நீரழிவுநோய்க்கு கால் விரல்கள் ஏன் அகற்றப்படுகின்றன?

நீரிழிவு (Diabetes) நோயால் பாதிக்கப்பட்ட சிலரின் கால்கள் ஏன் வெட்டி நீக்கப்படுகின்றன என்பது தெரியுமா....?
இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் நீரிழிவு பிரச்சனைக்கு ஏன் 'சர்க்கரை நோய்' எனப் பெயர் வந்தது என தெரிந்துக் கொள்ளலாம்.
மருத்துவ தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில் 'இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் போது தான் நீரிழிவு நோய் உண்டாகும்' என மருத்துவ ரீதியான விளக்கம் நம் மக்களுக்கு தெரியாது.
ஆனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தார்கள். அது,
சீறுநீர் கழித்த பின்னர் அது கீழே தேங்கியபோது எறும்புகள் சுற்றி வந்து அந்த சிறுநீரை குடிப்பதை பார்த்த பின்னர் தங்களது சிறுநீரில் சர்க்கரை கலந்துள்ளது' என்பதை உணர்ந்தனர்.
இது உண்மை தான்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு, அந்த குளுக்கோஸ்(சர்க்கரை) இரத்தத்தில் கலந்து கிட்னிக்கு செல்லும்.
பொதுவாக, இந்த குளுக்கோஸை கிட்னி உறிஞ்சி எடுத்து மீதியை சிறுநீராக வெளியேற்றும். ஆனால், குளுக்கோஸின் அளவு 180 mg/dL-க்கு அதிகமாக இருக்கும்போது கிட்னியால் முழு குளுக்கோஸையும் உறிய முடியாது.
எனவே, தன்னால் எடுத்துக்கொள்ள முடியாத குளுக்கோஸை சிறுநீரிலேயே விட்டுவிடும். இந்நிலையில், அவர் சிறுநீர் கழிக்கும்போது அது இனிப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.
இதனால் தான் அக்காலத்தில் நீரிழிவு நோயை சர்க்கரை நோய் என நம் மக்கள் அழைத்தனர்.
(இப்போதும் உங்கள் சிறுநீரை எறும்புகள் மொய்த்தால், நீங்கள் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்வது நல்லது).
சரி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரின் கால் விரல் அல்லது பாதம் அல்லது முழங்கால் வரை ஏன் வெட்டி நீக்கப்படுகிறது....?
பொதுவாக, நம் உடலில் இதயம் உள்ள இடத்திலிருந்து மிக தொலைவில் உள்ள ஒரே உடல் பகுதி நம் 'பாதங்கள் (Feet)' மட்டுமே.
தலை, கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரத்தம் எளிதாகவே இதயத்திற்கு சென்று விடும்.
ஆனால், நீங்கள் நின்றுக்கொண்டு இருக்கும்போது இரத்தம் கீழே பாதத்திற்கு சென்றுவிட்டு பின்னர் மேல் நோக்கி உந்தி செல்ல வேண்டும். அதுவும், கீழே இழுக்கும் பூமியின் ஈர்ப்பு சக்தியை மீறி அந்த இரத்தம் மேலே இதயத்திற்கு செல்ல வேண்டும்.
ஆனால், சர்க்கரை நோய் தாக்கப்பட்ட ஒருவரின் இரத்த நாளங்கள் சுருங்கிய அளவில் அல்லது முற்றிலும் தடைப்பட்ட நிலையிலேயே இருக்கும் (சர்க்கரை நோயாளிகளுக்கு இப்பிரச்சனை சாதாரணமாகவே இருக்கும்).
இதுபோன்ற ஒரு சூழலில் அந்நபரின் கால்களில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய காயம் அல்லது கொப்புளம் உண்டானால், அவை சீக்கிரம் குணமாகாது.
காரணம், இரத்த நாளங்கள் சுருங்கிய நிலையில் உள்ளதால், இவை வழியாக போதுமான ஊட்டச்சத்துக்கள் வந்து சேராது. இந்நிலை தொடரும்போது, காயம் வழியாக எளிதாக தொற்று ஏற்படும். இந்த தொற்றையும் ஆண்டிபயாட்டிக் கொடுத்து குணப்படுத்த முடியாது.
காரணம் அதே தான். இரத்த நாளங்கள் சுருங்கி அல்லது தடைப்பட்டு இருப்பதால் இங்கே மருந்து செல்ல வழியில்லை.
மருந்தால் குணப்படுத்த முடியாதபோது அந்த தொற்று மேன்மேலும் பரவும். இது அவரது உயிரையே பறித்து விடும்.
இந்த தொற்றை தடுத்து நிறுத்த ஒரே வழி காயம் ஏற்பட்டுள்ள விரல், அல்லது பாதம், அல்லது முழங்கால் வரை வெட்டி நீக்குகிறார்கள்.
இதே போல் ஒரு காயம் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு ஏற்பட்டு தொற்றும் ஏற்பட்டிருந்தால், அவரது இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக விரிந்து காணப்படும் எனவே மருந்து உள்ளே செல்ல முடியும். தொற்றையும் குணப்படுத்தி விடலாம்.
சரி, ஏன் கால்கள் மட்டும் பாதிக்கப்படுகின்றன...? கைகளுக்கு இந்த நிலை ஏன் ஏற்படுவதில்லை...?
ஏனெனில், படுக்கையில் படுத்து தூங்கும் நேரம் தவிர நிலத்தின் மீது எப்போதும் தொடர்பில் உள்ள ஒரே உடல் பகுதி பாதம் மட்டுமே. நடக்கும்போது, ஓடும்போது, சுமையை தூக்கும்போது இதற்கு தான் எளிதாக காயம் ஏற்படுகிறது.
பொருந்தாத அல்லது புதிய காலணிகளை அணியும்போது காயம் ஏற்படும். ஷூ மிகவும் டைட்டாக போடும்போது கொப்புளம் ஏற்படும். சில நேரங்களில் பாதங்களில் சிறு காயம் ஏற்படும்போது அதன் வலி அவர்களுக்கு தெரியாது. கவனிக்கவும் மாட்டார்கள்.
மேலும், ஷூ, சாக்ஸ் போடும்போது அப்பகுதி மிதமான வெப்பத்துடன் (warm) இருக்கும். இது தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியா வளரக்கூடிய சூழல் ஆகும். இதனாலே பாதம் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகிறது.
ஆனால், கைகள் எப்போதும் நிலத்துடன் தொடர்பில் இருப்பதில்லை. நம் கைகள் நம் கண் பார்வைக்குள் அடிக்கடி சிக்கும். சிறிய காயம் என்றாலும் நாம் உடனே பார்த்து விடுவோம். சிகிச்சையும் எடுத்துக் கொள்வோம்.
அதே போல், என்ன சாப்பிட்டாலும் அதற்கு முன் கைகளை கழுவுவோம். ஒரு நாளில் எப்படியும் 5 முறையாவது கைகளை கழுவி விடுவோம். எனவே, தொற்று ஏற்படுவது குறைவு. இதனால், கைகளை விட கால்களே அதிகம் பாதிப்படைகின்றன.
இனிப்பு, சர்க்கரை சாப்பிட்டால் தான் நிரிழிவு நோய் ஏற்படுமா....?
இது மக்கள் மத்தியில் இன்றும் இருக்கும் ஒரு தவறான கண்ணோட்டம் ஆகும்.
சர்க்கரை என்பது காபி, மைசூர் பாக், ஜிலேபி, அதிரசம் போன்ற இனிப்பு பண்டங்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது அல்ல.
நாம் தினமும் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் சர்க்கரை இருக்கிறது.
பொதுவாக, ஒருவர் இனிப்பு/சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடும்போது, கணையம் (Pancreas) தேவையான இன்சுலினை சுரந்து Dilute செய்து கிட்னிக்கு அனுப்பி விடும்.
சில நேரங்களில் இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், கணையம் அதற்கேற்ப இன்சுலினை அதிகமாக சுரந்து சமன் செய்து விடும்.
ஆனால், மரபியல் மற்றும் பல ஆண்டுகள் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டு வருவது உள்ளிட்ட காரணங்களால் கணையம் இன்சுலின் சுரப்பதில் மாற்றங்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதுபோன்ற ஒரு நிலை வந்த பின்னர், நீங்கள் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை சாப்பிடும்போது அதை டைலூட் செய்ய கணையம் திணறும். இந்த நிலை தொடரும்போது தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயை நிரந்தரமாக குணப்படுத்த மருந்தே இல்லையா....?
Type 1 Diabetes:
இந்த நிலையில் சர்க்கரை நோய் தாக்கப்பட்ட ஒருவரின் கணையம் இன்சுலினை சுரக்காமல் முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளும். ஏனெனில், இன்சுலினை சுரக்கும் 'பீட்டா செல்களை' நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஏற்கனவே அழித்திருக்கும். சோ, பீட்டா செல்கள் இல்லாமல் இன்சுலின் சுரக்காது.
இந்த அழிந்து போன பீட்டா செல்களை திரும்பி கொண்டு வர அல்லது உருவாக்க நாம் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆய்வுகள் நடந்துக் கொண்டுள்ளன.
Type 2 Diabetes:
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவரின் கணையம் இன்சுலினை சுரக்கம். ஆனால், நம் உடல் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தடுத்து விடும். இதே நிலை நீடிக்கும்போது கணையம் மிகவும் சோர்ந்து தனது செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும். இந்த கணையத்தை 'Reactivate' செய்து பழையபடி இன்சுலினை சுரக்க வைக்கவும் நம்மிடம் மருந்து இல்லை என்பதே பரிதாபம்.
ஆக, இப்போதைக்கு சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் கால்களை இழக்கும் நிலை வரைக்கும் செல்லாமல், சிறிய காயம், சிராய்ப்பு, கொப்புளம் என எது ஏற்பட்டாலும் அதற்கு தாமதிக்காமல் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சர்க்கரை குறைவான உணவுகள், மருந்து, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான மனநிலையை பின்பற்றினால் சாதாரண நபர்களை போலவே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.
நன்றி: பிரகாசம் பி பழனி.