அதிகரிக்கும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம்!

மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே மனிதர்கள் மருத்துவ நோக்கங்களுக்காக தாவரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கி.மு.3ம் நூற்றாண்டில் எகிப்து நாட்டைச் சேர்ந்த இம்ஹோடெப் என்பவர் தான் வரலாற்றில் முதல் மருத்துவர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், நோய்களைப் போக்கும் நோக்கங்களுக்காக, தாவரங்களின் முதல் பயன்பாடு பிரான்சில் உள்ள லாஸ்காக்ஸ் குகை ஓவியங்களில் காணப்படுகிறது. இதன் காலம் ரேடியோ கார்பன் ஆய்வின்படி, கி.மு-13,000 முதல் 15,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
சீனாவிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் பரவலாகக் காணப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட மருத்துவ முறைகள் மூலிகைகளின் பெயர்களோடு ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதுத்தவிர, மூலிகை மருத்துவ அறிவுத் தொடர்பாக, சமூகங்கள், குடும்பங்கள், பழங்குடியினர் என பிறருக்கும் தகுந்த பயிற்சியாளர்கள் மூலம் கற்பிக்கப்பட்டும் வந்திருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.
இப்படி, இயற்கை மருத்துவம் பரவலாக பின்பற்றி வந்த காலகட்டத்தில் மனிதனின் சராசரி ஆயுட் காலம் எவ்வளவு இருந்தது என்பதைப் பொறுத்து இயற்கை மருத்துவத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.
எப்போதுமே மனித சுபாவம் என்பது, இன்று இருப்பதை இகழ்ந்தும், இன்று இல்லாததைப் புகழ்ந்தும் பேசும் பழக்கம் உடையவனாகவே காணப்படுகிறான். அதிலும் தமிழர்கள் முன்னோர்களை புகழ்வதுவும், முற்காலத் தில் பண்பாடுகள் ஓங்கியிருந்ததாகவும் பெருமை பேசுவதில் சிறந்தவர்கள். அந்த அடிப்படையில், அந்தக் காலத்தில் தமிழர்கள் நீண்ட வாழ்வு வாழ்ந்தார்கள் என்கின்ற கற்பிதமும் ஒன்று.
அந்தக் காலத்தில் தமிழர்கள், பழயக் கஞ்சியைக் குடித்துக்கொண்டு, கடின வேலைகளையும் செய்துக் கொண்டு 150 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் என்றும், நம் முன்னோர்கள் இப்போதை விட, எந்தவிதக் கஷ்டங்களும் இல்லாமல், நீண்ட காலம் சுக வாழ்வு வாழ்ந்தார்கள் என்றும், அதற்குக் காரணம் அந்தக் காலத்துச் சாப்பாடுகள்தான் அவர்களை வைத்தியர்களிடம் செல்லாமல் தடுத்து நீண்ட காலம் வாழ வைத்தது என்றும், நீங்கள் சந்திக்கும், பத்துப் பேரில், பழம் பெருமைப் பேசும் எட்டுப்பேர் உதிர்க்கும் முத்துக்கள் தான் மேற் சொன்னவைகள்.
இவர்கள், எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல், வாய்க்குவந்த பொய்யை எல்லாம் மிக இயல்பாக பேசிவிட்டு கடந்து விடுவார்கள். இந்தக் கூற்றுகள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை நாமும் ஆராயாமல் அந்தப் பொய்யை அப்படியே ஏற்றுக் கொள்வோம்.
ஆம், இவைகள் எல்லாமே வெறும் பொய்களே! உண்மையை யோசிக்காது வெறுமனே அள்ளி வீசப்படும் கற்பனைகள். அப்படியாயின்,
உண்மை நிலவரம் என்ன? அந்தக் காலம் என்றால், ஒரு 100 வருடம் பின்னோக்கிச்செல்வோம்.
அந்தக் காலத்தில் அதாவது1920ல், மனிதனின் சராசரி ஆயுட் காலம் (வயது) வெறும் நாற்பதுக்கும் குறைவு தான்.
இந்தியாவில்,1800 முதல் 1919 வரை ஒரு மனிதனின் ஆயுட்காலம் 25 வருடங்கள் மட்டுமே.
1920-21, இந்தக் காலக்கட்டத்தில்தான் ஸ்பானிஷ் ஜுரத்தினால் 70 இலட்சம் மக்கள் கொத்துக் கொத்தாக பலியானார்கள். ஆனால், வசதி வாய்ப்புகள் மற்றும் மருத்துவம் முன்னேறிய மேலை நாடுகளில், சராசரியாக, 1920 இல் 50வருடங்கள் வாழ்ந்தார்கள். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மக்கள் 25 வருடம் மட்டும்தான் வாழ்ந்தார்கள்.
அந்தக் காலத்தில் எங்காவது ஒருவர் 100 வயது வாழ்ந்தும் இருக்கலாம், கிராமத்தில் ஒருவரையோ இருவரையோ வைத்து மொத்த நிலமைகளை அளவிடுவது அறிவியலுக்கு முரணானது.
அதே சமயம் அந்தக்காலத்தில் பலர் பிறக்கும் போதும், பலர் குழந்தைப் பருவத்திலும், இறந்தும் விடுவார்கள் என்பதுதான் உண்மை. அதுவும் பேரு கால மரணங்கள் அதிகமாக இருந்தது நமது நாட்டில்தான்.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில், பெண் தனது 15 வது வயதிலேயே பிள்ளைப்பெறத் தொடக்கி விடுவாள் 12 வருடங்களில் 7 பிள்ளைகளைப் பெற்று விடுவாள். அவர்களில் இரண்டு பிறந்தவுடனே மரணிக்கும் மற்றது, 5 வயதில் தொற்று நோய்கள் வந்து இறக்கும்.
இன்னொன்று 15 வயதில், பேய் அடித்துப் போய்ச் சேரும். நாலாவது 40 வயதில் அம்மை வந்து மடியும். மீதி இரண்டில் ஒன்று 55 வயதிலும் இன்னொன்று 60 வயது வரையும் உயிர் வாழும். ஏழாவது பிள்ளையைப் பெறும் போது தாய் மரணம் அடையும். மொத்தத்தில் ஏழு பிள்ளைகளும் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் 175 வருடங்கள். ஆகவே,சராசரியாக ஒவ்வொறுவரும் 25 வயதுவரைத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஏன் 25 வயதிலேயே மரணிக்கிறார்கள் அதற்குக் காரணம் என்ன ?
ஒரு மனிதனோ அல்லது மனிதக் கூட்டமோ அதன் ஆயுட்காலம் என்பது, முற்றிலும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.
பண்டைய காலங்களில், அசுத்தமான கிராம, நகர்ப் புறச்சூழல், மாவுப் பொருட்கள், வெல்லம் போன்ற ஆரோக்கியமற்ற உணவு வகைகள், மந்தமான, தரமற்ற விவசாய உற்பத்திகள், பாதுகாப்பற்ற வாழ்க்கை முறை மனித, மிருகக்கழிவுகள் குவிந்து மாசு படிந்த சுற்றுச்சூழல், உணவு மற்றும் பண்டங்களை சுகாதாரமாக பாதுகாத்து வைக்கும் வசதி இல்லாமை, மற்றும் தகுதியற்ற வீட்டுவசதி, அழுக்கான குடிநீர், உடல், உறுப்புகளை பராமரிக்காமை, பொருத்தமற்ற கல்வி, கடினமான போக்குவரத்து, எட்டாத பொது சேவைகள், நோய்கள் பற்றிய அறிவின்மை, மருத்துவவசதி இல்லாமை முதலியன ஆயுளைக் குறைத்ததற்கான காரணிகள் எனலாம்.
அந்தக் காலத்தில், இந்தக் காலத்தை போலவே, இதேநோய்கள் இருந்தனவா என்றால், இன்னும் கூடுதலாகவே இருந்தன.
அது மட்டுமல்லாமல், மனிதனின் அறியாமையினால், முனி, அம்மன் என்று அப்போது பேய்கள், பிசாசுகள் என ஊரெல்லாம் சுற்றித்திரியும். ஒருவருக்கு மாரடைப்பு வந்து இறந்தால் அது பேயடித்ததாகிவிடும். பக்க வாதம் வந்து படுத்து இறந்தால் அது முனி அடித்தது என்று முடிவு கட்டி விடுவார்கள். அந்தமுனி வாழும் மரம் பக்கம் போவதையே விட்டுவிடுவார்கள்.
அம்மை வந்தால் அம்மன் தந்தது என்று வேப்பமிலையை சுற்றிப் போட்டு நேர்த்திக்கடன் வைப்பார்கள். தெய்வத்திற்கு நேர்த்திக் கடன் வைத்து, செய்வதாகச் சொல்லிப் பின்னர் செய்ய மறந்த சில குற்றங்களுக்குமே பல நோய்கள் பலருக்கு வந்திருக்கின்றது.
இப்படியாக, வேறு பல நோய்கள், அவயக் குறைபாடு பிரச்சனைகள் எது வந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்துக் கொள்ளக்கூடிய அறிவு அவர்களுக்கு இல்லாத படியால், இலகுவாக இவை எல்லாவற்றிற்கும் காரணம் அந்தக்கடவுள், இந்தப்பிசாசு, இவரின் முற்பிறப்பு, கர்மவினை என்று முடிவு செய்து, அதற்கான பிரார்த்தனைகள், பரிகாரங்கள், பூசைகள், மந்திரங்ள் என்று குருக்கள் மாரிடமும், மாந்திரீகர்களிடமும் சென்று பணத்தை விரயம் செய்வார்கள்.
இவற்றை விட, புற்று நோய் காரணமாக இரத்த வாந்தி எடுத்தால், மனோ வியாதி ஏற்பட்டு விழுந்து இறந்தால், மன அழுத்தம் வந்து தற்கொலை செய்தால், கால், கை விளங்காது வீதியில் கிடந்து இறந்தால், எலும்புருக்கி நோயினால் உருக்குலைந்து போய் மரணித்தால், இவற்றுக்கான உண்மையான மூல காரணங்களை அறிந்து வைத்தியம் செய்ய இயலாது,
மூட நம்பிக்கையில் மூழ்கி இருந்து, இப்படி எல்லாம் நடப்பது தமது எதிராளிகள் தங்களுக்கு எதிராகச் செய்த செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம், வைப்பு என்பதுதான் காரணம் என்று அதற்கான நிவாரண ங்களுக்கு மாந்திரீகர்களிடம் நாடுவார்கள்.
அந்தக் காலத்தில் ஒரு கொள்ளை நோய் வந்து விட்டால் முழு ஊரையே அழித்து விடும். இப்பொழுது அப்படி யல்ல. சுகாதாரமானசூழல், மேன்மையான மருத்துவ வசதி, சுத்தமான நீர், ஆரோக்கியமான உணவு வகைகள். பொருத்தமான கல்வி, தேவையான பொது வசதிகள், இவைகள் எல்லாம் நமது ஆயுள் காலத்தை மேலும், மேலும் உயர்த்திக் கொண்டு போகின்றது.
ஆகவே, அறிவியல், சுகாதாரம், மருத்துவம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் தான் மக்கள் அதிக ஆயுளுடன் வாழ்கின்றாரகள்.
எனவே, அந்தக் காலத்தில் எல்லாம் என்று ஆரம்பிக்கும் பிற்போக்குவாதிகளின், எந்த ஆதாரமும் அற்ற மோசடி வார்த்தைகளை நம்பாதீர்கள். இப்பொழுது 72.8 இருக்கும் உலக மனிதனின் சராசரி ஆயுள் காலம் விரைவில் 83.0 குப் போய்விடும். அல்லது, அதற்கு மேலேயும் போகலாம்.
மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியினால் முன்னர் வந்த கொள்ளை நோய்களெல்லாம் அடங்கி விட்டன. மனிதனின் சராசரி ஆயுட் காலம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அடுத்த நூறு ஆண்டில்
150 வயதைத் தொடவும் வாய்ப்பிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நன்றி: பெரியார் சரவணன்.