🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-2

காசிராஜன் எழுதும்  "சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்*  (முதல் வாரத் தொடர்ச்சி) 

என் உயிரின் உயிரான உறவுகளே! நேசம் மிகுந்த இனிய நண்பர்களே!! வணக்கம்.

   *மக்களை வசீகரிக்கும் அழகுமுகம், மக்களுக்காக வாரிவழங்கும் வள்ளல்குணம்* இதுதான் எம்ஜிஆர்.

மலையும் மலை சார்ந்த பகுதியான , எங்கும் பசுமை வளம் நிறைந்த  எழில் பொங்கும் கேரளா மாநிலத்தில் உள்ள நல்லேபள்ளி என்ற ஓர் அழகிய கிராமத்தில் மருதூர் கோபாலமேனன் -சத்யபாமா என்ற அன்பான தம்பதியினர் கமலாட்சி, சுபத்ரா, பாலகிருஷ்ணன், சக்ரபாணி ஆகிய நான்கு குழந்தைச் செல்வங்களோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். முதலில் ஆசிரியராகப் பணியாற்றிய கோபாலமேனன் பின்நாளில் மாஜிஸ்திரேட் ஆக பணியாற்றி வருகின்றார். அப்பொழுது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் வெறுத்துப்போன அவர்,  தன் மனைவி சத்யபாமா மற்றும் நான்கு குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறி, இலங்கையில் உள்ள  கண்டியில் குடியேறி குடும்பத்துடன் வாழத்தொடங்குகிறார்.

அங்கு இத்தம்பதியினருக்கு 1917 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 17 ஆம் நாளில் ஐந்தாவதாக ஒரு  ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை பிறக்கும் பொழுதே காண்போரெல்லம் அள்ளிக்கொள்ளும் முல்லை போல் அழகாகக் காட்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு *மதுரை வீரன்* திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அந்த காட்சியை இந்த இடத்தில் கொண்டு வருவது சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அந்தப்படத்தில் காட்டில் கிடைக்கும் குழந்தையான எம்ஜிஆரை, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, தன் மனைவியிடம் இந்தக் குழந்தை யானைக்கு பயப்படலே, சிங்கத்தைப் பார்த்தும் பயப்படலே என்பதால் இவனுக்கு வீரன் என பெயர் வைக்கிறேன் என்றும், எனக்கு நல்லாவே தோணுது இந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து நம் நாடே சுபிச்சமா இருக்கு என்றும் பேசுவார். ஆம் அப்படிப்பட்ட குழந்தை தான் இந்தக் குழந்தை என்று நாம் பின்னாளில் உணரமுடிந்தது. தங்கள் குழந்தைக்கு இராமசந்திரன் எனப்பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.  அந்தப் பெயர் சூட்டக் காரணம் மருதூர் கோபாலமேனன் அவர்களின் தந்தை பெயர் சந்திரசேகர மேனன் என்பதில் 'சந்திரன்' என்பதையும், சத்யபாமா அவர்களின் தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் 'ராம' என்பதையும் இணைத்து 'இராமச்சந்திரன்' எனப் பெயர் சூட்டினர் என்கின்றனர். இராமச்சந்திரன் என்ற அந்தக் குழந்தை செல்வச் செழிப்பில் வளர ஆரம்பிக்கிறது. பின்னர் எம்.ஜி. இராமச்சந்திரன் காலப்போக்கில்  எம்ஜிஆர் என்று சுருக்கமாக அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.

கால ஓட்டத்தில் எம்ஜிஆரின் இரண்டு சகோதரிகளும் அடுத்தடுத்து இறந்துவிடுகின்றனர். அதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்ற சகோதரனும் மரணமடைகிறார். இந்நிலை மாறுவதற்குள் எம்ஜிஆரின் இரண்டரை வயதில் தன் தந்தையையும் இழந்து விடுகிறார். இப்படி தொடர் மரணங்கள் எங்கும் வரக்கூடாது என்று  மற்றவர்களே மனம் வாடும் அளவுக்கு  சோக சம்பவங்கள் நடந்தேறியது என்றால் எம்ஜிஆரின் குடும்ப நிலை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

சகோதரர் சக்ரபாணி ஆவது தந்தையின் முகம் அறிந்தவர். ஆனால் எம்ஜிஆரோ தன் தந்தையின் முகம் கூட சரியாக அறியாதவர். வாழ்க்கை என்பது ஒரு குருஷேத்திரம். இங்கு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஓயாத போர் நடந்து கொண்டு தான் இருக்கும். போர் எனில் மோதலும் உண்டு, சாதலும் உண்டு. எக்காலமும் உண்டு, ஒப்பாரியும் உண்டு என்பார்கள். ஆனாலும் இது மாதிரி ஒரே குடும்பத்தில் தொடர் மரணங்கள் என்பது எந்த ஒரு குடும்பத்தையும் நிலை குழைய வைத்து விடும். அதேபோல் செல்வ நிலையிலிருந்த எம்ஜிஆரின் குடும்பம் வறுமையை நோக்கித் தள்ளப்படுகிறது. எனவே அங்கு வாழ வழி இல்லாத நிலையில், அன்னை சத்யபாமா தன் எஞ்சிய இரண்டு குழந்தைச் செல்வங்களுடன் தாயகம் திரும்ப முடிவு செய்கிறார்.

அதன்படி 1919 ஆம் ஆண்டு தன் முப்பது வயதில், பூவும், பொட்டும் இழந்து சக்ரபாணி மற்றும் எம்ஜிஆர் ஆகிய இரண்டு குழந்தைகளுடன்  இலங்கையில் உள்ள தலைமன்னார் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி நோக்கி கப்பலில் வந்து இறங்குகிறார். (அப்பொழுது கப்பலில் ஒரு டிக்கெட் வெறும் ஐந்து ரூபாய் தான் என்றும், பாஸ்போர்ட் எல்லாம் தேவை இல்லை என்றும் சொல்கிறார்கள் ) பின்னர் இங்கிருந்து ரயிலில் பாலக்காடு சென்று, அங்கிருந்து அவர்கள் வசித்த கிராமத்திற்கு சென்று சேருகின்றனர். அங்கு இருந்த இவர்களின் குடும்ப சொத்துக்கள் எல்லாம் உறவினர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது அப்பொழுதுதான் இவர்களுக்குத் தெரிய வருகிறது. அதை எண்ணி மிகவும் வருந்துகிறார் அன்னை சத்யா. பின்னர் உறவினர் ஒருவர் வீட்டில் தன் குழந்தைகளுடன் தங்கிக்கொண்டு வேலை தேடும் முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சி தோல்வி அடையவே, அங்கும் வாழ வழியின்றி இறுதியில் தன் சகோதரர் நாராயணன் நாயர் வாழ்ந்த கும்பகோணத்திற்கு 1920 ஆம் ஆண்டில் சக்ரபாணி மற்றும் எம்ஜிஆருடன் வந்து சேருகின்றார்.நாராயணன் நாயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் பின்பாட்டுப்பாடி வாழ்க்கை நடத்துப்பவர். இங்கு வந்து மீண்டும் பல இடங்களில் வேலை தேடி முயற்சி செய்கிறார் ௮ன்னை சத்யா. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு ஒரு வீட்டில் வேலை கிடைக்கிறது. பிறகு தன் குழந்தைகளின் படிப்பிற்காக அங்குள்ள பள்ளியில் சேர்த்து விடுகிறார். அத்துடன் தன் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு கொண்டு அறிவையும், வீரத்தையும் ஊட்டி, "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே"என்ற **நீதிக்கு தலைவணங்கு** திரைப்படப்பாடல் வரிகளுக்கு உயிரூட்டி வளர்க்கிறார். ஆனாலும் அன்னையின் வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. இடங்கள் மாறினாலும் வறுமை மட்டும் இவர்களை விட்டுப் போகவே இல்லை. அது இவர்களைத் தொடர்ந்து வரவே, மூன்று வேளை உணவுக்கே சிரமம்  இருந்ததால், ஆனையடிப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த எம்ஜிஆர், மேலும் படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதைக்கண்ட நாராயணன் நாயர் அன்னை சத்யா அவர்களிடம், எம்ஜிஆர், சக்ரபாணி ஆகிய இருவரையும் தான் பணிபுரியும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்து விடலாமா எனக் கேட்கிறார். அப்பொழுது நாடகக் கம்பெனியில் சேர்த்தால் வருமானம் ஒருபுறம் இருந்தாலும், மூன்று வேளை சாப்பாடாவது இருவருக்கும் நல்ல முறையில் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கனத்த இதயத்துடன் அனுமதி அளிக்கிறார்.

முதல் முறையாக பெற்ற அன்னையைப் பிரிந்து செல்ல மனம் இல்லாமல் இருவரும் அழுதபடியே பாண்டிச்சேரியில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த நாடகக் கம்பெனிக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். வாழ்க்கை என்ற சொல்லில் பிரிவு என்ற பொருள் இருக்கும் என்பது கவியரசர் கண்ணதாசனின் கூற்று. பிரிவு என்பது சிரமமானது தான், இருந்தாலும் மனிதன் முன்னேறிச் செல்லும் போது பிரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. எனவே பெற்ற தாயை விட்டுப்  பிரியும் இந்தப் பிரிவும் கூட அப்படிப்பட்ட ஒன்று தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் அங்கும் சில நேரங்களில் மூன்று வேளை சாப்பாடு கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளனர். அப்பொழுது அங்கு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புள்ள நாட்களில்  மட்டுமே நடிகர்களுக்கு சாப்பாடு என்ற விதிமுறை இருந்துள்ளது. இந்த விவரம் ௮றியாத சிறு வயது என்பதால் ஒருநாள் மதிய சாப்பாடுக்காக  பசியோடு மற்ற நடிகர்களுடன் எம்ஜிஆர் வரிசையில்  அமர்ந்துவிடுகிறார். இதைக் கவனித்த கம்பெனி மேலாளர் உனக்கு இன்றைய நாடகத்தில் நடிக்க காட்சி இல்லாததால், சாப்பாடு கிடையாது எனக்கூறி எம்ஜிஆரின் கையைப்பிடித்து இழுத்துச்சென்று வெளியேற்றிவிடுகிறார். இது மாதிரி இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால் பிற்காலங்களில் வளரும் நிலையிலிருந்தே சாப்பாடு விசயத்தில் எவராவது பாரபட்சம் காட்டினால் எம்ஜிஆருக்கு கடுங்கோபம் வந்து விடும். அதற்கு ஒரு உதாரணம் *உழைக்கும் கரங்கள்* திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது எம்ஜிஆருக்கு தினமும் வகைவகையான அசைவ சாப்பாடு பரிமாறப்படுகிறது. ஆனால் அந்தப் படத்தில் பணியாற்றும் மற்றவர்களுக்கு சாப்பாட்டுடன் முட்டை மட்டும் வழங்கப்படுகிறது. இந்த விபரம் ஒரு நாளில் எம்ஜிஆருக்கு தெரியவருகிறது. உடனே சம்பந்தப்பட்ட நபரிடம் எல்லோருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு கொடுங்கள். கம்பெனியால் முடியவில்லை என்றால், அதற்கான செலவை என் சம்பளத்தில் கழித்துக்கொள்கிறேன் என பொறிந்து தள்ளிவிடுகிறார். மறுநாளில் இருந்து அனைவருக்கும் எம்ஜிஆர் சாப்பிடும் அதே அசைவ சாப்பாடு வழங்கப்படுகிறது. எம்ஜிஆர் அசைவ உணவுகளை  விரும்பி சாப்பிடுவார். அதிலும் இறால் குழம்பு அவருக்கு மிகவும் பிடிக்கும்.தினமும் உணவில்  ஏதாவது ஒரு கீரை கட்டாயம் இருக்க வேண்டும் என்பாராம் . இனிப்பு வகையில்  பாசந்தி, அத்துடன் முந்திரி பக்கோடா அவரோட ஃபேவரைட். என்கிறார்கள். இப்படி சாப்பிட்டாலும் தினம் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து நீராகாரம் பருகுவதை வழக்கமாகக் கொண்டவர் , இதற்கு உடல் உஷ்ணத்தை இது தடுக்கும் என்பதுடன் நான் பழசை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக என்று கூறுவாராம். எம்ஜிஆர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அவர்களின் மூதாதையர்கள் தமிழ் நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் என்ற ஊரில் வாழ்ந்த கொங்கு வேளாளர் சமுதாயத்தின் ஒரு பிரிவான மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று, கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்பொருள் ஆர்வலருமான புலவர் செ. ராசு அவர்கள் எழுதிய 'செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர் ஓர் வரலாற்று ஆய்வு'என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அன்புடன் அ.காசிராஜன். (கட்டுரையாளரின் முழுவிரங்களை அறிய நீலநிற எழுத்தின் மீது விரல்வைக்கவும்)

 சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved