🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்! தொடர்-5.

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்.  (நான்காம் வாரத் தொடர்ச்சி )

" எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி ௭ன்பது தான் எம்ஜிஆர்  "

 1958 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16 ஆம் நாள் அன்று (வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில்)  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த கூடல் மாநகரமாம் மதுரையில்,  ௭ம்ஜிஆருக்காக  முதன் முதலில் எங்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டதோ அதே மதுரையில், நாடோடி மன்னன் படத்தின்  வெற்றி விழாப் பொதுக்கூட்டம், பொதுமக்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.  அதற்காக எம்ஜிஆர் அவர்களை, தொடர்வண்டி நிலையம் அருகிலிருந்து தமுக்கம் மைதானம் வரையில் நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவாரத்துடன் ரசிகர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பின்பு அங்கு அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் எம்ஜிஆர் அவர்களுக்கு, 110 பவுன் எடை கொண்ட தங்கவாள் பரிசு அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் முன்னிலையில் முதன் முதலாக நடந்த  திரைப்பட வெற்றி விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் உள்ள எஸ்.ஐ.ஏ.ஏ திடலில் நவம்பர் 30 அன்று நாடோடி மன்னன் பட வெற்றிவிழா நடைபெற்றது. அண்ணாவின் தலைமையில் நடந்த இந்த வெற்றி விழாவில் எம்ஜிஆருக்கு வீரவாள் பரிசு அளித்துப் பேசுகின்ற பொழுது, மரத்திலே பழுத்த கனி ஒன்று தொங்கிக் கொண்டு இருந்தது, அந்த கனி தங்கள் மடியினில் விழாதா என பலரும் காத்திருந்தனர். நல்ல வேளையாக அது  என் மடியினில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்றும், எம்ஜிஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும் என்றும்  அண்ணா பாராட்டிப் பேசினார்.

இப்படி இமாலய வெற்றி, பாராட்டு  என தன்னைச் சுற்றி புகழ் மாலைகள் சூழ்ந்த போதிலும் அதில் எல்லாம்  மயங்கி விடாமல் , எம்ஜிஆர் தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வருகின்றார். மேற்கண்ட இரு விழாக்களுக்கும் முன்பாக ஆகஸ்ட்  21 ல் திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் என்ற ஊரில், இடைவிடாது பெய்த அடை மழையிலும், மக்களின் ஆரவாரத்துடன் எம்ஜிஆரின் இன்பக்கனவு நாடகம் நடந்துகொண்டு இருந்தது. அப்பொழுது எழுபது வயது முதியவர் ஒருவர் மழையில் நடுங்கிய படியே அதிகாலை மூன்று மணிவரை நாடகம் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்த எம்ஜிஆர், அவரை அழைத்து விசாரிக்கிறார். அப்போது  அவர் ஒரு ரிக்சாக்காரர் என்றும், ஒரு நாள் கூலியைக் கொடுத்து டிக்கெட் வாங்கி வந்ததும் தெரிய வருகிறது. சென்னை திரும்பிய எம்ஜிஆர், இதற்கு மறுநாள் நாடோடி மன்னன் பட  ரிலீஸ் சம்பந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் எம்ஜிஆர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். காரில் போய் வந்த தனக்கே காய்ச்சல் என்றால், அந்த ரிக்சாக்கார முதியவரின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்த எம்ஜிஆர் அப்பொழுதே, ரிக்சாக்காரர்களுக்கு  தன் சொந்த செலவில் கவசஉடை (Rain Coat)  கொடுக்க வேண்டும் ௭ன நினைக்கிறார். அதன்படியே அண்ணா அவர்களை அழைத்து வந்து ரிக்ஸாக்காரர்களுக்கு ரெயின்கோட் வழங்குகிறார்.

அடுத்து சினிமா வசனகர்த்தா ரவீந்தர், தனக்கு திருமணம்  முடிவு செய்யப்பட்டதை எம்ஜிஆரிடம் (சக்ரபாணி ஆகியோரிடம்) தெரிவிக்கிறார். இதைக்  கேட்டதும் சக்ரபாணி, மிகவும் மகிழ்ச்சி எவ்வளவு பணம் தேவைப் படுகிறது எனக் கேட்கிறார். ரவீந்தர் வெறும் 16 ரூபாய் போதும் என்றும், எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராமில் இருக்க வேண்டும், அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார். உடனே  எம்ஜிஆர், சக்ரபாணி ஆகிய இருவரும் வீட்டின் உள்ளே செல்கின்றனர். பின்பு சக்ரபாணி மட்டும் வெளியே வந்து அந்த 16 ரூபாயைக் கொடுக்கின்றார். அதை பெற்றுக் கொண்ட ரவீந்தர், எம்ஜிஆரின் வருகையை ௭திர் நோக்கி காத்திருக்கிறார். சற்று நேரத்திற்குப் பிறகு வரும் எம்ஜிஆர் ரவீந்தரிடம் வேறு ௭ன்ன வேண்டும், உமக்காக 10,000 ரூபாய்  எடுத்து வைத்திருக்கிறேன் என்கிறார். ரவீந்தர் அதுயில்லைண்ணே, அந்த 16 ரூபாயை உங்க கையாலே தருவீங்கன்னு நினைச்சேன் எனக் கூறுகிறார். இதைக் கேட்ட எம்ஜிஆர் புன்னகை சிந்தியபடியே எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர், எனக்கு அந்த பாக்கியம் இல்லை. அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் என்றதும், கண் கலங்கிய ரவீந்தர் பணத்தைப் பெற்றுச் செல்கிறார். இப்படி எம்ஜிஆர் எந்த  உதவிகள் செய்தாலும், எல்லாமே மனநிறைவுடன் தான் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

1959 ல் அண்ணாவின் "தாய் மகளுக்கு கட்டிய தாலி" படம் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியானது. மேலும்  டாக்டர் கே. சுப்பிரமணியம் என்பவரால் தொடங்கப்பட்ட தமிழ் நடிகர் சங்கத்திற்கு, எம்ஜிஆர் தென்னிந்திய நடிகர் சங்கம் எனப் பெயர் சூட்டுகிறார். பின்னர் அந்த நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றுகிறார். பிறகு இச்சங்கம் சார்பில் நடிகன் குரல் என்ற பத்திரிக்கை  தொடங்கி, அதன் பதிப்பு ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அதுபோல் அண்ணாவின் பெயரில் நாளிதழ் தொடங்கி அதன் ஆசிரியராகவும் திறம்பட பணியாற்றியவர். 1960 ல் திமுக சார்பில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபொழுது, எம்ஜிஆர் அதில் கலந்து கொள்ளாமல் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் நடிப்பதற்காக கோவா சென்றுவிட்டார் எனச் சிலர் முனுமுனுத்தனர். அதற்கு ஜூலை 31  அன்று சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அண்ணா, கலைஞர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்ல நேர்ந்தால் அதன்பிறகு கலைத்துறை 15 ஆண்டுகள் நம் கையை விட்டுப் போய்விடும் என்பதால் தான் அவர்களுக்கு இப்போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளித்து இருந்தேன். இதில் எம்ஜிஆருக்கு கூட என் மீது கோபம் எனப் பேசினார். அதற்குப் பிறகு தான் எம்ஜிஆர், அண்ணாவின் விருப்பத்தின் பேரில்  கோவா சென்று இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த பாடல் மன்னாதி மன்னன் திரைப்படத்தில் வரும், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா, ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா என்ற பாடல் வரிகள் தான். அவர் காரில் பயணம் செய்யும் பொழுது விரும்பிக் கேட்கும் பாடல்  இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 1961 ஆம் வருடம் திருடாதே படம் தொடங்கிய நேரத்தில், சீர்காழியில் எம்ஜிஆர் நடித்த இன்பகனவு நாடகம் நடந்தது. அதில் எம்ஜிஆர் 250 பவுண்ட்  எடை  கொண்ட குண்டுமணியை  தலைக்கு மேல் அலேக்காக தூக்கும் காட்சியில், எம்ஜிஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. அதற்கான சிகிச்சை  பெற்று குணமாக ஆறுமாத காலமாகிறது. இதற்கிடையில் ௭ம்ஜிஆரின் வளர்ச்சியை விரும்பாத ஒரு சிலர்,  இனிமேல் அவரால் சண்டைக் காட்சிகளில் முன்பு போல் துள்ளிக் குதித்து நடிக்க முடியாது என்றும், அவருடைய திரையுலக வாழ்க்கை இத்துடன் முடிந்து விடும் எனவும் பேசத் தொடங்கினர். ஆனால் அவர்களின் ஆசையை நிராசை ஆக்கிய ௭ம்ஜிஆர் சினிமா, அரசியல் என இரண்டிலும்  தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தார்.

1962  ல் தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகின்றது. கடந்த தேர்தலில் சொற்ப தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்த எம்ஜிஆர், இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுகவிற்காக வாக்குகள் சேகரித்து களப்பணி ஆற்றுகிறார். இடையில் தன் மனைவி சதானந்தவதியின் உடல்நிலை மோசமான செய்தியும் வருகிறது. அந்த இக்கட்டான நிலையிலும் தன் கடமையை செவ்வனே முடித்துவிட்டுத் தான் சென்னை திரும்புகிறார். அதேபோல் அண்ணாவும் முன்னனி தலைவர்களும் பிரச்சாரக் களத்தில் வாக்கு சேகரித்தனர். தேர்தல் முடிவு வரும் வேளையில் எம்ஜிஆரின் மனைவி மரணம் அடைகிறார். ஆதலால் எம்ஜிஆர் மிகுந்த மனவருத்தம் கொள்கிறார். ஆனால் தேர்தலில் திமுக 50 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுகிறது. இந்த வெற்றிக்காகப் பணியாற்றிய எம்ஜிஆருக்கு சட்டசபையில் மேலவை உறுப்பினர் பதவி கொடுத்து அண்ணா அழகு பார்க்கின்றார்.  இதன் பின்னர் எம்ஜிஆரின் மனைவியாகிறார் வி. என். ஜானகி அம்மையார்.

சரித்திரம் தொடரும்.....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved