இறுதிச்சுற்றில் ஈரானை அழிக்குமா அமெரிக்கா?
70 ஆண்டுகளுக்கு முன்பு 1955 இல் தொடங்கி 1975 வரை சுமார் 20 ஆண்டுகள் வரலாற்றில் அதிக காலம் நீடித்த வியட்நாம் போர், மனித வரலாற்றின் மிகக் "கொடூரமான மற்றும் அநியாயமான" அத்தியாயம். ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடையே கடந்த 38 நாட்களாக நடைபெற்று வரும் யுத்தத்தில் அமெரிக்க விமானி ஒருவர் ஈரானில் சிக்கிக்கொண்டதை அடுத்து அவரை மீட்க அமெரிக்கா செய்த முயற்சி ஒரு மினி 'வியட்நாம்' போரை நினைவுபடுத்துவதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். இதுபற்றிய செய்தித்தொகுப்பு...
19-ஆம் நூற்றாண்டிலிருந்து வியட்நாம் பிரெஞ்சு காலனித்துவத்தின் கீழ் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஹோ சி மின் (Ho Chi Minh) தலைமையிலான வியட்நாம் விடுதலைப் படைகள் (Viet Minh) பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறப் போராடின. 1954-இல் பிரான்ஸ் தோல்வியடைந்து வெளியேறியது.
1954-ஆம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தத்தின்படி வியட்நாம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:
வடக்கு வியட்நாமில் அமைந்த ஹோ சி மின் தலைமையிலான கம்யூனிச ஆட்சிக்கு சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரவளித்தன. தெற்கு வியட்நாமில் அமெரிக்க ஆதரவுடன் கம்யூனிச எதிர்ப்பு ஆட்சி ங்கோ தின் தியம் (Ngo Dinh Diem) தலைமையில் நிறுவப்பட்டது.
இந்த இரு பகுதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே இரு தரப்பினரின் நோக்கமாக இருந்தது. ஆனால், எந்த ஆட்சியின் கீழ் இணைவது என்பதில் தான் மோதல் வெடித்தது.
வடக்கு வியட்நாம் ஆதரவு பெற்ற வியட்காங் (Viet Cong) எனும் கொரில்லாப் படைகள் தெற்கு வியட்நாமில் ஊடுருவித் தாக்குதல் நடத்தின. தெற்கு வியட்நாம் வீழ்வதைத் தடுக்க அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்கியது.
உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு சிறிய விவசாய நாடான வியட்நாம் மீது தொடுத்த இந்தப் போருக்கு அமெரிக்கா ஒரு விசித்திரமான காரணம் சொல்லியது. அதாவது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் கம்யூனிசம் பரவினால் அதந்தொடர்ச்சியாக தென்கிழக்கு ஆசியா முழுவதும் கம்யூனிசம் பரவிவிடும் என்பதே அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளின் கூற்று. இதை "டோமினோ தியரி" (Domino Theory) என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, ஒரு நாடு கம்யூனிச நாடாக மாறினால், அதைத் தொடர்ந்து அண்டை நாடுகளும் வரிசையாக கம்யூனிசத்தின் பிடியில் சிக்கிவிடும் என்பது அமெரிக்காவின் கணிப்பு. எனவே 1960-களின் நடுப்பகுதியில் இருந்து லட்சக்கணக்கான அமெரிக்கப் படைகள் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டன.
'கம்யூனிசத்தைத் தடுக்கிறோம்' என்ற பெயரில், ஒரு தேசத்தின் சொந்த அரசியல் விருப்பத்தை அமெரிக்கா தன் ராணுவ பலத்தால் நசுக்க முயன்றது. வியட்நாமியர்கள் கையில் எடுத்தது 'கொரில்லாப் போர்'முறை. இது ஒரு விதமான மறைந்திருந்து தாக்கும் கலை'. தன்னைவிடப் பல மடங்கு வலிமைமிக்க ராணுவத்தை எதிர்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு தந்திரமான முறை.
"கரில்லா" என்றால் ஸ்பானிஷ் மொழியில் 'சிறிய போர்' என்று பொருள். நேரடியான போர்க்களத்தில் மோதாமல், எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு, மீண்டும் மறைந்துவிடுவதே இதன் அடிப்படை.
எதிரி முன்னேறினால் நாங்கள் பின்வாங்குவோம்; எதிரி ஓய்வெடுத்தால் நாங்கள் தொந்தரவு செய்வோம்; எதிரி சோர்வடைந்தால் நாங்கள் தாக்குவோம்; எதிரி பின்வாங்கினால் நாங்கள் துரத்துவோம்; இதுதான் கொரில்லா போரின் அடிப்படைத் தத்துவம்.
வியட்நாமியர்கள் காடுகளுக்கு அடியில் நூற்றுக்கணக்கான மைல் நீளத்திற்குச் சுரங்கப் பாதைகளை அமைத்தனர். இதில் மருத்துவமனைகள், சமையலறைகள், ஆயுதக் கிடங்குகள் என அனைத்தும் இருந்தன. இதனால் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களும், குண்டுகளும் வியட்நாம் வீரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை..
அமெரிக்கப் படைகள் மேலே தேடிக்கொண்டிருக்கும்போது, வீரர்கள் திடீரென ஒரு சிறிய துளை வழியாக வெளியே வந்து தாக்கிவிட்டு, அடுத்த சில நொடிகளில் தரைக்குள் மறைந்துவிடுவார்கள். அமெரிக்க வீரர்கள் அந்தத் துளைகளைக் கண்டுபிடித்தாலும், அவை மிகச் சிறியதாக இருந்ததால் உள்ளே நுழைய முடியாமல் திணறினர்.
வியட்நாம் வீரர்கள் காடுகளுக்குள் தரையில் குழிகளைத் தோண்டி, அதில் கூர்மையான மூங்கில் குச்சிகளை நட்டு, அதன் நுனியில் விஷம் அல்லது மனிதக் கழிவுகளைத் தடவி வைப்பார்கள். 'புஞ்சி குச்சிகள்' புற்களால் மூடப்பட்ட அந்தக் குழியில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்களுக்குக் கடுமையான தொற்று ஏற்பட்டு மரணம் அல்லது கால்களை இழக்கும் நிலை ஏற்படும். எங்கே கால் வைத்தால் வெடிக்கும் அல்லது குத்தும் என்ற பயத்திலேயே அமெரிக்க வீரர்கள் பித்துப் பிடித்துப்போனார்கள்.
அமெரிக்கா வியட்நாமில் பயன்படுத்திய போர் முறைகள், சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல, மனிதநேயத்தின் அனைத்து எல்லைகளையும் மீறின. 'கொடூரத்தின் உச்சங்கள்' அங்கே அரங்கேறியது. வியட்நாமின் அடர்ந்த காடுகளை அழித்து, அங்கு ஒளிந்திருக்கும் வீரர்களைக் கண்டுபிடிக்க அமெரிக்கா சக்திவாய்ந்த களைக்கொல்லியும், கொடிய நச்சுமான Dioxin பயன்படுத்தியது. ஆரஞ்சு நிறப் பேரல்களில் அடைக்கப்பட்டிருந்ததால் 'ஏஜென்ட் ஆரஞ்சு' வியட்நாம் வீரர்கள் காடுகளுக்குள் ஒளிந்திருப்பதைத் தடுக்க காடுகளின் மீது விமானம் மூலம் இதைத் தூவுவார்கள். இது இலைகளை உதிர்த்து, மரங்களைச் சில நாட்களில் மொட்டையாக்கிவிடும். இதில் கலந்திருந்த 'டயாக்ஸின்' (Dioxin) என்ற வேதிப்பொருள் தான் உலகிலேயே மிக ஆபத்தான நச்சுக்களில் ஒன்று. இது அழியாமல் மண்ணிலும், நீரிலும், மனித உடலிலும் தங்கிவிடும்.
பச்சைப்பசேல் என இருந்த காடுகள், விவசாய நிலங்கள் அனைத்தும் சில நாட்களில் காய்ந்து கருகி, செம்புறாங்களாக மாறின. இந்த நச்சு, மண்ணையும் நீரையும் நிரந்தரமாகச் சிதைத்தது. இன்றும் வியட்நாமில் பிறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், கை கால்கள் இன்றி, புற்றுநோயுடன், கொடூரமான உடல் ஊனங்களுடன் பிறக்கின்றன.
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தச் சாபம், அமெரிக்காவின் கொடூரத்திற்கு ஒரு அழியாத சாட்சி. இந்த நச்சு மண்ணில் இறங்கி, ஆற்றில் கலந்து, மீன்கள் மற்றும் பயிர்கள் வழியாக மீண்டும் மனித உடலுக்குள் செல்கிறது. இதைச் சுத்தப்படுத்த வழியே இல்லை.மண்ணின் மரபணுவையே (DNA) சிதைத்து விட்டது..
அடுத்து 'நேபாம் குண்டுகள்'. இது சதையை உருக்கும் நெருப்பு குண்டுகள். 'ஜெல்லி' போன்ற வெடிகுண்டு' வெடிக்கும் போது, இந்த நெருப்பு ஜெல்லி மனிதர்களின் உடலில் ஒட்டிக்கொண்டு சதையை உருக்கி எலும்பு வரை எரிக்கும். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் இந்த நெருப்பு மழையில் சிக்கி அலறித் துடித்து, உயிருடன் கருகி மடிந்தனர். தன் எரியும் உடம்பை அணைக்க முடியாமல் ஓடும் ஒரு சிறுமியின் புகைப்படம் (Napalm Girl), அமெரிக்காவின் போர் வெறியை உலகிற்குக் காட்டியது.
அடுத்து 'மை லாய் படுகொலைகள் அமெரிக்கச் சிப்பாய்கள் வியட்நாம் கிராமங்களுக்குள் புகுந்து, குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அமெரிக்க ராணுவம் ஒரு போரை நடத்தவில்லை; ஒரு இனப்படுகொலையை நடத்தியது.
20 வருடங்கள் நடந்த இந்த போரில் உலகின் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த அமெரிக்காவால், வியட்நாம் மக்களின் 'கொரில்லாப் போர்' முறையையும், தங்கள் தேசத்தை மீட்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் வெல்ல முடியவில்லை. லட்சக்கணக்கான வியட்நாமியர், 58,000 அமெரிக்க சிப்பாய்கள் பலியாகினர், பில்லியன் கணக்கான டாலர்கள் எரிந்து சாம்பலாயின.
அமெரிக்காவிற்குள்ளேயே மக்கள் இந்தப் போருக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். சொந்த நாட்டு மக்களே போரை எதிர்த்ததால், 1973-ல் அமெரிக்கா வேறு வழியின்றி வியட்நாமிலிருந்து வெளியேறியது. 1975-ல் வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்டு, கம்யூனிச நாடாக மாறியது. ஆயுதங்களை விட அந்த ஆயுதங்களை ஏந்தியிருப்பவனின் மன உறுதிதான் வெற்றியின் ரகசியம் என உலகிற்கு சொன்னது வியட்நாம்.
அதிநவீன தொழில்நுட்பம், டாங்கிகள், போர் விமானங்கள் என அனைத்தும் இருந்தும் அமெரிக்கா தோற்றது. காரணம், அவர்கள் ஒரு நிலப்பரப்பை வெல்ல முயன்றார்கள்; ஆனால் வியட்நாம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், சுதந்திரத்தையும் காக்கப் போராடினார்கள்.
தற்போது 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரானை எளிதில் வீழ்த்திவிடலாம் என போருக்குள் நுழைந்த அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் எதிபாராத எதிர்தாக்குதலால் நிலைகுழைந்து போயுள்ளன. அரைநூற்றாண்டுக்குப்பிறகு மீண்டும் வரலாறு திரும்புகிறது. ஆனால் இந்தமுறை பெரிய அண்ணன் என்ற மமதை வேரறுக்கப்படும் என்பதே இதுவரையிலான போரின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா அவ்வளவு சீக்கிரம் வீழ்ந்துவிடுமா? தோல்வி என்று அமெரிக்கா முடிவு செய்யுமானால் உலகம் நினைத்துப் பார்க்காத பேரழிவு ஆயுதங்களை ஈரான் மீது ஏவிவிட்டே போரை முடிக்கும். ஏனெனில் மேற்கின் குணம் அதுதான். என்ன நடக்கும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

