கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை!

“கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை”.
இதுவரை உலகில் வாழ்ந்த, இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் எவரும் காணாத ஒரு புதிய நிறத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்நிறத்தைக் கண்டுபிடிக்கும்போது, ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர்கள் மட்டுமே அதைப் பார்த்திருக்கிறார்கள்.
இல்லை.. இல்லை.. உணர்ந்திருக்கிறார்கள்.
“என்ன நிறத்தை உணர்ந்தார்களா?
நிறத்தை எப்படி உணர முடியும்?
பார்க்கத்தானே முடியும்?”.
இப்போது உங்களை நான் குழப்புகிறேன் அல்லவா?
அதற்கென்ன, குழம்பிய குட்டையில் ‘ஓலோ’ (Olo) மீன் பிடித்துத் தருகிறேன், வாருங்கள்.
விழியின் பார்வைத் தொழிற்பாடுபற்றி உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்?.
பார்க்கப்படும் பொருளிலிருந்து வரும் ஒளி, கண் வில்லைகளினூடாகத் (Lenes) தலைகீழ் பிம்பமாகி விழித்திரையில் பட்டுப் பின்னர், பார்வை நரம்புகளால் மூளைக்குக் கடத்தப்பட, அப்பொருளை நேராக்கிக் காட்டுகிறது மூளை. இப்படித்தான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். இந்த வரைக்குமான செயற்பாடுகள் நாம் அறிந்ததுதான்.
பொருள், கண் வில்லை, விழித்திரை, பார்வை நரம்புகள், மூளை அவ்வளவு தான். இந்த ஐந்தும்தான் பார்வைக்கான முக்கிய அம்சங்கள் என்று நினைப்பீர்கள்.
ம்ஹூம்… அதுதான் இல்லை. அவை மட்டுமில்லை. இன்னும் இரண்டு மிகமுக்கிய பகுதிகளும் இருக்கின்றன. அவை விழித்திரையை ஒட்டியே இருப்பதால், பெரிதாகக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனாலும், உங்களில் சிலர் நிச்சய்ம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
விழித்திரையில் (Retina), ‘கூம்புகள்’ (Cones), ‘கோல்கள்’ (Rods) என்னும் இருவகையான ஒளியை உணரும் கலங்கள் (Photoreceptors) இருக்கின்றன. ஒரு பொருளைத் துல்லியமாகப் பார்ப்பதற்கு இவையிரண்டுமே முக்கியத் தேவையாகின்றன. இதில் ‘கோல் கலங்கள்’ (Rods), இரவு அல்லது மங்கலான ஒளியில் நாம் பார்ப்பதற்கு உதவுகின்றன. ஆனால், இவற்றால் நிறங்களை வேறுபடுத்தி அறிய முடியாது. இயக்கத்தை இவையே கண்டறிகின்றன. அதிகச் செயல்திறண் கொண்ட இவை, இருட்டிலும் செயல்படக் கூடியவை. கிட்டத்தட்ட 12 கோடி (120 மில்லியன்) கோல் கலங்கள், விழித்திரையின் வெளிப்பகுதியில் செறிந்து காணப்படுகின்றன. ஆனால், கூம்புகள் வேறு வகையானவை.
பொருட்களின் நிறங்களைத் துல்லியமாகப் பிரித்தறிந்து பார்ப்பதற்கு அடிப்படைக் காரணியாய் இருப்பது கூம்புக் கலங்கள்தான் (Cones). நாம் காணும் இலட்சக் கணக்கான நிறவேறுபாடுகளைப் (Colour Vision) பிரித்தறிய உதவுபவை இவையே. வெளிச்சத்தில் மட்டுமே உள்வாங்கும் திறன் (Photopic Vision) கொண்டவை.
கிட்டத்தட்ட, 70 இலட்சம் கூம்புகள் , விழித்திரையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கின்றன. ஒளியலைகளை, காணும் ஒளி (Visible Light), காணா ஒளி (Invisible light) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். காணும் ஒளி, ஏழு நிறங்களைக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதில், நீளமான அலைநீளம் கொண்ட (L) சிவப்புக் கதிர்களும், நடுத்தர அலைநீளம் கொண்ட (M) பச்சைக் கதிர்களும், குறுகிய அலைநீளம் கொண்ட (S) நீலக் கதிர்களும் முக்கியமானவை. இந்த மூன்று நிற ஒளியலைகளையும் பிரித்தறியக் கூடியதாக, மூன்று வகைகளாகக் கூம்புகள் அமைந்திருக்கின்றன. ‘L கூம்புகள்’ (L Cones) நீண்ட அலைநீளமுடைய சிவப்பு ஒளியையும், ‘M கூம்புகள்’ (M Cones) நடுத்தர அலைநீளமுடைய பச்சை ஒளியையும், ‘S கூம்புகள்’ (S Cones) குறுகிய அலைநீளமுடைய நீல ஒளியையும் உள்வாங்குகின்றன. இம்மூன்று வகைக் கூம்புகளும் பலவிதங்களில் கலந்து இலட்சக்கணக்கான நிறங்களை நமக்குக் காட்டுகின்றன. இந்தக் கூம்புகளின் வழியே ஒளியைச் செலுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வைச் செய்து கொண்டிருந்தபோதுதான், யாருமே பார்க்காத அந்த நிறத்தை கண்டுபிடித்தார்கள். அதற்கு ‘ஓலோ’ (Olo) என்று பெயருமிட்டார்கள். அது செறிவான நீலமும், பச்சையும் கலந்த (Saturated Blue-Green) ஒரு நிறமாக இருந்தது. ஆனாலும், நீங்கள் கற்பனை செய்யும் நிறம் இல்லை. மனிதர்களால் இதுவரை பார்க்கப்படாத ஒரு தனித்துவமான நிற அனுபவத்தை வழங்கும் புத்தம்புதிய நிறம் ஓலோ.
19 ஏப்ரல் 2025 அன்று, பிபிசி செய்தியில் ஓலோ நிறத்தின் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டு, உலகெங்கும் பரவியது. அமெரிக்காவின் கலிபோர்னியாப் பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம் இரண்டின் ஆராய்ச்சியாளர்கள், ‘ஓஷ் விஷன் சிஸ்டம்’ (Oz Vision System) என்ற சிறப்பு லேசர் தொழில்நுட்பத்தினூடாக அந்த ஆய்வைச் செய்தார்கள். விழித்திரையில் உள்ள, நடுத்தர அலைநீளங்களை உள்வாங்கும், M கூம்புக் கலங்களை (M cones) லேசர் கதிர்களால் தூண்டிப் பார்த்தனர். அப்போது, அவர்களின் மூளை ஒரு தனித்துவமான நிற உணர்வைப் புரிந்துகொள்ளும் அனுபவம் ஏற்பட்டது, ஆய்வாளர்கள் ஐந்து பேருக்கும் புதுவித நிறத்தை உணரும் ஒரேவிதமான அனுபவமாக இருந்தது. அந்த நிற உணர்விற்கே, ‘ஓலோ’ என்று பெயரிட்டார்கள். சொல்லப்போனால், அந்த நிறம் பார்க்கப்படுவதற்குப் பதில், உணரப்பட்டது என்றே சொல்லலாம். ஆனாலும், மனிதப் பார்வை உணரக்கூடிய நிறமாலையில் (Visible Spectrum) உள்ள ஒரு தனித்துவமான அலைநீளக் கலவையை அது கொண்டிருப்பதாகக் கருதப்படுவதால், மனிதனால் அதைப் பார்க்கவும் முடியும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர். ஆனாலும், இன்றுள்ள நிலையில் அதை யாரும் பார்க்க முடியாது. அந்த ஆய்வில் பங்கேற்ற மூன்று UC Berkeley ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இரண்டு வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகிய ஐவர் மட்டுமே பார்த்துள்ளனர். சிறப்பு லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த நிறத்தை அவர்களால் அனுபவிக்க முடிந்தது. அதை உருவாக்குவதற்கு மிகவும் சிக்கலான, கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சூழல் தேவைப்படுகிறது. அதனால் பொதுமக்களோ, வேறு எவரோ ஓலோவைப் பார்க்க முடியாது. அத்துடன், ஓலோவின் கண்டுபிடிப்பு இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. அதை மற்றவர்களும் அனுபவிப்பதற்கு மேலும் ஆய்வுகள் தேவை.
தற்போதைய தகவல்களின்படி, அந்த நிறத்தை முழுமையாக அனுபவிக்கச் சிறப்பு சூழல்களும், தொழில்நுட்பங்களும், குறிப்பாக மேம்படுத்தப்பட்ட ‘ஓஷ் விஷன் சிஸ்டமும்’ தேவைப்படலாம்.
அந்த நிறத்தின் தனித்தன்மை குறித்து அறிவியலாளர்கள் விவாதித்து வருகின்றனர், அது உண்மையில் ஒரு ‘புதிய’ நிறம்தானா, இல்லை, ஏற்கனவே அறியப்பட்ட நிறங்களின் தனிப்பட்ட கலவையா, என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.
நன்றி: ராஜ் சிவா.