சாதனைப்பெண் சாதனாவுக்கு துணைமுதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்!

தேசிய அளவில் சாதனைபடைத்த மாணவி சாதனாவுக்கு தமிழக அரசு சார்பில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.ஒரு லட்சம் வழங்கிப்பாராட்டு. சாதனை மாணவி சாதனாவுக்கு சமுதாயச் சொந்தங்கள் வாழ்த்துமழை. இதன் விவரம் வருமாறு,
கோவை மாவட்டம், காரமடை அருகேயுள்ள பெரிய தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - நதியா தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் கவியரசு என்ற மகனும், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் சாதனா என்ற மகளும் உள்ளனர். செந்தில்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராகவும், நதியா தனியார் நிறுவனமொன்றில் தையலராகவும் இருந்து வருகின்றனர்.
காரமடை SRSI மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்துவரும் மாணவி சாதனாவுக்கு மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுவதில் அலாதி பிரியம். இவரது ஆர்வத்தைப் பார்த்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் பாலா அவர்கள் மாணவி சாதனாவுக்கு மிதிவண்டிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கேற்ப பயிற்சி வழங்கினார். 10 ஆம் வகுப்பு மாணவியாகப் பயிற்சி பெறத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே உள்ளூர்ப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சாதனா, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலும் 85% மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, விளையாட்டு இரண்டையும் இரு கண்களாகப் பார்க்கும் மாணவி சாதனாவுக்கு மாவட்ட, மாநில அளவிலான சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார்.
கடந்த 2023-இல் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற சாதனாவுக்கு அதே ஆண்டு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெற்றார். முதன்முதலாக வெளிமாநிலமொன்றில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றிக்கனியைப் பறிக்கமுடியாமல் போன சாதனாவின் தொடர் பயிற்சியாலும், முயற்சியாலும் அடுத்து கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் பங்கேற்று நான்காவது இடம் பிடித்து நம்பிக்கை பெற்றார். அதே உத்வேகத்தோடு கோவையில் நடைபெற்ற 'கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி'யில் Time Trial, Mass Start என இரு பிரிவுகளில் பங்கேற்று முறையே மூன்றாவது மற்றும் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதில் Time Trial போட்டியில் 20 நிமிடங்களில் கடக்க வேண்டிய 10கிமீ தூரத்தை 17 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடம் பிடித்த சாதனாவிற்கு சான்றிதழோடு ரொக்கப்பரிசு ரூ.6000/-ம், குழுவாகப்பங்கேற்கும் Mass Start போட்டியில் முதலிடம் பெற்றதற்கு சான்றிதழோடு ரூ.4000/- ரொக்கப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்றுக்கொண்டதுமுதல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருகின்றார். மேலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றார்.
இதன்தொடர்ச்சியாக சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை காசோலைகளையும், கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (26.09.2025) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்று சாதனைபடைத்துவரும் சாதனாவுக்கு தமிழக அரசு சார்பில் துணைமுதல்வர் ரூ.100000/-க்கான காசோலை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். சர்வதேச அளவிலான சைக்கிளிங் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதையே லட்சியமாகக் கொண்டு பயிற்சி பெற்றுவரும் சாதனாவின் கனவு நனவாகவும், சாதனைகள் தொடரவும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.