குறளில் ’கள் உண்ணாமை’ குறித்து 10 குறள்கள் இயற்றப்பட்டுள்ளன. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரத்தில் மது மற்றும் மாமிசம், கொலை, கொள்ளைக்கு எதிராகவே கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
கள் மதுவே தவிர, அது உணவாகாது. பதநீர் வேறு; கள் வேறு. கள் இறக்க அனைத்து கிராமப்புறங்களில் அனுமதி கொடுத்தால் விவசாயத் தொழிலாளர்கள், பனை, தென்னை தோப்புகளே கதி என மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறே நிகழ்ந்தன.
கள் உடம்புக்கு நல்லது என்றும் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்படுகிறது. 'உப்பு கருவாடும் ஒத்த மரக் கள்ளும் உடம்புக்கு நல்லது' என்று சினிமாவில் தவறாகப் பாடி வைத்துள்ளனர். எல்லா மது வகைகளிலும் அடிப்படையாக இருப்பது ஆல்கஹால். கள்ளில் 8 முதல் 15 சதவீத வரை ஆல்கஹால் அளவீடு இருக்கும்; பிற மதுபான வகைகளில் 30 முதல் 40 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும். எனவே போதையை அதிகரிக்க லிட்டர் கணக்கில் கள்ளைக் குடித்து விடுவார்கள். கள் பிற மதுபானங்களை விட அதிகமான பாதிப்புகளை உருவாக்கும் மிக மோசமான மதுவாகும். ரத்தக்குழாய்கள்; உணவு ஜீரணத்தை ஒழுங்குபடுத்தவும், உடலுக்குத் தேவையான சக்தியைச் சக்தியை சேமித்து வைக்கும் ஈரல்கள் மது குடிப்பதால் பெரும் பாதிப்படையும். நல்ல திசுக்களுக்கு பதிலாக கொழுப்பு சத்து அதிகமாகி ஈரலின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். இன்சுலின் சுரக்கும் கணையத்தை பாதிப்படையச் செய்து சர்க்கரை நோய் மற்றும் கணைய புற்றுநோயை அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு; மூளை நரம்பு மண்டல பாதிப்பு என பலவிதமான நோய்களையும் வரவழைக்கும் மிகக் கொடிய மது ' கள்' ஆகும்.
’கள்' ஒரு உணவு என்று சொல்வதற்கு உண்டான புரோட்டின், விட்டமின்கள், மினரல்ஸ் போன்ற எந்த விதமான சத்துக்களும் அதில் இல்லை. கள்ளின் ஆபத்து தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியாக தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். கள் இறக்க அனுமதித்தால் கிராமம் தோறும் நாட்டுச் சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும். இதன் போக்கு எப்படி, எங்கு போய் முடியும்?
கள் இறக்கும் போராட்டம் நடத்துவது அதை பொது வழியில் குடித்துக் காட்டுவது அனைத்தும் சட்டவிரோதமே.
எனவே, வரும் 15 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கள் இறக்கும் போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்; தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.