சர்க்கரை வியாதிக்கு நாட்டுச் சர்க்கரை தீர்வல்ல!

நாட்டுச் சர்க்கரைக்கும் வெள்ளைச் சர்க்கரைக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்த தவறான கருத்துக்கள் மக்களிடையே பரப்பப்படுகிறது. இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகள் முதற்கொண்டு, நாட்டுச் சர்க்கரையை சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இதுத் தொடர்பாக, நாட்டுச் சர்க்கரை டீ, நாட்டுச் சர்க்கரை காப்பி மற்றும் பல்வேறு இனிப்பு வகை தின்பண்டங்களும் நாட்டுச் சர்க்கரையில் தயாரிப்பதும், உண்பதும் ஆரோக்கியமானது என்று நம்பவைக்கப் படுகின்றனர்.
அதுதொடர்பான சந்தைகளும் உருவாக்கப்படுகின்றன. நாட்டுச் சக்கரை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தவறாக நம்ப வைக்கப்படுவதோடு அதையே கவுரவமாகவும், உயர் குடிகளின் உணவுப் பண்பாடாகவும் கட்டமைக்கின்றனர்.
மேலும் இந்த, இரண்டு சர்க்கரைகளைப்பற்றியும் அறிவியல் என்ன சொல்கிறது, மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இரண்டு சர்க்கரைகளும், ஒரே மாதிரியான மூலங்களிலிருந்து தான் பெறப்படுகிறது. வெள்ளைச் சர்க்கரையை விட, நாட்டுச் சர்க்கரை உடல்நலத்திற்கு நல்லது என்பதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது.
நாட்டுச் சர்க்கரை மற்றும் வெள்ளைச் சர்க்கரை, இரண்டிலுமே கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சமமாகவே உள்ளது. நாட்டுச் சர்க்கரையில் இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை காணப்படுகிறது. அதே சமயம், இந்த ஊட்டச் சத்துக்களின் அளவு மிக மிகக் குறைவான அளவில் தான் உள்ளது. அதனால் மனித உடலுக்கு எந்தப் பயனும் ஏற்பட்டிருப்பதாக எந்த ஆய்வு முடிவுகளும் தற்போது வரை இல்லை.
வெள்ளைச் சக்கரையில் எந்தளவிற்கு தீங்கு உள்ளதோ அதே அளவிற்குத்தான் நாட்டுச் சக்கரையிலும் தீங்குஉள்ளது. அதே நேரத்தில் நாட்டுச் சக்கரையில் நீங்கள் எதிர்பார்க்கும் சுத்தமோ, சுகாதாரமோ இருக்காது. அதன் பேக்கிங் முறைகளும், கையாளும் விதமும், உற்பத்தியை நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
ஆனால், வெள்ளைச் சர்க்கரை அப்படியல்ல, அது பல்வேறு ஆய்வுகளுக்கும், பல்வேறு பரிசோதனைகளுக்கும், அதன் சுகாதாரத்தன்மை உட்படுத்தப்பட்ட பிறகு தான் சந்தைக்கே வெளியே வரும்.
மேலும், நமது உணவுப் பயன்பாட்டிற்கு வெள்ளைச் சர்க்கரையே ஏற்றது. நீங்கள் தயாரிக்கும் எந்த உணவும் பொருளில் வேண்டுமானாலும் இதைச் சேர்க்கலாம். இதனால் உங்களின் சமையல் மற்றும் உணவின் தன்மையும், சுவையும் மாறாது.
அதே நேரத்தில் நீங்கள் தயாரிக்கும் உணவில் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துப் பாருங்கள். உங்கள் சமையலின் மொத்த சுவையும் பாதிக்கப்பட்டு, இறுதியில் அது நாட்டுச் சர்க்கரையின் சுவைக்கே வந்து விடும்.
உதாரணத்திற்கு நீங்கள் தயாரிக்கும் டீயிலோ, காபியிலோ நாட்டுச் சர்க்கரையை கலந்து பருகிப் பாருங்கள். அதில் டீயின் அல்லது காபியின் ஒரிஜினல் சுவையை நீங்கள் அனுபவிக்க முடியாது. நீங்கள் கலந்த நாட்டுச் சக்கரையின் சுவைதான் அதில் மேலோங்கியிருக்கும்.
ஆனால், வெள்ளைச் சர்க்கரை அப்படியல்ல, அதை நீங்கள் எதில் கலந்தாலும் அந்த உணவின் ஒரிஜினல் சுவை பாதிப்பதில்லை. அதேபோல, வெள்ளைச் சர்க்கரையில், நாட்டுச் சர்க்கரையைப் போல் ஈரப்பதம் இருப்பதில்லை. எனவே இதைக் கையாள்வதும், பயன்படுத்துவதும், சேமிப்பதும் எளிமையாக இருக்கிறது.
அதே நேரத்தில், இதை மருத்துவ முறையில் பார்க்கும் போது, இரண்டின் மாலிக்யூரும் ஒன்று தான். இரண்டின் அடிப்படையும் மொலாசஸ் தான். நாட்டுச்சர்க்கரையின் கிளைசெமிக் குறியீடு (GI) சுமார் 64 ஆகவும், வெள்ளை சர்க்கரையின் (GI) சுமார் 65 ஆகவும் உள்ளது.
இதன் பொருள், நாட்டுச் சர்க்கரை உடல் நலத்திற்கு நல்லது என்பதெல்லாம் எதுவும் கிடையாது. இரண்டும் ஒரே வகையில்தான், விரைவான முறையில் இரத்தத்தில் சர்க்கரையை கலந்து அதிகப்படுத்துகிறது.
மற்றபடி, நம்ம இயற்கை வைத்தியன், நாட்டுச் சர்க்கரை உடல் நலத்திற்கு ரொம்ப நல்லது என்று பரப்பும் செய்திகள் அத்தனையும் பொய்யானதுதான்.
நன்றி: பெரியார் சரவணன்.