சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்திய சமூகத்தில் புரையோடிப்போயுள்ள வருணாசிரம படிநிலைப்பாகுபாட்டை ஓழிக்கவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சுரண்டள்களுக்கு முடிவுகட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலான அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்கு அடிக்கோல் இடுவதற்கான வாய்ப்பாக எதிர்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பை பயன்படுத்திக்கொள்வது குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் சமூகநீதிக்கூட்டமைப்பு சார்பில் நாளை (06.07.2025) மதுரையில் நடைபெறவுள்ளது.
டிஎன்டி மக்கள் பிரகடனமும், ஜாதிவாரி கணக்கெடுப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி, தோழர் தியாகு, தோழர் ஏ.சி.பாவரசு, தோழர் விநாயகம், தோழர் மதியவன் இரும்பொறை, தோழர் மருது பாண்டியன் உள்ளிட்ட இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர்களோடு தொட்டிய நாயக்கர் சமுதாயத் தலைவர்கள் மு.பழனிச்சாமி, பி.இராமராஜ் மற்றும் சமூகநீதிக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பிற சமுதாயத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மதுரை மீனாட்சி கல்லூரி அருகிலுள்ள கண்ணன் தேவி மஹாலில் மொத்தம் நான்கு அமர்வுகளாக இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணி முதல் 11 மணி வரை டிஎன்டி மக்கள் பிரகடனம் குறித்து விவாதமும், தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.
இதனைத்தொடர்ந்து 11.15 மணிமுதல் முதல் மதியம் 1.30 வரை நடைபெறும் இரண்டாவது அமர்வில், முழுமையான ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்தும், அதில் சமுதாயங்களின் பங்களிப்பு குறித்தும், எதிர்காலங்களில் இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு சமூக நீதிக்கு எவ்வாறெல்லாம் அடிகோலாக ஆதாரமாக இருக்கும் என்பதை பற்றியும் அறிஞர் பெருமக்கள் விரிவாக விளக்குகின்றனர். மேலும், இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒரு வெற்றிகரமான சமூக மாற்றத்திற்கான நிகழ்வாகக்கருதி முழுமையான ஈடுபாட்டோடு சரியான புள்ளி விவரங்களை அளிப்பதற்காக ஒவ்வொரு குடிமகனும், சமுதாய அமைப்புகளும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு கருத்துக்கள் முன்வைக்கப்படும்.
மதிய உணவு இடைவேளைக்குப்பிந்தைய மூன்றாவது அமர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். இதில் எல்லா சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் அவரவர் சமுதாய மக்களுடைய பிரச்சனைகள் குறித்தும், இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் பங்கேற்கச் செய்துள்ள முன் ஏற்பாடுகள் குறித்தும் விவாதம் செய்யப்படும்.
இறுதியாக மாலை 4:15 மணிக்குத் தொடங்கும் நான்காவது அமர்வில் தலைவர்களுடைய அறிவுரைகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றலுடன் கருத்தரங்கம் நிறைவுபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கம் குறித்துப்பேசிய தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, இந்திய அரசியலில் ஒரு நல்ல புரிதலை உருவாக்கவும், இதுவரை சமூக நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் சமூக நீதி பெற்றுத் தருகின்ற ஒரு பெரிய முன்னெடுப்பாக இக்கருத்தரங்கம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசியல், சமூகச்சூழல் குறித்தான பல அறிய தகவல்களை வழங்கக்கூடிய சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்கும் இக்கருத்தரங்கம், இளம் தலைமுறையினருக்கு இந்தியச்சமூகம் குறித்தான ஒரு தெளிவான பார்வை கிடைக்கும் என்றார். சமூக மாற்றத்திற்கான, சமூகநீதிக்கான முன்னெடுப்பை எல்லா சமுதாயங்களும் ஒரே குரல் ஒருமித்த குரலில் ஒலிக்கின்ற வகையில் இதை வெற்றி பெறச் செய்ய அனைவரும் மனமுவந்து முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.