முதலைக்கு பறவை தோழன், பூச்சிக்கு எறும்பு தோழன், இந்த மனிதனுக்கு?

மனிதர்கள் எப்படி யாருடைய உதவியுமின்றி வாழமுடியாதோ, அதேபோல் தான் சில உயிரினங்களுக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றன. இயற்கையில் இவற்றிற்கிடையே ஒரு ஒப்பந்தம் உண்டு. இதை நாம் “Co-Evolutionary Deal” என்றும் அழைக்கலாம்.
முதலையைக் கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஆனால், ஒரு சின்னஞ்சிறு பறவை மட்டும் முதலையின் வாழ்நாள் தோழன். ‘புளோவர்’ என்ற சின்னஞ்சிறு பறவைக்காக முதலைகள் வாயைத்திறந்து காத்துக்கொண்டிருக்கும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
ஆம், முதலையின் பல் டாக்டரே இந்தப் 'புளோவர்' என்ற சின்னஞ்சிறு பறவை தான். எந்த உயிரினத்தைக் கண்டாலும் இரையாக்கக் காத்திருக்கும் முதலை, புளோவரைக் கண்டால் மகிழ்ச்சியாக வாயைத் திறக்கும். தன்னைச் சாப்பிட்டு விடுமோ என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் புளோவர் முதலையின் பற்களில் அமரும். பற்களின் இடுக்குகளில் சிக்கியிருக்கும் இறைச்சித் துணுக்குகளை (Meat Scraps) கொத்திக் கொத்தி தின்னும். முதலையின் பற்கள் முழுவதும் இப்படிச் சுத்தம் செய்து முடிக்கும்போது புளோவரின் வயிறும் நிரம்பிவிடும். பற்கள் சுத்தமாகி நோய்த் தொற்று இல்லாமல் முதலை ஆரோக்கியமாக இருக்கும்.
முதலை வாயை மூடிமால், பறவை க்ளோஸ். ஆனால் அதன்பின் முதலையின் பல் சுத்தமாகாது. அதனால் முதலை அமைதியாக இருப்பதும், பறவை பயப்படாமல் இருப்பதும் இரண்டின் பரஸ்பர நன்மையை உள்ளடக்கிய ஒப்பந்தம் – முதலை பறவையை உண்பதில்லை; பறவை முதலையின் பற்கள் சுத்தமாக வைத்திருக்கும். இது "Cleaner Mutualism" எனப்படும் உறவு வகை.
இலைப்பூச்சிகள் (Aphids) சுரக்கும் இனிப்பான திரவமான Honeydew-ஐ எறும்புகள் மிகவும் விரும்புகின்றன. அந்த இனிப்பு சாறு கிடைக்க, எறும்புகள் இலைப்பூச்சிகளை தனது பெட்ஸ் போல வளர்க்கின்றன. அவற்றை வேட்டையாடுபவர்கள் (புழுக்கள், பூச்சிகள்) இருந்து பாதுகாக்கின்றன, சில சமயங்களில் தங்கள் கூண்டுக்குள் கூட இழுத்துச் சென்று பாதுகாப்பளிக்கின்றன.
எருது, வரிக்குதிரையின் முதுகில் அமர்ந்திருக்கும் எருதுகொத்தி (Oxpecker) பறவையைப் பார்த்திருக்கிறீர்களா? எருதின் முதுகில் உள்ள புண்களில் இருந்து வரும் புழுக்களைத் தின்பதற்காகவே இப்பறவை அமர்ந்திருக்கிறது. எருதும் தன் புண்ணிலிருந்து புழு வெளியேறினால் நல்லதுதானே என்று நினைக்கும்! அது மட்டுமல்ல, காடுகளில் ஏதாவது ஆபத்து என்றால் பறவைகள் சீக்கிரமாகவே உணர்ந்துகொண்டு, சத்தமிட்டபடி பறந்துவிடும். ஆபத்தை உணர்ந்து எருதும் சுதாரித்து, தப்பி ஓடிவிடும். அதனால், உயிர் காக்கும் தோழனுக்கு உணவளிக்கிறது எருது!
கோதுமை ஒரு புல்லினம். உலகில் மிக செழிப்பான காடுகள், நதிக்கரைகள் அமைந்த இடங்களில் இன்று கோதுமை மட்டுமே விளைகிறது. அதை உண்ணவரும் பறவைகள், எலிகள், பூச்சிகள் மருந்தடித்து கொல்லபடுகின்றன. எங்கிருந்தோ நதிநீரை அணைகளை கட்டி இழுத்துவந்து அதற்கு நீரை பாய்ச்சுகிறார்கள். இரவும் பகலும் தானியங்களின் பணியாட்களாக உலகின் சரிபாதி மக்கள் பணிபுரிகிறார்கள். தானியம் இனபெருக்கம் செய்ய விதைநெல்லை பாதுகாக்கிறார்கள். நோய்வாய்ப்படாமல் இருக்க பலகோடி டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.
ஆக இந்த டீலில் எஜமானன் யார், பணியாள் யார்?
ஒரே தாவலில் உணவுசங்கிலியின் உச்சத்திற்கு கோதுமையும், அரிசியும், பார்லியும், மக்காசோளமும் சென்றுவிட்டன. உலகிலேயே மிக உன்னதமான உயிரினத்தை பணியாளாக, காவலனாக அடையும் பாக்கியத்தையும் அவை பெற்றுவிட்டன.
வேட்டைகாலத்தில் மனிதனே உணவுச்சங்கிலியின் ராஜா. விவசாயகாலகட்டத்தில் கோதுமையும், அரிசியும், பார்லியுமே உலகின் ராஜா. இயற்கை விந்தையானது.