அதிகாரிகள் அலட்சியம் - ஆட்சிக்கு நல்லதல்ல
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளுக்கு ஒரே சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டாம் நேற்று (23.10.2025) நடைபெற்றது. இதில் பலவேறு சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதன் விவரம் வருமாறு,
ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடிய சமூகங்களை அடக்கி ஒடுக்குவதற்காக தனிச்சட்டம் கொண்டுவரப்பட்டு, கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். கைரேகைச்சட்டம் என்று அழைக்கப்பட்ட இச்சட்டத்தின்படி தொட்டியநாயக்கர், கள்ளவர், மறவர், வேட்டுவக்கவுண்டர், முத்தரையர் உள்ளிட்ட 68 சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள் தினந்தோறும் காவல்நிலையத்தில் கையெழுத்துப்போட வேண்டும் என்பதோடு, இரவெல்லாம் காவல்நிலையத்திலேயே தங்கவேண்டும் என்ற நிலை இருந்தது. இப்படியாக பல்லாண்டுகள் தங்களால் துன்புறுத்தப்பட்ட மக்கள் மீது கரிசனம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்குப்பரிகாரமாக இந்திய நாட்டிற்கு விடுதலை அளிக்கும்முன்பு நாடுமுழுவதும் கைரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்தியா விடுதலைக்குப்பின்பும் இன்றுவரை அது தொடர்ந்துவருகிறது.

கைரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் நாடுமுழுவதும் குற்றப்பழங்குடிகள் என்று அழைக்கப்பட்ட நிலையில், பின்னாட்களில் அது நீக்கப்பட்டு டிஎன்டி (Denotified Tribes) என்று அழைக்கப்பட்டனர். 1979-இல் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற குளறுபடிகளின் காரணமாக டிஎன்டி என்பது டிஎன்சி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசின் சுற்றறிக்கை தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் மற்ற எல்லா மாநிலங்களிலும் டிஎன்டி என்ற பெயர் நீடிக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் டிஎன்சி என்று மாற்றியது தற்செயலாக நடந்ததல்ல, அதிகாரி மட்டத்தில் நடைபெற்ற திட்டமிட்ட சதி என்பது தெளிவாகும்.

இவ்வாறான நிலையில், 1980-களில் டிஎன்டி பட்டியலிலுள்ள 68 சமூகங்களிலும் கல்வி அறிவுபெற்றவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருந்ததால் இதன் முக்கியத்துவம் தெரியாமல் போய்விட்டது. 1990-க்குப் பின் கல்வியின் அவசியம் குறித்து ஏற்பட்ட விழிப்புணர்வு, அனைத்து சமூகங்களிலிருந்தும் கல்வி கற்போர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு, அரசுப்பணிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உயர்ந்தது போன்ற காரணங்களால் பிற மாநிலங்களில் டிஎன்டி சமூகங்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் சலுகைகளால் அம்மக்களின் வாழ்க்கைத்தரம் பலமடங்கு உயர்ந்துள்ளதைக் காணமுடிந்தது. ஆனல் தமிழகத்தில் மட்டும் டிஎன்டி சமூகங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதி சாதிப்பெயர் குழப்பத்தால் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

பிற்காலத்தில் இதையெல்லாம் தாமதமாக உணர்ந்து கொண்டவர்கள், தமிழகத்திலுள்ள 68 டிஎன்டி சமூகங்களை ஒன்றுதிரட்டத் தொடங்கினர். இதனையடுத்து தமிழகத்தில் 1979-இல் டிஎன்சி என்று பெயர்மாற்றம் செய்ததை ரத்து செய்து மீண்டும் டிஎன்டி என்றே சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை 2010-க்குப்பின் வலுப்பெறத் தொடங்கியது. இதன்காரணமாக 2014-இல் மாநிலத்திற்கு டிஎன்சி என்றும் ஒன்றியத்திற்கு டிஎன்டி என்றும் இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. எனினும் சட்டவிரோதமான டிஎன்சி என்பதே இருக்கக்கூடாது, ஒருசாதிக்கு இரண்டு சான்றிதழ்கள் கூடாது, இது வருங்காலங்களில் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், ஒரே சாதிச்சான்றிதழ், அது டிஎன்டி என்று மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து வந்தன,

இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சி அமைந்தவுடன் டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்கப்படுமென உறுதியளித்தார். எனினும் அவர் முதல்வர் பதவிக்கு வந்தும் சில ஆண்டுகள் வாக்குறுதி கிடப்பிலேயே கிடந்தது. இதனைக்கண்டித்து நடைபெற்ற பலகட்டப் போராட்டங்களுக்குப்பின் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து முதல்வரின் பெயரில் அறிவிப்பு வெளியானது. ஒருவழியாக நீண்டநாள் கோரிக்கை முடிவுக்கு வந்தது என்று 68 சமூகங்கள் மகிழ்ந்திருந்த நிலையில், முன்பு டிஎன்சி என்றும் டிஎன்டி என்றும் இரண்டு தனித்தனி தாள்களில் சாதி சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், உதல்வரின் உத்தரவுக்குப்பின் டிஎன்சி/டிஎன்டி என்று இரண்டு பெயரையும் போட்டு ஒரே தாளில் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது முதல்வர் போட்ட உத்தரவால் தாள்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர அடிப்படை பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இது அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் அரசியல் என்று குற்றஞ்சாட்டும் டிஎன்டி சமூகங்கள், அதிகாரிகள் முதல்வரின் உத்தரவை வேண்டுமென்றே பின்பற்ற மறுப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே டிஎன்டி சமூகங்கள் மீண்டும் போராட்ட களத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது போராட்ட களத்திற்கு வந்துள்ள டிஎன்டி சமூகங்கள், தமிழக முதல்வரின் தென்மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அவரின் கவனத்தை ஈர்க்கும்வகையில் உண்ணாவிரதப்போராட்டத்தை அறிவித்தன. அதனடிப்படையில் மதுரை பழங்காநத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்று (23.10.2025) நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இதில் தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, சீர்மரபினர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ், த.வீ.க.பண்பாட்டுக் கழக மாநிலப் பொதுச்செயலாளர் கே,இராமகிருஷ்ணன், அகிம்சா சோசலிஸ்ட் கட்சித் தலைவர் காந்தியவாதி இரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

