🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்!- தொடர்-8

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்(7 ஆம் வாரத் தொடர்ச்சி).

எம்ஜிஆரின் தத்துவம்: "சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே"!

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தின் தலைமை பீடமாகத் திகழும் சென்னையின் பல்வேறு இடங்களில் இடைவிடாது பொழியும் பருவ மழையால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கும், அவதிக்கும் உள்ளானதை தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் அறிந்தேன். மேலும் சில கடலோர மாவட்டங்களிலும் இதே நிலையே. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி  அலங்கோலமாக நீரில் மூழ்கிக் கிடப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர் கொண்டு வரும் இயற்கையை எவராலும் தடுத்துவிட முடியாது என்றாலும், தாய் உள்ளதோடு  தமிழக அரசு தன் சீரிய, வீரிய பணிகளை முடுக்கிவிட்டு மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனக் கேட்டு இந்த வாரத் தொடர்ச்சியைத் தொடங்குகிறேன்.

1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற  சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது அண்ணாவின் தலைமையிலான திமுகவில், புரட்சி தலைவர் எம்ஜிஆர்  அவர்கள்  முதன் முறையாக பரங்கிமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகக் களமாடுகிறார். அதற்காக  ஜனவரி 12 ல் வெள்ளமெனத் திரண்ட மக்கள் கூட்டத்தில் தொகுதி முழுவதும்   பிரச்சாரம் செய்கிறார்.  பின்னர் மக்கள் கடலில் நீந்தியவாறே மதிய உணவுக்காக தன் ராமாவரம் இல்லத்திற்கு திரும்புகிறார்.  அன்று மாலை புதுப்படம் விசயமாகப் பேசுவதற்காக, "பெற்றால் தான் பிள்ளையா" தயாரிப்பாளர் வாசுவும், நடிகர் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வருகிறது. பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டிய நிலையிலும் தன் இல்லத்திற்கு வரும் இருவரையும் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த  பொழுதே எம்.ஆர்.ராதா தன் கைத்துப்பாக்கியால், எம்ஜிஆரின் தொண்டையில்   சுட்டு விட்டு,  தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார். பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இதையடுத்து  நீதிமன்ற விசாரணையில், (சார்பு ஆய்வாளர் துரை உத்தரவுப்படி) தலைமைக் காவலர் லட்சுமணன், MSZ 1843 என்ற காரில்  வந்த எம்.ஆர்.ராதாவை ரத்தக் காயத்துடன் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு  கூட்டிச்சென்றதாகவும் அப்போது, அவர் தன் கைப்பட எழுதிய நான்கு பக்கம் கொண்ட  ஒரு கடிதத்தை தன்னிடம் கொடுத்தாகவும் கூறி அந்த கடிதத்தைக் கொடுக்கிறார். அந்த கடிதத்தில் எழுதி இருந்த ஒரு பகுதி இது தான் : ஜனவரி 8 அன்று தந்தை பெரியாரின் தலைமையில்  கூட்டம் நடந்தது. அதில் நான் பேசும் பொழுது, வரும் தேர்தலுக்குள் உயிர் தானம்  செய்வதற்கு ஒரு இயக்கம் தேவை. அதற்கு நான் தலைமை தாங்கத் தயார். நல்லவர்களை, நல்ல ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சதிகாரர்களின் உயிரை, ஒன்றோ இரண்டோ எடுக்க வேண்டும். இது தான் உயிர் தானம் செய்யும் இயக்கத்தின் கொள்கை. நான் செய்கிறேன், நீங்களும் இது போல் செய்ய வேண்டும். செய்வீர்களா? என்று உரையாற்றினேன். கூட்டம் முடிந்து நான் போகும் போது, உயிர் தானம் செய்ய வேண்டும் என்று  எம்.ஆர்.ராதா சொல்லி விட்டாரே, அவர் முதலில் செய்தால் பிறகு நாம் செய்வோம் எனக் கிண்டலாகவும், சிரித்துக் கொண்டும் பேசினார்கள் என்பது தான் அந்த கடிதத்தின் சாராம்சம். நீதிமன்றம் எம்.ஆர்.ராதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. எம்ஜிஆர் சுடப்பட்ட செய்தி அறிந்ததும்  அவரின் அபிமானிகள், ரசிகர்கள், பொதுமக்கள் என  அதிக அளவில் கூட்டம் கூடி விடுகின்றனர். அந்த கூட்டத்தில்,  கூட்டமாக இருந்தவர்களில் அன்றைய சட்டக் கல்லூரி மாணவரும், இன்றைய மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ வும் ஒருவர் என ஹிந்து பத்திரிக்கை தெரிவித்து உள்ளது. பின்பு எம்ஜிஆரின் தொண்டையில் இருந்த குண்டை அகற்றிய மருத்துவர்கள் இனிமேல், எம்ஜிஆரின் உயிருக்கு  ஆபத்து இல்லை என அறிவித்த பிறகே, கூட்டம் கலைந்து செல்கிறது. ஆனாலும்,எம்ஜிஆர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால், மருத்துவமனையில் இருந்தவாறே, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதியுடன் எம்ஜிஆரால் கையெழுத்திடப்பட்ட  வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகிறது. சுடப்பட்ட  கழுத்தில் கட்டுடன், கைக்கூப்பி வாக்கு கேட்கும் எம்ஜிஆரின் படம் பொறித்த சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் பிரச்சாரக் களம் கண்டது. அண்ணாவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒருபடி அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவோம் என்று பிரச்சாரம் செய்தார். எம்ஜிஆரின் குண்டடிபட்ட சுவரொட்டிகளைக் கண்டு பொங்கி எழுந்த தமிழக மக்கள்  திமுகவிற்கு 137 இடங்களில் வெற்றியைக் கொடுத்தனர். எம்ஜிஆரும் படுத்துக்கொண்டே பரங்கிமலையில் வெற்றி வாகை சூடுகிறார். அத்துடன் தான் நேசித்த தலைவர் அண்ணா முதன் முறையாக  ஆட்சி அரியணையேறி முதல்வரானதைக் கண்டு  எம்ஜிஆர் மகிழ்ச்சிக் கடலில் நனைகிறார். அதேபோல் அண்ணாவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் எம்ஜிஆருக்கு சிறு சேமிப்புத் துறைத்தலைவர் பதவி வழங்கிப் பெருமை படுத்துகிறார். பின்னர் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய எம்ஜிஆருக்கு  குரல் வளம் பாதிக்கப்படுகிறது.

இதைக் கண்டு அவரின் வளர்ச்சியை விரும்பாத சிலர், இனிமேல் எம்ஜிஆர் முன்பு போல் நன்றாக வசனம் பேசி சினிமாவில் நடிக்க முடியாது என்றும், அவரின் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விடும் எனவும் எக்காளம் பேசுகின்றனர். சினிமா தயாரிப்பாளர்களும் வசனம் பேசுவதில் பின்னணி குரல் கொடுக்கலாம் என எம்ஜிஆரிடம் ஆலோசனை கூறினர். ஆனால் அவற்றை யெல்லாம் நிரகாரித்த எம்ஜிஆர் தீவிர முயற்சி மற்றும் பயிற்சி எடுத்து, தன் சொந்த குரலிலேயே பேசி வெற்றி கண்டார் . அப்படி எம்ஜிஆர் பேசி நடித்து முதலில் வெளியான "காவல்காரன்" படம் நூறு நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. பின்னர் 1968 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 4 முதல்  11ஆம் நாள்  வரை சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. அப்போது அண்ணா சாலையில் அண்ணாவின்  கை ஆட்காட்டி விரல் நீட்டும்  தோற்றதுடன் கூடிய முழு உருவ வெண்கலச் சிலையை எம்ஜிஆர் தன் சொந்த செலவில்  நிறுவுகிறார். அந்த சிலையை சர். ஏ. ராமசாமி முதலியார் திறந்து வைத்தார். எம்ஜிஆர் அன்று வைத்த அண்ணா சிலை இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. இந்த உலகத் தமிழ் மாநாட்டின் கருத்தரங்கில் உரையாற்றிய எம்ஜிஆர், அழகும், உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்தது தான் கவிதை என்று பேசியபோது, கூடியிருந்த கூட்டத்தினர் விண்ணதிர கரகோசம் எழுப்புகின்றனர். பின்னர் அண்ணா பேசியபோது, "அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே, அறிந்தது தான் என்றாலும் எத்துனை அழகம்மா என்று அறிந்தோரையும் வியக்க வைக்கும் அருங்கலையே கவிதையாகும் என்கிறார். இப்போதும் அதே கரகோசம். இதைத் தொடர்ந்து மீண்டும் பேசிய அண்ணா, அழகும் உள்ளத்து உணர்வும் சேர்ந்தது தான் கவிதை என்று எம்ஜிஆர் பேசினார், நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன், பிறகு தான் தெரிந்தது, அவர் தன்னைப் பற்றியே சொல்லி இருக்கிறார் என்று, ஆம் அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்ஜிஆரே ஒரு கவிதை தானே என்றவுடன், மக்களின் ஆரவாரம் அடங்க வெகுநேரம் ஆகிறது.இப்படி அண்ணா அவர்களிடம் அதிகம் பாராட்டுப் பெற்றவர்.  எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான "குடியிருந்த கோயில்" திரைப்படம் அளப்பரிய வெற்றி பெற்று வசூலைக் குவித்தது . அதில் ஒரு காட்சியில் பாபு என்ற எம்ஜிஆரிடம் நம்பியார், நீ உயிரைப் பற்றி கவலைப் படாதவன், அதே நேரத்தில் உயிரையும் கொடுக்காதவன் என்று பேசுவார்.  இது மாதிரியான வசனங்கள் எம்ஜிஆரின் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. திரை உலகில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கிய எம்ஜிஆர், சில காலம் கிடைக்கும் வேடங்களில் தன் ஆற்றலை நிரூபித்து , அதன் காரணமாக கதாநாயகன் என்ற உச்சத்தில் உயர்ந்து வெற்றிக்கொடி நாட்டியவர். தற்போது திரை உலகின் முடிசூடா மன்னனாக நூறாவது படமான "ஒளிவிளக்கு" படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு போலவே தமிழக மக்களுக்கு ஒளி விளக்காக விளங்கியவர் என்பதை இந்தப் படத்தின்  வெற்றியே உணர்த்தியது.  அடுத்து  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அண்ணாவுக்கு, எம்ஜிஆர் கார் ஒன்றை பரிசாகக் கொடுக்க விரும்புகிறார். அதற்காக விழா எடுக்க கழகத்தினர் முடிவு செய்தபோது, அதை  வேண்டாம் என எம்ஜிஆர் மறுத்தும், விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் பேசிய பலரும் எம்ஜிஆரைப் பாராட்டிப் பேசுகின்றனர். பின்னர் உரையாற்றிய எம்ஜிஆர், என்னை ஏதேதோ சொல்லி பலரும் பாராட்டினீர்கள். இதையெல்லாம் கேட்டு மகிழ நான் இங்கு வரவில்லை. பிறகு எதற்காக ராமசந்திரன் இங்கு வந்தான் என நீங்கள் கேட்கலாம். ஒரே காரணம் இன்றிலிருந்து நம் அண்ணா அவர்களை காரில் அழைத்துச் செல்லும் காரோட்டி தோழருக்கு ஒரு அறிவுரை சொல்லத்தான் இங்கு வந்திருக்கிறேன். அன்பு தம்பியே, நீ காரில் அழைத்துச் செல்லக் கூடியவர் பெரிய எழுத்தாளர், அடுக்கு மொழி பேசுபவர், ஆங்கில புலமை வாய்ந்தவர், இந்நாட்டின் முதலமைச்சர் என்று மட்டும் எண்ணி விடாதே. நீ கார் ஓட்டிச் செல்லும் ஒவ்வொரு வினாடியும், உள்ளே இருப்பவர் தமிழ் நாட்டின் தலை எழுத்து என்ற கவனத்துடன், பயத்தோடு ஓட்டு என்று கரிசனத்துடன் , அல்ல அல்ல  எச்சரித்துப் பேசினார். அதன் பின்னர் கரூரில் திருமுருக பக்தர் கிருபானந்த வாரியாரால், எம்ஜிஆர் அவர்களுக்கு "பொன்மனச் செம்மல்" பட்டம் கொடுக்கப்படுகிறது.

         சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved