🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சர்வதேசப் பரவலாக மாறியுள்ள நீரழிவு நோய்க்கு அரிசிச்சோறுதான் காரணமா?

உலக அளவில், நீரிழிவு நோய் பரவி வருவதற்கான முதன்மையான மூன்று காரணங்களை மருத்துவத்துறை வல்லுநர்கள் தங்களது ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கிறார்கள்...

(1) மரபு ரீதியாக வருவது.

(2) முறையற்ற உணவு பழக்கம், அல்லது தனது வேலைத்திறன் மற்றும் உழைப்புக்குத் தகுந்தாற்போல் உணவுகளை எடுத்துக் கொள்ளாதது.

(3) குடும்பம், வேலை, பொருளாதாரம், நிச்சயமற்ற எதிர்காலம், இவை கொடுக்கக் கூடிய சமூக அழுத்தம் மற்றும் இதனால் ஏற்படும் மன உளைச்சல், போன்றவைகள் நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது. என்று தெரிவிக்கிறார்கள்.

ஒன்று மற்றும் இரண்டாவது காரணங்கள் நமது சொந்தக் காரணமாக இருந்தாலும், மூன்றாவதாக குறிப்பிட்டு இருக்கக் கூடிய சமூக அழுத்தம் என்பது புறநிலை காரணம்தான் அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ளவேண்டும். மூன்றாவதாக கூறப்பட்டிருக்கும் காரணம், தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள். அதனால் ஏற்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், வாழ்வியல் சிக்கல்கள், அது கொடுக்கும் வலி மற்றும் மன உளைச்சல் போன்ற காரணிகள், நீரிழிவு நோய் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. 

நுகர்வுப் பண்பாட்டிற்குள் ஆழ்த்தி, மக்களை பொருளீட்டும் மிருகங்களாக மாற்றிய அரசும், அது சார்ந்த அரசியலும் இந்நோய் அதிகரிக்க காரணம் என்பதை மக்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ அந்த நிமிடமே நீரிழிவு நோய்க்கானத் தீர்வு கிடைத்து விடும். 

இப்படி யாரும் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காகத்தான், மக்களை மடைமாற்றுவதற்காக ஏறாளமான NGOக்கள், அரிசி சோறு தின்பதால்தான் நீரிழிவு நோய் வருகிறது என்றும், இதற்குத் தீர்வு இயற்கை உணவு, இயற்கை விவசாயம் தான் என்றும் நம்மை திசைத் திருப்பி விடுகிறார்கள். 

சரி, அரிசி திண்பதால் நமக்கு சர்க்கரை வருகிறது, எனவே இனிமேல் கோதுமை சாப்பிடு என்று நமது உணவுச் சங்கிலியை அறுத்து, நமது உணவுப் பண்பாட்டை சிதைப்பவர்களிடம், கோதுமை சாப்பிடும் பஞ்சாபியர்களிடம் சர்க்கரை நோயே கிடையாதா என்று நாம் ஏன் கேட்கவில்லை?. 

அது போகட்டும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அரிசிச்சோறே கிடையாதே ஏன் அங்கெல்லாம் நீரிழிவு நோய் பெருகி வருகிறது என்றாவது நாம் கேட்டிருப்போமா? இதோ அதுத் தொடர்பாக IDF என்ன சொல்கிறது என்று பார்ப்போம்...

2021 ஆம் ஆண்டு, எடுக்கப்பட்ட கணக்கின் படி, 38.4 மில்லியன் அமெரிக்கர்கள், அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 11.6% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல, இங்கிலாந்தில், 5.6 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் நீரிழிவு நோய்ப் பரவல் அதிகமாக உள்ளது. 2020 இல், சுமார் 3.5 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெருகின்றனர், இது பிரெஞ்சு மக்கள் தொகையில் 5.3% ஆகும். 

உலகளவில், சுமார் 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.மேலும் ஐரோப்பிய பிராந்தியத்தில் மட்டும், 61 மில்லியனுக்கும் அதிக மானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு தெரிவிக்கிறது (IDF). 

அதேபோல, இந்தியாவில் ஏழரை கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம் தான் என்கிறது, டயாபடிக். ஓஆர்ஜி.

நீரிழிவு என்பது தொற்று நோய் கிடையாது. ஆனால் இந்த நீரிழிவு தற்போது சர்வதேசப் பரவலாக இருக்கிறது. தெருவில் நடக்கும் 10 ல் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 643 மில்லியனாகவும், 2045 ஆம் ஆண்டுக்குள் 783 மில்லிய னாகவும் உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

IDF தனது ஆய்வில் இந்தத் தகவலை மட்டும் சொல்லவில்லை. நான் மேலே குறிப்பிட்டது போல் நீரிழிவு என்பது சமூக சார்ந்த பிரச்சனை, ஆனால் இதை தனிநபர் பிரச்சனையாக மக்கள் குறுக்கப்பார்க்கிறார்கள். 

இதோ IDF மேலும் கூறுவதைக் கேளுங்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கிட்டத் தட்ட 80% நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வாழுகின்றனர் என்று கூறுகிறது. அதாவது, தேவை அதிகம் வருமானம் குறைவு போன்ற காரணங்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

எனவே, இதை வாசிக்கக்கூடிய உங்களுக்கு யாருக்காவது நீரிழிவு நோய் இருந்து, வெந்தயத்தைப் போடுகிறேன், அருகம்புல் குடிக்கின் றேன், சித்த வைத்தியம் பார்க்கின் றேன், நாட்டுவைத்தியம் பார்க்கி ன்றேன், பாட்டி வைத்தியம் பார்க்கின்றேன் என்றும், இதுதான் சரி, இதுதான் நமது பாரம்பரியம் என்றும் உளறிக்கொண்டிராமல், உடனே ஒரு நல்ல அலோபதி மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல, மாதா மாதம் தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரையும், கொழுப்பும் எவ்வளவு இருக்கிறது என்று, ரத்தப் பரிசோதனை நிலையத்திற்குச் சென்று சோதித்து தெரிந்துக்  கொள்ளுங்கள். நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள் நன்றாக வேர்க்கும்படியும், இருதயமும், நுரையீரலும் துடிக்கும் படியும் வேகமாக தினமும் இருமுறை நடைப் பயிற்சி செய்யுங்கள். 

எப்போதும் அறைவயிறு சாப்பிடுங்கள், பசியோடு இருங்கள். முடிந்தால் ஆறு வேலையாக பிரித்து உணவு எடுத்துக் கொள்ள முயற்சியுங்கள். உங்கள் உணவு மேசையில் அதிக நேரத்தை செலவிடுங்கள். 

உங்கள் உணவை ரசித்து ருசித்து நிதானமாக உண்ணுங்கள். மனிதனின் ஜீரண உறுப்பு வாயிலிருந்தே தொடங்குகிறது. 

நன்றி:பெரியார் சரவணன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved