🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அணுகுண்டு தயாரிப்புக்கான யுரேனியச் செறிவூட்டல் எப்படி நடக்கிறது?

போரில் நல்லது கெட்டது என்று எதுவும் கிடையாது. அழிவும், மக்களின் வலியும் மட்டுமே நிதர்சனம். அழிவை நோக்கி நகரும் சண்டையில் புளகாங்கிதம் அடைய எதுவுமில்லை. அதனால், இப்போரில் யார் பேட்டை ரவுடி என்று பார்ப்பதைவிட, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றை, வித்தியாசமான பார்வையில் பார்ப்போம்.
ஈரானை, இஸ்ரேல் வலிந்து தாக்கியதற்குச் சொல்லப்படும் ஒரே காரணம், “ஈரான் அணுகுண்டுத் தயாரிப்புக்கான யுரேனியச் செறிவாக்கலில் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. இச்செறிவாக்கல் மேலும் தொடர்ந்தால், அணுகுண்டுகள் ஈரான் கைவசமாகிவிடும். அதைத் தடுக்கவே இத்தாக்குதல்”. தெளிவான விளக்கம். இதில் சொல்லப்ப்ச்ட்டவை அனைத்தும் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால், “அது என்ன யூரேனியச் செறிவாக்கல்?” என்று கேட்டால் முழிப்பீர்கள்.
அது என்ன யூரேனியச் செறிவாக்கல் (Uranium Enrichment)?:
இயற்கையில் காணப்படும் யூரேனியத்தின் அணுஎண் 92 (புரோட்டோன்களின் எண்ணிக்கை). அணுநிறை 238 (புரோட்டோன் + நியூட்றோன்களின் எண்ணிக்கை). யுரேனியத்தை U238 என்று பொதுவாகச் சொன்னாலும், அது பல ஐசொடோப்களைக் (Isotopes) கொண்டது. அதன் அணுக்கரு, வெவ்வேறு அளவான நியூட்ரோன்களைக் கொண்டிருப்பதையே ஐசொடோப் என்பார்கள். U238, U235, U234 போன்றவை யுரேனியத்தின் முக்கிய ஐசொடோப்கள். இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் 99.3% இருப்பது U238 யூரேனியமே. எஞ்சிய 0.7%, U235 யுரேனியம் கலந்திருக்கும். கெடுவாய்ப்பாகவோ அல்லது நல்வாய்ப்பாகவோ, இந்த U235 யுரேனியத்தையே அணுவுலைகளுக்கும், அணுகுண்டுகளுக்கும் பயன்படுத்த முடியும். இதுவே சங்கிலித் தொடர்விளைவை (Chain Reaction) உருவாக்கவல்லது. அதனால் இதைப் ‘பிளவுப் பொருள்’ (Fissile Material) என்பார்கள். சரியாகக் கவனியுங்கள், இயற்கையில் இது, ஒரு விழுக்காடுகூட இல்லை. அதைவிடவும் குறைவாகவே இருக்கிறது.
ஒரு அணுவுலையை இயக்குவதற்கு 3% முதல் 5% அளவிலான U235 இருந்தால் போதும். ஆனால், ஒரு அணுகுண்டைத் தயாரிப்பதற்கு 90% U235 தேவை. இயற்கையிலுள்ள யுரேனியத்தில் 0.7% அளவில் கலந்திருக்கும் U235 ஐப் பிரித்தெடுத்துச் சிறுகச் சிறுக 90% அளவுக்குச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் மட்டுமே ஒரு அணுகுண்டைத் தயாரிக்க முடியும். இப்படிச் சேர்ப்பதர்கான செயல்முறையே ‘யுரேனியச் செறிவாக்கல்’ (Uranium Enrichment) எனப்படுகிறது. இது அவ்வளவு சுலபமான செயல்முறை கிடையாது. நிதானமும், பாதுகாப்பும், நீண்டகாலமும் இதற்குத் தேவை. இதையே ஈரானும் செய்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 83% செறிவூட்டலை முடித்திருக்கிறது. அதுவே அடுத்தவரின் கோபத்துக்கும், அச்சத்துக்கும் காரணமானது.


இயற்கை யுரேனியத்திலிருந்து U235 ஐத் தனியாக எப்படிப் பிரித்தெடுப்பது? அது அவ்வளவு இலகுவல்ல. ‘மஞ்சள் கேக்’ (Yellow Cake) என்று அழைக்கப்படும் இயற்கை யூரேனியம், முதலில் ஒக்சைட்டாக (Oxide) மாற்றப்படுகிறது. அதன்பின், ‘யூரேனியம் ஹெக்ஸாஃபுளோரைட்’ (UF₆) என்னும் வாயுவாக உருமாற்றப்படுகிறது. இந்த UF₆ வாயு, மிகப்பெரிய உருளைக் குழாயில் சேகரிக்கப்பட்டு வேகமாகச் சுழற்றப்படுகிறது. ஒரே மாதிரியாகக் காணப்படும், U238 உம், U235 உம், அவற்றின் எடை வித்தியாசத்தால் (Mass difference) தனித்தனியாகப் பிரிகின்றன. எடை குறைந்த U235 மையம்நோக்கி நகர்கிறது (Gas Centrifuge Method). அப்படிப் பிரிந்துவரும் U235, நுண்துளைகள் கொண்ட குழாய்களின் வழியாகத் தனியாகச் சேமிக்கப்படுகிறது. இதுவே யுரேனியம் செறிவூட்டலின் அடிப்படை.
“எல்லாம் சரிதான். இதைச் சுலபமாகச் செய்துவிடலாமே!” என்றால், இல்லை.
ஒரு அணுகுண்டு தயாரிப்பதற்கு அண்ணளவாக 15 கிலோ செறிவாக்கப்பட்ட யுரேனியம் 235 இருக்க வேண்டும். இதைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான இயற்கை யுரேனியத்தின் (மஞ்சள் கேக்) அளவு என்ன தெரியுமா? 2000 கிலோ முதல் 2500 கிலோ மஞ்சள் கேக். அதாவது, 2.5 டன் இதற்கை யுரேனியம்.

இப்போது புரிகிறதா, இது எவ்வளவு கடினமான செயல்முறையென்று.
அணுச்சுழற்சிக்கு ஒரு குறிப்பிட்ட அளவு (Critical Mass) U235 தேவைப்படுகிறது. அது இருந்தால் மட்டுமே சங்கிலித் தொடர்விளைவு (Chain Reaction) நடக்கும். அது கிடைக்கும்வரை செறிவூட்டிக்கொண்டே இருக்க பேண்டும்.
மனித குலத்திற்கு நம்பிக்கை கொடுத்த அரிய தனிமம் யுரேனியம். அதுவே, நாம் அலறித் துடித்து ஓடும்படி மாறியிருக்கிறது. நாடுகளின் பேராசையும், கார்ப்பரேட்டுகளின் பணத் தாகமும், யுரேனியத்தை ஒரு கொடூரனாக மாற்றி விட்டிருக்கிறது.
நன்றி-ராஜ்சிவா
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved