🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்.ஜி.ஆர். தொடர்-1

தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில்  என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் மூன்றெழுத்து மந்திரம் MGR. தாய் மொழியாம் தமிழ் கூட எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களும் இந்த மூன்றெழுத்து ஆங்கிலச் (மந்திரச் ) சொல்லை எழுதி படிப்பதாகக் கூறுகின்றனர். அதேபோல் உற்றுக்கவனித்த கற்றறிந்த சான்றோர்கள் (Man of Great Revolution) "பெரும் புரட்சியின் மனிதன்" எனக் கூறுகின்றனர். மக்களிடம் இலட்சியத்தின் காரணமாக எவறொருவர் பெருமை அடைகிறாரோ, அவர் தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும் என்று ரஷ்ய எழுத்தாளர் 'மாக்காமோன்'கூறுகிறார்.


ஒரு மனிதன் தான் தேர்ந்தெடுத்த ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம் என்ற நிலையில்,அதிலும் சமகாலத்தில் சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் மிகப்பெரிய பிரமாண்டமான வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தவர். அது மாத்திரமல்ல பெற்ற வெற்றிகளை இறுதி வரையிலும் பாதுகாத்து, தொடர்ந்து மாபெரும் வெற்றிப் பயணம் மேற்கொண்டவர். பேரறிஞர் பெருந்தகை அண்ணா-வின் இதயக்கனி,  அரசியலில் வெற்றி பெற்றது அவர் ஒரு சினிமா நடிகர் என்பதால் மட்டுமே அல்ல... அப்படி என்றால் அவர் சினிமாவில்  வெற்றி பெற்றதற்கு காரணம் ? இதையும் மீறி அதுதான் காரணம் என்று ஒரு விவாததிற்காக எடுத்துக் கொண்டால் கூட சினிமாவில் நடித்து, அரசியலில் ஈடுபட்ட நடிகர்கள் எல்லோருமே வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லையே. மற்ற நடிகர்களுக்கு இல்லாத வெற்றியும், புகழும் எம்ஜிஆருக்கு மட்டுமே கிடைத்தது என்றால், அதற்குக் காரணம் அவரது அர்ப்பணிப்புடன் கூடிய கடமை உணர்வும், மக்களுக்கு உதவக்கூடிய மனித நேயமும் தான் என்பதே உண்மை.

கடைஏழு வள்ளல்களில் எட்டாம் வள்ளலாக வாழ்ந்து வரலாறு படைத்தவர். மகாபாரத கர்ணன் கூட தன்னை நாடி வந்தவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கினார். ஆனால் இந்த எட்டாம் வள்ளலோ காண்போருக்கெல்லாம் வாரி வாரி வழங்கினார் என்பதே நிதர்சனமான உண்மை. எம்ஜிஆர் பிறர் நெருங்க முடியாத எட்டாத உயரத்திற்கு சென்ற போதும், அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடை நிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்ததால்தான், இன்றும்  சாமானிய மக்களின் மனங்களில் பொன்மனச்செம்மல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மேலும் விவசாயி, தொழிலாளி போன்ற உழைக்கும் கரங்களுக்கு உரிமைக்குரல் எழுப்பிய இவர் ஆயிரத்தில் ஒருவன் ஆவார்.  திரைப்படங்களில் புகை பிடிக்காமல், மது அருந்தாமல், பெண்களுக்கு ஓர் பங்கம் என்றால் உடனே ஓடோடிச் சென்று அதைத்தடுக்கும் வீரனாக, குழந்தைச் செல்வங்களுக்கு சமூக கருத்துக்களைச் சொல்லும் சீர்திருத்த வாதியாக, அநீதியை எதிர்த்து நீதியை நிலை நாட்டும் நல்ல கருத்துக்களை மக்களுக்குச் சொல்லும் சமூக வேடங்களில் மட்டுமே நடிப்பதை கொள்கையாகக் கொண்டு நடித்தவர் என்பதால் அவர் புரட்சி நடிகர் என்று அழைக்கப்பட்டார். அதேபோல் வாழ்க்கையில் வாழ்ந்தும் காட்டியவர் என்பதால் இன்றும் வெள்ளித்திரையில் எங்கள் தங்கம் ஆக ஜொலித்துக்கொண்டு இருக்கின்றார்.


இயற்கையாக நடிக்கும் இந்திய நடிகர் எம்ஜிஆர் என்று ஆஸ்திரேலிய நாட்டின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான 'ஜான் மெக்கலம்' பாராட்டுகிறார். அரசியலில் ஊழல் எதிர்ப்பில் தொடங்கி, கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களின் நாடித்துடிப்புகளை மிகத் துல்லியமாகப் புரிந்து, தீட்டிய திட்டங்கள் மூலம் மக்கள் பணியாற்றிய மகத்தான தலைவர். ஆதலால் தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று இரண்டு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லாமல் படுத்துக் கொண்டே வெற்றி  பெற்ற வெற்றியாளர். அதுமட்டுமல்ல, அன்னைத் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி மேல் வெற்றி பெற்று பொற்கால ஆட்சி செய்து மன்னாதி மன்னன் ஆக பவனி வந்தவர். இப்படி சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் அதிசயமாகத் திகழ்ந்தவர்  என்பதால், தமிழக மக்களின் இதயங்களில் இன்றும் இதய தெய்வம் ஆக வாழ்கின்றவர்.ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டில் தமிழகம் முழுவதும் வெற்றிப் பயணம் செய்தவர் என்பதால் இவர் புரட்சி தலைவர் என்றும் அழைக்கப்படுகின்றார். 

புரட்சி தலைவர் ஓர் தீர்க்கதர்சி ஆவார். முன்னர் வெள்ளித்திரையில் பேசிய வசனங்கள், பாடிய பாடல் வரிகள் ஆகியவற்றிற்கு எல்லாம், பின்னர் அரசியல்துறை மூலம் உயிரோட்டம் கொடுத்து அதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர். இப்பூலோகத்தில் ஒரு மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு என பெரும்பாலானோர் கருதுகின்றனர். எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், தான் வாழ்ந்த ஒரே பிறவியில் முப்பிறவி கண்ட முத்தான தலைவர். முக்கனி, முத்தமிழ்,முச்சதம், முப்படை என்பது போல் முப்பிறவி எடுத்த அதிசயமே அசந்து போகும் நிகழ்கால அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது. அலை அலையாக அடுக்கடுக்காக ஆயிரமாயிரம் போர்க்களங்கள் அமைந்தாலும் அவற்றிளெல்லாம் வெற்றி வாகை சூடிய ராஜா தேசிங்கு. எம்ஜிஆருக்கு இந்த அசாத்திய வெற்றிகள் எல்லாம் ஏதோ ஓர் இரவிலோ அல்லது ஓரிரு நாளிலோ கிடைத்துவிடவில்லை. இதற்கெல்லாம் அவர் கொடுத்த விலையோ ஏராளம், எதிரிகளின் ஏளனங்கள், துரோகிகளின் தூற்றல்கள், நண்பர்களாகக் காட்டிக்கொண்டு உடன் இருந்து கொண்டே செய்த துரோகங்கள், விமர்சனங்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே...போனாலும் அப்பப்பா சொல்லி மாளாது. இதில் எல்லாம் எதிர் நீச்சல் போட்டு வெற்றிகரமாக கரை கண்டவர் மக்கள் திலகம். 


இப்படிப்பட்ட மாபெரும் தலைவரைப்பற்றி நான் படித்ததையும், கேட்டதையும் சொல்லவேண்டுமெனில் சொல்லிக்கொண்டே போகலாம். அது நீண்ட நெடிய வரலாறு என்றாலும், அதிலிருந்து என் நினைவுகளில் உள்ள சில துளிகளை மட்டும்,அவர் தொடங்கிய அதிமுக வின் 50ஆம் ஆண்டில் பொன்விழா காணும் இத்தருணத்தில் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் எழுதுவதில் உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடைகளில்  பேசியிருக்கிறேன் அப்பொழுதெல்லாம் நான் வார்த்தைகளைத் தேடி ஒருபோதும் அலைந்தது இல்லை. ஆனால் இன்று முதல் முறையாக,அதுவும் எம்ஜிஆர் பற்றி எழுதுவதால் என்னவோ வார்த்தைகளை தேடிக்கொண்டே எழுதத் தொடங்குகிறேன்.

அன்புடன் அ.காசிராஜன். (கட்டுரையாளரின் முழுவிரங்களை அறிய நீலநிற எழுத்தின் மீது விரல்வைக்கவும்)

சரித்திரம் தொடரும்....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved