இலக்கியச் செல்வர், தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல்!

தமிழக அரசியலின் முதுபெரும் தலைவரும், காமராஜரின் முதன்மைச்சீடர்களில் ஒருவருமான குமரி அனந்தன் அவர்கள் வயது மூப்பு காரணமாக தனது 92-வது வயதில் இன்று (09.04.2025) அதிகாலை இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தெலுங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தந்தையாரும், அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் அவர்கள், நாகர்கோவில் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர், நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான அனுமதியைப்பெற்றுத்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இந்திய மொழிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வாய்ப்புகிட்டியது.
நான்குமுறை தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தன் அவர்கள் காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தியவர், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியப்படுத்திக்கொண்டார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையோடு வாழ்ந்தவர், தமிழ் இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றவர். இலக்கியச்செல்வர் என்று அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் அழைக்கப்படும் குமரியாருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்தது.
சமீபகாலமாக வயதுமுதுமையால் ஏற்பட்ட உடல்நலக்கோளாறுக்காக மருத்துவசிச்சை பெற்றுவந்த குமரி அனந்தன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடலுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசியலில் முதுபெரும் தலைவரை இழந்து வாடும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தந்தையாரை இழந்துவாடும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பிலும், இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.