முதல்வரோடு தனியாகப் பத்து நிமிடம் - மகிழ்ச்சியில் உடன்பிறப்பு!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவரும், புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளருமான எம்.செல்வராஜ் அவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதன்விவரம் வருமாறு,
தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் சிலமாதங்களில் முடிவடையவுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரலில் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும்வகையில் உட்கட்சி அமைப்பில் பல மாற்றங்களைச் செய்தும், புதிய பொறுப்பாளர்களை நியமித்தும், வாக்குச்சாவடி முகவர் கூட்டங்கள் நடத்தியும் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள் ஏற்கனவே பலகட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளவர், மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடர்கிறார்.
திமுக தலைவரைப் பொறுத்தவகையில் ஆளும்கட்சியாக இருப்பதால் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை ஆய்வு செய்வதற்காகவும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதோடு, கட்சி அமைப்பிலும் மாற்றங்கள் செய்து, மண்டல அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரை களத்தில் இறக்கிவிட்டுள்ளார். இதுதவிர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேர்தல்பணி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, வாரத்தில் நான்கு நாட்கள் தொகுதிக்குள் தான் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.
தமிழக முதல்வரைப் பொறுத்தவரை இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, நீண்டகாலமாக திமுக தொடர்ச்சியாக இருதேர்தல்களை வென்றதில்லை என்ற விமர்சனத்தை மாற்றியமைக்க எல்லா அஸ்திரங்களையும் ஏவத்தயாராகிவிட்டார். ஆட்சி, கட்சி என இரண்டு லகானையும் கையில் வைத்துக்கொண்டு கட்சியினரையும், அதிகாரிகளையும் விரட்டு, விரட்டு என்று விரட்டிவருகிறார். தனது வயதையும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் 24 மணி நேரமும் 2026 தேர்தலை மனதில்கொண்டே செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது இந்திய அரசியலிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வரும் முதல்வருக்கு, வடமாநில மக்களிடமும் செல்வாக்கு பெருகியுள்ளதை ஊடகங்கள் வெளியிட்டு வருவதைப் பார்க்கமுடிகிறது. இந்த வாய்ப்புகளை சரியாகப்பயன்படுத்திக்கொள்ள திமுக நிர்வாகிகளும் முழுநேர தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர்.
தவிர "உடன் பிறப்பே வா" என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக உள்ள நிர்வாகிகளை அழைத்து தனிப்பட்ட முறையில் நேரடியாகப் பேசி களநிலவரத்தைக் கேட்டறிவதோடு, நிர்வாகிகள் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்குகிறார். இதன்படி நேற்று விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் தனித்தனியாக சந்தித்து களநிலவரங்களையும், தொகுதியின் தேவைகளையும் கேட்டறிந்தார். விளாத்திக்குளம் சட்டமன்றத்தொகுதியிலுள்ள நான்கு ஒன்றியச் செயலாளர்களிடமும் தலா பத்து நிமிடம் பேசிய முதல்வர், புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.செல்வராஜ அவர்களின் பணியைப்பாராட்டி "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புத்தகத்தை பரிசளித்தார். மேலும், புதூர் கிழக்கு ஒன்றியத்தில் நிலவும் பிரச்சினைகள், எந்தெந்த சமுதாயங்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?, அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? போன்ற பல்வேறு விசயங்களைக் கேட்டுத்தெரிந்துகொண்ட முதல்வர், மக்களின் தேவைகுறித்து உடனடியாக தனது கவனத்திற்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளதாகத் தெரிவித்த புதூர் கிழக்கு ஒன்றியச்செயலாளர் எம்.செல்வராஜ், மாவீரன் கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைத்துக்கொடுத்ததற்காக சமுதாய மக்களின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.