🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வல்லரசுகளை மிரட்டிய ஃபட்டா 1 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை!

கடந்த 12 நாட்களாக நடைபெற்றுவந்த ஈரான் - இஸ்ரேல் போர் இன்றுடன் முடிவுக்குவரும் என்று தெரிகிறது. இப்போரில் அதகம் உச்சரிக்கப்பட்ட பெயர் மட்டுமல்ல, வல்லரசுகள் கூட வாய்பிழந்து பார்த்தது ஈரான் ஏவிய 'ஃபட்டா 1'  ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை தான்.  ‘ஃபட்டா 1’ (Fattah-1 hypersonic ballistic missiles) என்னும் அதியுச்ச மிகையொலி பாலிஸ்டிக் ஏவுகணையால் இஸ்ரேல், ஈரானால் தாக்க்கப்பட்டிருக்கிறது. அதன் நவீனத் தொழில்நுட்பமும், உச்ச வேகமும், எந்த வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகளையும் உடைத்துக்கொண்டு, தாக்குநிலையைத் தொடக்கூடியது. ‘ஃபட்டா’ (Fattah) என்பதற்குத் ‘தீர்ப்பாளர்’ (நீதிபதி) என்னும் அர்த்தம் வரும். அல்லாவை அழைக்கும் 99 பெயர்களில் இதுவும் ஒன்று. 

சரி, இதற்குமேல் போர்பற்றி நாம் எதுவும் பேசப் போவதில்லை. போர் செய்பவர்களுக்கும், அதைப் பின் நின்று ஊக்குவிப்பவர்களுக்கும், எட்ட நின்று கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களுக்கும், போரின் அழிவுகளையும், அதுதரும் விளைவுகள்பற்றியும் நன்றாகவே தெரியும். நாமெல்லாம் இந்த இடத்தில் சிறு பூச்சிகள். மக்கள் எண்ணிக்கையில் வரும் ஏதோவொரு இலக்கத்தை அடையாளமாகக் கொண்ட பிசிறுகள். நாங்களிடும் பதிவுகளோ, கூச்சல்களோ அவர்களின் அம்பலத்தில் ஏறப் போவதில்லை. இரத்த அழுத்தத்தைக் கூட்டுவதைத் தவிர. அதனால், அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கலாம். 

ஆனாலும், இங்கும் சொல்வதற்கு கொஞ்சம் அறிவியல் இருக்கத்தான் செய்கிறது. 

இன்றைய திகதிக்கு உலகில் பெரும்பான்மையினர் வாயில் உலாவும் சொல், ‘பாலிஸ்டிக்’ (Ballistic). ‘ஃபட்டா-1’ கூட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணைதான். அது என்ன பாலிஸ்டிக்? .

இச்சொல்லைக் கேட்டதும் ஏவுகணைகள் மட்டும்தான் உங்கள் ஞாபகத்திற்கு வரும். ஆனால், பாலிஸ்டிக் இயற்பியலுக்கானது. இயற்பியலின் இயக்க விதிகளை அடிப்படையாகக் கொண்டது. கிரேக்க மொழியின், Ballain என்னும் சொல், Ballistic என்பதற்கு அடிப்படையானது. அதன் அர்த்தம், “எறிவது” (to throw) என்பதாகும். ‘பாலிஸ்டிக்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தாவிட்டாலும், அதன் அர்த்தத்தை அறிவியல் உலகுக்கு முதலில் தெளிவுபடுத்தியவர், ஐசாக் நியூட்டன். 

“ஒரு கல்லை அல்லது பந்தை, குறித்த கோணத்தில் விசையுடன் எறிந்தால், அப்பொருள், கொடுக்கப்பட்ட உந்துவிசைக்கேற்ப பரவளைவான (Parabolic) பாதையில் உயரத்தைத் தொட்டு, வேகம் சுழியமாகி மீண்டும் புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, அதே பரவளைவுப் பாதையில் தூரம்போய் விழும்”. இந்த இயக்கத்தைக் கணிதச் சமன்பாடுகளால் நியூட்டன் புரியவைத்திருக்கிறார். அதே சொல் இப்போது நவீன ஏவுகணைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஏன்?

ஏவுகணைகள் பெரும்பாலும் இரண்டு வகையானவை. ஒன்று ‘பாலிஸ்டிக் ஏவுகணைகள்’ (Balistc Missiles). இன்னொன்று ‘குரூஸ் ஏவுகணைகள்’ (Cruise Missiles). 

இவற்றில் வளியிலிருந்து வளிக்கு (Air to Air), நிலத்திலிருந்து வளிக்கு (Surface to Air) போன்ற உப வகைகளும் உள்ளன. வகைகள் பற்றி அவ்வளவு ஆழமாக நாம் போகத் தேவையில்லை. போரியல் தவிர்த்த அறிவியல் சார்ந்தே பேசப் போவதால் அது இங்கு தேவையில்லை. 

குரூஸ் ஏவுகணைகள், ஏவப்பட்ட கணத்திலிருந்து, அதன் இலக்கைத் தாக்கும்வரை, ‘தாரை’ப் (Jet) பொறிமுறை மூலம் இயக்கப்படுகிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை, குரூஸ் ஏவுகணையின் அடிப்பாகத்தில் வெப்பத் தாரைகள் கொழுந்துவிட்டு எரிந்தபடி செல்லும். இவற்றின் பயணம் முழுவதும் தாரைப் பொறிமுறையால் இயக்கப்படுகிறது. ஒரு ஜெட் விமானம்போல என்று வைத்துக் கொள்ளலாம். ‘ப்ரமோஸ்’ (BrahMos) என்பது இந்தியாவின் பிரபலமான குரூஸ் ஏவுகணைகளில் ஒன்று. ஆனால், பாலிஸ்டிக் ஏவுகணைகள் குரூஸ்போல் செயற்படுவதில்லை. முழுக்க முழுக்க இயற்பியல் அடிப்படையிலேயே அவை செயல்படுகின்றன. 

ஒரு பந்தைத் தூர எறிய வேண்டுமென்றால்,  சாய்ந்த கோணத்தில் அதிக விசை கொடுத்து மேல்நோக்கி எறிவோம் அல்லவா? எங்கே, எவ்வளவு தொலைவில் விழவேண்டும் என்பதைத் தீர்மானித்து, எறியப்பட வேண்டிய கோணத்தையும், அதற்குக் கொடுக்க வேண்டிய விசையையும் கணித்து பந்தை வான்நோக்கி எறிவோம். அப்பந்திற்குச் செயற்கையாகக் கொடுக்கப்படும் விசை ஆரம்பத்தில் மட்டும்தான். அப்புறம் எதுவுமில்லை. கொடுத்த உந்துவிசை சுழியமாகும்வரை பந்து புவியீர்ப்பை எதிர்த்து மேல்நோக்கிப் பயணிக்கும். ஓர் உச்சப் புள்ளியில் வேகமும் சுழியமாகும். வேகம் சுழியமானதும், புவியீர்ப்பு அதைக் கீழ்நோக்கி இழுக்கத் தொடங்கும். பந்து நிலத்தை நோக்கி விழ ஆரம்பிக்கும். ஆனாலும், வளைவுப் பாதையிலேயே கீழே விழும். பந்தின் மொத்தப் பயணப் பாதையும் ஒரு பரவளைவாகக் (Parabolic) காணப்படும். 

அதுபோலவே, பாலிஸ்டிக் ஏவுகணைகளும் சாய்ந்த கோணத்தில்தான் ஏவப்படுகின்றன. அதன் மொத்தப் பயணத்திற்கான  உந்துவிசையும் ஆரம்பத்தில் மட்டும்தான் கொடுக்கப்படும். அதன்பின், தீர்மானிக்கப்பட்ட பயணப் பாதையில், எந்தவித பொறிமுறை விசைகளும் இல்லாமல், புவியீர்ப்பின் உதவியுடன் அடைய வேண்டிய இலக்கைச் சென்றடையும். கிட்டத்தட்ட ஒரு விண்கலம் (Rocket) போலவே இதுவும் ஏவப்படுகிறது. 

விண்கலங்கள் அதிகளவிலான எரியாற்றலைப் பின்தள்ளி மேல்நோக்கிய உந்துவிசையைப் பெற்றுப் பறக்கின்றன, அவை விண்வெளிக்குள் நுழைந்ததும் எரியாற்றல் நிறுத்தப்படும். ஆனாலும் பயணம் தொடரும். பாலிஸ்டிக் ஏவுகணைகளும், விண்கலங்கள் (Rockets) போல, விண்வெளிக்கே அனுப்பப்படுகின்றன. 

“என்ன விண்வெளிக்கா? பூமியில் ஏவி, பூமியையே தாக்கும் ஏவுகணைகள், ஏன் விண்வெளிக்குச் செல்ல வேண்டும்?

பாலிஸ்டிக் ஏவுகணகளில், குறுகிய தூர ஏவுகணை (SRBM), நடுத்தரத் தூர ஏவுகணை (MRBM), கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) என்னும் மூன்று வகைகள் இருக்கின்றன. இவை மூன்றுமே விண்வெளிக்குச் (Space) சென்றுதான் மீண்டும் பூமியை நோக்கி வருகின்றன. சர்வதேச வானியல் அளவுப்படி, புவியிலிருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில், விண்வெளி (Space) ஆரம்பமாகிறது. இதைக் ‘கார்மன் கோடு’ (Karman Line) என்பார்கள். 100 கிலோமீட்டர் மேலே இருக்கும் இந்தக் கார்மன் கோட்டைத் தாண்டிச் சென்றால், விண்வெளிக்குள் நுழைவதாகவே அர்த்தம். 

குறுகிய தூரம் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், 150 கிமீ முதல்  400 கிமீ வரை விண்வெளிக்குச் செல்கின்றன. கண்டம் தாண்டிக் கண்டம் பாயும் அதிதூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், 4500 கிமீ வரை விண்வெளிக்குச் சென்று திரும்புகின்றன. அதிக பட்சமாக, வடகொரியாவால் பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணை, 7000 கிமீ வரை மேலே சென்றது, சாதனை. 

இப்போது நீங்கள் இப்படிச் சிந்திக்கலாம். “உந்துவிசையுடன் விண்வெளிக்குச் செல்லும் ஒரு கலத்தின் விசை நிறுத்தப்பட்டால், அது சாட்லைட்கள் போலப் புவியைச் சுற்றிவர ஆரம்பிக்கும்.  சாட்லைட்கள் அனைத்தும், வெவ்வேறு ஒழுக்குகளில் (Orbit) அந்த வகையில்தான் புவியைச் சுற்றி வருகின்றன. அப்படியென்றால், விண்வெளிக்குள் (Space) நுழையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும், எந்த விசையும் கொடுக்கப்படாத நிலையில், புவியைச் சுற்றிவர வேண்டுமல்லவா? அவை எப்படி மீண்டும் வளிமண்டலத்தில் நுழைகின்றன? நுழைந்து இலக்கைத் தாக்குகின்றன?. 

மிகச்சரியான சிந்தனை. சாதாரணமாக நீங்கள் சொல்வது போலத்தான் நடக்க வேண்டும். இங்குதான், Ballistic என்னும் அறிவியல் பதத்திற்கான அர்த்தமே நமக்கும் கிடைக்கிறது. விண்கலங்கள் பூமியிலிருந்து நிலைக்குத்தாக (Vertical) விண்வெளிக்கு ஏவப்படுகின்றன. புவியைச் சுற்றவேண்டிய ஒழுக்கிற்கான வேகம் முன்னரே தீர்மானிக்கப்பட்டு, அவ்வேகத்தில் அந்த அந்த ஒழுக்கில் சாட்லைட்களாக விடப்படுகின்றன. அங்கு நிலையான பாதையில் அவை புவியைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், பாலிஸ்டிக் ஏவுகணைகள், நிலைக்குத்தாக (Vertical) ஏவப்படுவதில்லை. சாய்ந்த நிலையில், பரவளைவுப் பாதையில் பயணம் (Trajectory) செய்வதற்கு ஏற்ப விண்வெளிக்கு (Space) ஏவப்படுகின்றன. அவற்றின் வேகமோ, பாதையோ, சாட்லைட்டுகளுக்கானதுபோல இருக்காது. ஆகக் குறைந்த ஒழுக்கான Low Earth Orbit (LEO) இல் வலம்வரும் சாட்லைட்கள், மணிக்கு 27,359 கிமீ வேகத்தில் சுற்றுபவை. பாலிஸ்டிக் ஏவுகணைகள், பெரும்பாலும் மணிக்கு 6100 கிமீ வேகத்தை அடையும். ஆனால், அதிமிகையொலி பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Hypersonic) மணிக்கு 24696 கிமீ வேகத்தில் பயணிப்பவை. ‘ஃபட்டா 1’ (Fattah 1) ஏவுகணை அதிகபட்சம் மணிக்கு 18522 கிமீ வேகம் எடுக்கும். 

இந்த வேக வேறுபாடுகளும், பரவளைவுப் பாதையுமே, பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்வெளியில் நிரந்தரமாகத் தங்க விடாமல், பூமியை நோக்கி மீண்டும் வரவைக்கின்றன. அவற்றின் திரும்பு பாதையையும், செயற்பாட்டையும், புவியீர்ப்பும், இயற்பியல் விதிகளுமே தீர்மானிக்கின்றன. இலக்கைத் தாக்குவதில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டால் மட்டும், செயற்கைப் பொறிமுறைகளால் தம்மைச் சரிப்படுத்திக் கொள்கின்றன. 

மொத்தத்தில், ஆளும் இச்சைகொண்ட அரசுகளின் கைகளில் அறிவியல் கிடைத்தால், அது அழிவுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனம்.

நன்றி: ராஜ் சிவா.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved