🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்!- தொடர்-6.

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் ( ஐந்தாம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம், "வறுமையைக் கண்டு பயந்து விடாதே, திறமை இருக்கு மறந்து விடாதே "

அனைத்திலும்  முன்னோடியாகத் திகழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள், தேசப்பற்றிலும் கூட எவருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை  நிரூபித்தவர். ஆம், தேசப்பற்றில் எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே என்பதற்கு ஒரு செய்தியை தங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1962 ஆம் ஆண்டு செப்டம்பரில் நம்  இந்திய திருநாட்டின் மீது சீனா திடீர் தாக்குதல் நடத்தி  போரைத் தொடங்கிய பொழுது, அப்போதைய பிரதமர் நேரு நாட்டு மக்களிடம், யுத்த நிதி கேட்டு வானொலியில் உரையாற்றினார். பிரதமரின் உரையைக் கேட்டதும் உடனே 75000 ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல, முதல் குடிமகனும் எம்ஜிஆர் தான் என்பதே உண்மை. அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய தொகையை எவருமே கொடுக்கவில்லை. ஆதலால்  அப்போதே யுத்த நிதியாக பெரும் தொகையை வாரி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்ஜிஆருக்கு, ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன் என்று பிரதமர் நேரு கடிதம் எழுதியுள்ளார். எம்ஜிஆரின் நாட்டுப்பற்றைப் பாராட்டி நேரு எழுதிய கடிதம் இன்றும் அவரின் நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது.

1963 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் "பரிசு" திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தின்  சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கப்படுகிறது. அப்போது 30 வயதான பெண் ஒருவர் ஓடிவந்து எம்ஜிஆரிடம், தன் பெயர் தேவகி என்றும், தன் குடிகாரக் கணவர் வனத்துறையில் பணியாற்றிய பொழுது யானை தாக்கி இறந்துவிட்டார் என்றும், அதற்கு அரசின் சார்பில் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரப்படாததால் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிரமப் படுவதாகவும் கதறுகிறார். உடனே  வனத்துறை அதிகாரியிடம் பேசிய எம்ஜிஆர், ஒரு மாதத்திற்குள் அப்பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 27000  பெற்றுத்தருகிறார். அத்துடன் அவரின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும்  எஸ்.எஸ்.எல்.சி வரை படிப்பதற்குரிய  செலவுத் தொகையை, படத்தயாரிப்பாளர் "கொட்டாரக்கரா" விடம்  தன் சம்பளத்திலிருந்து பெற்று, அந்தப் பெண்ணுக்கு கொடுத்து உதவுகிறார். இப்படி தன் உழைப்பில் சம்பாதித்த ஊதியத்தை எல்லாம் வாரி வாரி  வழங்கியவர் எம்ஜிஆர்.

இதே ஆண்டில் எம்ஜிஆர் நடிப்பில்  வெளியான "பணத்தோட்டம்" வெறும் 18 நாட்களில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிர்வாகியான ஆர்.எம். வீரப்பனுக்கு "சத்யா மூவீஸ்" என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி வைத்து , "தெய்வத்தாய்" என்ற படமும் நடித்துக் கொடுக்கிறார். இந்த படத்தில் தான் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் வசன கர்த்தாவாக அறிமுகம் ஆகிறார். படம் 100 நாட்களைக் கடந்து நல்லதொரு வெற்றியைப் பெறுகிறது. ஆனாலும் இந்தப் படத்திற்கு  வெற்றி விழா கொண்டாட வேண்டாம் என்று எம்ஜிஆர் கூறிவிடுகிறார். அதற்கு காரணம் அப்பொழுது  கடுமையான அரிசி பஞ்சம்  ஏற்பட்டு மக்கள் கடும் துன்பத்தில் இருந்த நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

1964 ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காமராஜர் "வேட்டைக்காரன்" வருவான் எச்சரிக்கையாக இருங்கள் என்று பேசும் அளவுக்கு,  வேட்டைக்காரன் படம் வெளியாகி மக்கள் ஆதரவில் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் அந்த தேர்தலில் திமுக வென்று மாநகராட்சியை கைப்பற்றியது. இந்த படத்தில் 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்ற உணர்ச்சி மிகுந்த பாடல் அன்று முதல் இன்றுவரை தன்னம்பிக்கையை ஏற்படுத்த அரசியல், இலக்கிய மேடைகளிலும், பயிற்சிப்பட்டறைகளிலும் மேற்கோள் காட்டப்பட்டுவரும் காலத்தால் அழிக்கமுடியாத பாடலாக வலம்வருகிறது. இதே ஆண்டில் வெளியான "படகோட்டி" படத்தின் ஒரு காட்சியில் எம்ஜிஆர், 'நான் தனி மனிதன் அல்ல, மக்களுக்குக் கட்டுப்பட்டவன். நான் தலைவன் அல்ல, தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை நான்' என்று நாயகி சரோஜா தேவியிடம் பேசும் அந்த காட்சி, திரையரங்கில் மக்களின் ஏகோபித்த ஆரவாரத்தை பெற்றது.

1965 ஆம் ஆண்டு ஜூலை 15 ல் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேசிய எம்ஜிஆர், அண்ணா என் வழிகாட்டி, காமராஜர் என் தலைவர் என்று பேசுகிறார். இதைக் கேட்ட திமுகவின் முன்னணியினர் எம்ஜிஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாவிடம் கூறியபோது,  எம்ஜிஆரை வைத்தே காமராஜரை வீழ்த்தலாம் என்று கூறியதுடன், எம்ஜிஆரின் செல்வாக்கை எவரும் எளிதாக கருதிவிட வேண்டாம் என்று கூறிய அண்ணா, எம்ஜிஆரின் செல்வாக்கை அன்றே மிகச்சரியாகக் கணித்தவர். அதுமட்டுமல்ல அன்றைய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் "பணத்தோட்டம் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை "  அந்தமானில் திறந்து வைக்கிறார் .ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை ஒரு நாட்டின் பிரதமரே திறந்து வைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு என்பதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

அதுமாத்திரமல்ல மத்திய அரசு தனக்கு பத்மஸ்ரீ விருது அளித்த பொழுது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் காரணம் காட்டி அந்த விருதை வாங்க மறுத்தவர். பிறகு அதே ஆண்டில் எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான "எங்க வீட்டுப் பிள்ளை" படமும் மிகப்பெரிய  வெற்றியைப் பெற்று, திரை உலகில் அதுவரை இல்லாத வசூலை அள்ளிக் குவித்தது. அந்தப் படத்தில் எம்ஜிஆர் பாடிய , 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் 'என்ற பாடல் தமிழக மக்களிடம் எம்ஜிஆருக்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்தது.

இயற்கை அன்னையின் விருப்பத்தில், சினிமா எனும் உளிகொண்டு காலச்சிற்பி ஒரு தலைவனை செதுக்கும் அழகினை பாருங்கள். அன்னை வளர்ப்பில், அண்ணன் துணைகொண்டு, நாடகத்தில் கால்பதித்து, சினிமாவில் சிகரம் தொட்டு, அரசியலில் அடிவைத்து, அகிலத்தின் பார்வைபட்டு, அத்தனையும் ஒருசேர ஒரு தலைவனை இயற்கை படைப்பதை ரசிப்பதிலே சுகம்...சுகம்....

சரித்திரம் தொடரும்..

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved