உணவுபஞ்சத்தைப் போக்குமா செயற்கை இறைச்சி!

உணவு தொடர்பான ஆய்வுகளில், உலகம் அடுத்தடுத்தக் கட்டத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. 2030 ல், முழுக்க முழுக்க ஆய்வகங்களிலேயே தயாரிக்கப்படும் செயற்கை இறைச்சிகள் விற்பனைக்கு வர உள்ளன.
செயற்கை இறைச்சி என்பது ஆய்வகத்தில் அல்லது தொழிற்சாலையில் உருவாக்கப்படும் இறைச்சி ஆகும். இது விலங்குகளிடமிருந்து பெறப்படவில்லை, ஆனால் விலங்கு செல்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. இது எதிர்கால உணவாக கருதப்படுகிறது, ஏனெனில் இது சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் மற்றும் உணவுப் பற்றாக்குறையை தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.
தற்போது விலங்குகளிடம் இருந்து நமக்கு இறைச்சி கிடைத்து வரும் நிலையில், செயற்கை இறைச்சிக்கான தேவை என்ன வந்தது என்கின்ற உங்கள் கேள்வி நியாயமானதுதான்.
ஆம், செயற்கை இறைச்சி அவசியம் என்ற காலகட்டத்திற்கு வந்து விட்டோம். பூமி விரிவடையப் போவ தில்லை, அதிகமான விவசாய நிலங்களோ உற்பத்தியோ கிடைக்கப் போவதில்லை. மக்கள்தொகை பெருகி வருகிறது.
எனவே எல்லாருக்கும் உணவளித்தாக வேண்டும் என்கிறார், ஓ.ஆர். எஃப் ஜெனிட்டிக்ஸ் நிறுவனத்தின் புரதத் தொழில் நுட்பத்துறைத் தலைவர் அர்னா ருனாஸ்டாட்டிர்.
ஹைப்ரீட், மரபணு நீக்கப்பட்ட, மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட போன்ற தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத் தக் கட்ட பாய்ச்சலாக, செயற்கை இறைச்சிகள் சந்தைக்கு வரப் போகின்றன. இது சரியா? தவறா? என்பதைப் பார்ப்பதற்குப் பதில்,
இதில் மனிதன் வாழ்வதற்குப் போதுமான சத்துக்கள் உள்ளதா? அதுவும் சுகாதாரமான முறையில் கிடைக்கி றதா? என்பதைப் பற்றித்தான் இனி சிந்திக்க வேண்டும். அதுதொடர்பாக முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
உங்களால் இனி ஒருகாலமும் பின்னோக்கிப் போக முடியாது. முன்னேறித்தான் செல்ல வேண்டும். எதிரில் வரும் கால மற்றும், உணவு மாற்றத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதற்குப் பெயர்தான் தகவமைத்துக் கொள்ளல் என்பது.
இதோ மீண்டும் அர்னாருனாஸ் டாட்டிர் கூறுவதைக் கேளுங்கள்,
ஆய்வுக்கூடத்தில் இறைச்சியை உருவாக்குவதன் அடிப்படை என்னவென்றால், காலப்போக்கில் இது நிலத்தின் மீதான பயன் பாட்டையும் தேவையையும் குறைக்கும். குறைவான ஆற்றல் இருந்தால் போதும். இதனால் (மீதேன் போன்ற) கழிவுகளும் வெகுவாக குறையும். சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பானது.
நாம் உண்கிற இறைச்சியை உருவாக்கும் விலங்குகளை வளர்க்கத் தீவனம் தேவை. அதற்கு விளை
நிலங்கள் தேவை. செயற்கை இறைச்சியில் அதற்கான வேலையில்லை. எந்த விலங்குகளையும் கொல்லத் தேவையில்லை. விலங்குகளின் ஸ்டெம் செல்களை எடுத்துக் கொண்டால் போதும்.
இந்தத் தொழில் நுட்பம், நல்ல செயல் திறனைக் கொண்டதாகவும், சுற்றுச் சூழலைப் பாதிக்காததாகவும் இருக்கிறது என்கிறார் அர்னா.
தேர்ந்தெடுக்கப்பட்ட, தரமான பார்லியையும், விலங்குகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களையும் இணைத்து, அதிலிருந்து செயற்கை இறைச்சி தயாரிக்கப்படுகிறது.
அதாவது, விலங்குகளின் ஸ்டெம் செல்லை பார்லி தாவரத்தில் செலுத்தி, வளர்ச்சிப் புரதம் எடுக்கும் இந்த செயல் முறை மலிவானது என்றும், பல மடங்கு அதிக உற்பத்திக்காக மாற்றியமைக்க ஏற்றது என்றும் கூறுகிறார்கள்.
இதுவரை இதை சோதித்துப் பார்த்ததில், விலங்குகளில் இருந்து பெறப்படும் இறைச்சிக்கும், இதற்கும் எந்த வித வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இதில் மனித உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஏற்கனவே, சிங்கப்பூரில் இது விற்பனைக்கு வந்து ட்டது. இப்போது, கடைகளில் விற்பனை செய்ய அமெரிக்காவும் அனுமதி கொடுத்துவிட்டது. அமெரிக்காவில் Upside Foods மற்றும் Good Meat ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு, செயற்கை இறைச்சிகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை மனிதர்கள் உணவாக உட் கொள்ளலாம் என்று அமெரிக்க விவசாயத்துறை, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
இப்போதைக்கு, செயற்கை கோழி இறைச்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில், மாடு, பன்றி என அனைத்து வகை இறைச்சிகளையும் செயற்கையாக தயாரிக்கும் முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.
இயற்கையாக கோழிகள் இருக்கும் போது எதற்கு செயற்கை இறைச்சி என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் கொடுக்கும் பதில், இது ஒரு ECO FRIENDLY PRODUCT. அதாவது சுற்று சூழலை பாதுகாக்கவும், நிலையான எதிர்காலத்திற்கும் இது அவசியம் என்கிறார்கள்.
நன்றி:பெரியார் சரவணன்.