சைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்? கட்டாயம் இதைச் செய்யுங்கள்..

'நான் சுத்தமான வெஜிடேரியன். அசைவ உணவுகளை தொடக்கூடமாட்டேன்' என சிலர் பேசி நாம் கேட்டிருப்போம்.
அசைவ உணவுகளை அவர்கள் சாப்பிடாமல் இருப்பது அவர்களது தனிப்பட்ட உரிமை/விருப்பம். அதில் நாம் தலையிடப் போவதில்லை.
ஆனால், வெறும் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்குமா..?
நம் உடலில் எலும்புகள் மற்றும் பற்கள் ஆகிய இந்த இரண்டு உறுப்புகளின் முக்கிய பணிகளை விரிவாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாருக்கும் தெரியும்.
எலும்புகள் பலவீனமானால் எந்த செயலும் செய்ய முடியாமல் படுத்த படுக்கையாக தான் இருக்க முடியும். பற்கள் பலவீனமானால், ஜீரணம் ஒழுங்காக நடக்காது. நமக்கு பிடித்த உணவை மென்று சாப்பிட முடியாது.
ஆக, வெறும் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்களுக்கும், அசைவ உணவுகளையும் சேர்த்து சாப்பிடுபவர்களுக்கும் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்...?
இதையே இங்கே பார்க்கப்போகிறோம்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு ஊட்டச்சத்து (Nutrition) மிக மிக அவசியம். அந்த வகையில், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும், சிறப்பாக/வலிமையாக செயல்படவும் தேவையான முக்கிய ஊட்டச்சத்து.... கால்சியம் (Calcium).
அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த கால்சியம் எங்கிருந்து கிடைக்கிறது...?
பால், தயிர், அனைத்து வகையான அசைவம், எலும்பு மஜ்ஜை (The white juicy part inside bones), மற்றும் பச்சை தாவர உணவுகள்.
ஆக, இவர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகளிலிருந்து கால்சியம் எளிதில் கிடைக்கிறது.
சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு எங்கிருந்து கால்சியம் கிடைக்கிறது....?
பால், தயிர், ராகி, அனைத்து விதமான கீரைகள் மற்றும் பச்சை தாவர உணவுகள்.
அதாவது, இரண்டு தரப்பினருக்கும் கால்சியம் எளிதில் கிடைக்கும். தட்டுப்பாடு ஏற்படாது. (ஆனாலும் ஒரு மெயின் பிரச்சனை இருக்கு).
கால்சியம் என்றதும் இந்த இரண்டு தரப்பினருக்கும் முதலில் நினைவுக்கு வரும் ஒரு பொருள்....பால் தான். ஏன்னா, இதில் தான் கால்சியம் அதிகம் இருக்கிறது.
'மாடு, ஆடு' தான் நமக்கு கால்சியம் தயாரித்து பால் மூலமாகத் தருகிறது என எல்லோரும் ஒரு விஷயத்தை தப்பாவே நினைச்சிட்டு இருக்காங்க.
உண்மையில், மாடுகள் (எல்லா விலங்குகளும்) எப்போதும் சொந்தமாக கால்சியத்தை உற்பத்தி செய்யாது.
கால்சியம் இயற்கையாக கிடைக்கும் ஒரே இடம் மண், பாறை, சுண்ணாம்பு ஆகியவைகள் மூலம் தான்.
இவற்றில் உள்ள கால்சியத்தை தாவரங்கள் வேர்கள் மூலமாக உறிஞ்சி எடுத்து தங்களது இலைகளில் சேகரித்து வைக்கும்.
இலைகளை மாடுகள் சாப்பிடும்போது தான் கால்சியம் உள்ளே சென்று இரத்தத்தில் கலந்து பின்னர் பால் மூலமாக நமக்கு கிடைக்கிறது.
மாடுகள் கால்சியத்தை தானாக உற்பத்தி செய்வதில்லை, இலைகளைத் திண்பதின் வாயிலாக அதைக்கடத்துகிறது.
சரி, கால்சியம் நம் உடலுக்குள் சென்றுவிட்டது. உடனே எலும்புகள் அதை எடுத்துக் கொள்ளுமா...?
இங்க தான் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சனை இருக்கிறது.
கால்சியம் நம் உடலுக்குள் சென்றதும், அவற்றை நம் குடல்களால் உரிய முடியாது. அது தன் கடமையை செய்யாமல் சும்மாகவே இருக்கும். இந்த கால்சியத்தை தனியாக பிரித்து எலும்புகள் மற்றும் பற்களுக்கு அனுப்ப ஒரு முக்கியமான ஆள் தேவை.
அவன் தான் வைட்டமின் D.
இந்த வைட்டமின் D தான் கால்சியத்தை தனியாக எடுத்துக் கொண்டு போய் எலும்புகளுக்கும், பற்களுக்கும் கொடுக்கும்.
எனவே, உங்கள் உடலில் வைட்டமின் D இல்லையெனில், எவ்வளவு தான் கால்சியம் உங்கள் உடலில் இருந்தாலும் அத்தனையும் வீண் தான்.
சரி, அசைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த வைட்டமின் D எங்கிருந்து கிடைக்கும்....?
கொழுப்பு நிறைந்த மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு, மாடு, கோழியின் ஈரல்கள்.
மிக முக்கியமாக சூரிய ஒளி மூலம் Vitamin D கிடைக்கும்.
சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் D எங்கிருந்து கிடைக்கும்...?
உணவு மூலமாக....
இயற்கையாக உணவு வழியாக இவர்களுக்கு வைட்டமின் D கிடைக்க வாய்ப்பில்லை.
ஒரே ஒரு உணவைத் தவிர.
அது.....காடுகளில் வளரும் காளான்கள் (Mushrooms). இதிலும் D2 வகை தான் உள்ளது. இது மிக குறைந்த அளவே வைட்டமின் D-ஐ கொடுக்கும்.
ஆக, உணவு வழி வைட்டமின் D-க்கு வாய்ப்பில்லை (ஏனெனில், எல்லாரும் காட்டு காளானை தேடி தேடி வாங்க முடியாதே?)
இவர்கள் நம்பியிருப்பது ஒன்றே ஒன்று தான். அது,
சூரிய ஒளி.
இது மட்டுமே இவர்களுக்கு பலனளிக்கும்.
இந்த சூரிய ஒளியையும் பெற முடியாத சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், காலப்போக்கில் உங்கள் எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாகி Osteoporosis-க்கு வழி வகுக்கும்.
(ஏனெனில், உங்களுக்கு எளிதில் கால்சியம் கிடைக்கலாம். ஆனால், அவற்றை உறிஞ்சி எலும்புகள் மற்றும் பற்களுக்கு கொண்டு செல்ல வைட்டமின் D தேவை தானே...?)
ஆய்வுகள் என்ன சொல்கிறது...?
அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவுகள் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு தான் Osteoporosis அதிகளவில் ஏற்படுகிறது.
குறிப்பாக, இடுப்பு எலும்பு மற்றும் முதுகு எலும்புகள் (Lumber Spine) முறிவு அதிகளவில் ஏற்படுகிறது.
2,43,000 (சைவம்+அசைவம்) நபர்களிடம் 20 விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு தான் Osteoporosis risk அதிகமாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், நீண்டகால சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு femoral neck (இடுப்பையும், தொடையையும் இணைக்கும் முக்கிய மூட்டு எழும்பு), அசைவம் சாப்பிடுபவர்களை விட 4 மடங்கு அதிகமாக பலவீனமானதை கண்டுபிடித்தனர்.
இது மட்டுமில்லாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களில் பலருக்கும் BMI குறைவாகவே உள்ளது. இது எலும்புகள் முறிவுக்கு எளிதான காரணமாக அமைந்துள்ளது.
பற்கள் தொடர்பாக 50+ வயதுக்கு மேலுள்ள 1,45,000 சைவம் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களிடம் நடத்திய ஆய்வில்...
சைவம் > பற்சிதைவு மற்றும் பல் இழப்பு = 27%
அசைவம் > பற்சிதைவு மற்றும் பல் இழப்பு = 13%.
இதற்கு முக்கிய காரணம் சைவ உணவு பிரியர்களுகு வைட்டமின் D கிடைக்காததே.
எனவே மக்களே....சைவம் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் D தட்டுப்பாடு இருக்காது. எலும்புகள் மற்றும் பற்கள் பெரும்பாலும் வலிமையாகவே இருக்கும்.
ஆனால், சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் தங்களது எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக, வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில்...
நீங்கள் கட்டாயம் 'சூரிய ஒளி' உங்கள் தோல் மேல் படும் அளவிற்கு அதிக நேரம் செலவிட வேண்டும்.
மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வரும் நிலையில் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை பாதுகாப்பது அவசியம் என்பதை சைவ உணவுப்பிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.