கரூர் விபத்தில் பலியான இரு கம்பளத்து இளந்தளிர்கள்!

நேற்று முன்தினம் (27.9.2025, சனிக்கிழமை) இரவு கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணக்கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்ததில், கம்பளத்தார் சமுதாயமும் இரு பெண்குழந்தைகளைப் பலி கொடுத்துள்ளது. இளங்கன்றுகளை இழந்துவாடும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் பின்வருமாறு,
கரூர் மாவட்டம், கடவூர் தாலூகா, இடையபட்டி கீழ்பாகம் மதுவாநாயக்கர் களம் புங்காம்பாடி யைச் சேர்ந்த நமது தொப்புள் கொடி உறவுகளான சீ.பெருமாள் - செல்வராணி தம்பதியினர் பிழைப்புத்தேடி கரூர் மாநகர் வேலுச்சாமிபுரத்தில் பழனியம்மாள் (12), கோகிலா (11) என்ற இரண்டு பெண் குழந்தைகளோடு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் முன்னனி நடிகரான விஜய் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி 2026-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் சந்திப்புப் பிரச்சார பயணத்தைத் தொடங்கி வார இறுதி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் தொடச்சியாக சனிக்கிழமை மாலை கரூர் வந்துள்ளார்.
சினிமாத்துறையில் மிக உச்சத்திலுள்ள பிரபல நடிகர் என்பதால் அவரது கட்சிக் கூட்டங்களில் ரசிக மனப்பான்மையிலுள்ள இளைஞர்களும், பெண்களும் கட்டுக்கடங்காமல் கூடி வருகின்றனர். கூட்டத்திற்கு வருபவர்கள் முழுக்க முழுக்க நடிகர் விஜயின் பேச்சைக் கேட்க வேண்டும் என்றில்லாமல் எட்படியாக அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற பரிதவிப்பிலேயே பெண்களும், குழந்தைகளும் மந்தை மந்தையாகக் கூடுகின்றனர்.
நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தங்கள் வாழ்வை இழந்து போராடும் தலைவர்களுக்கோ இயக்கங்களுக்கோ ஆதரவு கொடுக்காமல் அலட்சியமாகக் கடந்து செல்லும் மக்கள், நேரடியான பாதிப்பிற்குக்கூட ஒன்றுகூட முன்வருவதில்லை என்ற பெரும் ஏக்கம் சமூக செயற்பாட்டாளர்களுக்கு உண்டு. ஆனால் மக்களுக்காக சிறுதுறும்பைக்கூட கிள்ளிப்போடாத நடிகர், நடிகளை பார்ப்பதற்கும், சமூக வலைதளங்களில் ஆதரித்து எழுதுவதற்கும், விவாதம் செய்வதற்கும் ஒரு பெருங்கூட்டம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது.
இதில் இளைஞர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் விதிவிலக்கல்ல. நான் இன்ன நடிகரின் ரசிகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் இருப்பதில்லை. இதில் படித்தவர்களின் பகுத்தறிவு பல் இளிக்கிறது.
மக்கள் மனநிலை அறியாமல், மக்களோடு பழகாமல், அரசியல் அனுபவமுள்ள தலைவர்கள் யாரும் உடனில்லாமல் திடீரென அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் நடிகர்களை ஆதரிக்க, மாற்றத்தை விரும்பும் மக்கள் என்ற ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவுள்ளது. இப்படி அறியாமை நிறைந்த மனிதர்களின் எண்ணிக்கை உட்பட்ச நடிகர் அரசியலுக்கு வரும்போது அது பெருங்கூட்டமாக மாறியுள்ளது.
திரைப்பிரபலத்தை நேரில் பார்த்துவிட வேண்டுமென்ற தவிப்பு, தாங்கள் நடிகர் விரும்பும் நடிகர்கள் எல்லாம் மனிதப் புனிதர்கள், அவர்களால் பெரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்பும் மக்கள் நாட்டில் எந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மிக அதிகம்.
தவெக தலைவர் அரசியல் பயணமும் இப்படித்தான் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும், இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் ஆகி, பல மாநாடுகள், கூட்டங்களை நடத்திவிட்ட விஜய், அங்கு கூடும் கூட்டம், அவர்களின் செயல்பாடுகள், அது குறித்து எழும் விமர்சனம் குறித்தெல்லாம் கவலைப்படாமல், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது விஜய் அவர்களின் பெரிய பலவீனம். என்னதான் அரசியல் கட்சி தொடங்கி இரண்டாண்டுகள் ஆனாலும் அவரும் தலைவராக இல்லாமல் நடிகராகவே நடந்துகொள்கிறார். ரசிகர்களும் தொண்டர்களாக மாறாமல் ரசிகர்களாகவே தொடர்கின்றனர்.
இதற்கான விலை தமிழகம் 40 உயிர்களை பலிகொடுத்துள்ளது. மனித உயிர்கள் மலிவான காரணங்களுக்காக பறிகொடுக்கப்பட்டுள்ளது கல்வியில் சிறந்த தமிழகத்திற்கு பொருத்தமில்லாதது.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவிலிருந்து வேலுச்சாமிபுரத்திற்கு பஞ்சம்பிழைக்கச் சென்ற பெருமாள் - செல்வராணி தம்பதியினர் தங்கள் குழந்தைகள் விரும்பும் திரை நட்சத்திரத்தை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஒற்றை ஆசைக்காக தங்கள் இருமகள்களையே இழந்துள்ளனர். தங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் தலைவரை, நடிகரை பார்க்க விரும்பும் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதொன்றும் பெருங்குற்றமல்ல. இயல்பான ஒன்றுதான். அனைவர் மனநிலையும் அந்தப்பெற்றோர்களின் மனநிலையை ஒத்தே இருக்கும். ஆனால் அங்கு திரண்ட கூட்டம், பாதுகாப்பு ஏற்பாடு, வெயிலின் தாக்கம், நடிகர் வருகையின் நீண்ட காலதாமதம் குறித்து எவ்வித அனுபவமுமிள்ளாத அப்பாவிப் பெற்றோர்கள் இளம் கன்றுகளைப் பறிகொடுத்து தங்கள் தலைமுறையே அழித்துக்கொண்டுள்ளது பெருந்துயரம். பெற்றோர்களை என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது? யாரை குற்றம் சொல்வது? யாரைப் பொறுப்பாக்குவது?
நம் இரு குழந்தைகளோடு பலியாகியுள்ள 38 உயிர்களுக்கு இரங்கலும், பெற்றோர்கள், உற்றார் உறவினர்களுக்கு வருத்தங்களும், ஆறுதல்களும்.
இப்பெருந்துயரை அறிந்து சமுதாயத் தலைவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். த.வீ.க.பண்பாட்டுக்கழக மாநில பொதுச்செயலாளர் க.ராமகிருஷ்ணன், மந்தை நாயக்கர்- R.தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளார்.