🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நடுரோட்டில் வழிமறித்து லட்சம் நன்கொடை! அதிர்ச்சியளித்த நாமக்கல் உறவுகள்.

சென்னை, செங்குன்றத்தில் நடைபெற்று வந்த வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள், கொரோனா பெருந்தொற்று காரணமாக தேவையான நிதி ஆதாரத்தை திரட்ட முடியாததால், கடந்த ஒன்றரை வருடங்களாக கட்டுமானப்பணியில் முன்னேற்றமின்றி சுணக்கம் நிலவியது. இந்த இடைப்பட்ட காலத்தில் DNT ஒற்றை சான்றிதழ்,  வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு ஆகிய பிரச்சினைகளில் பிற சகோதர அமைப்புகளோடும், தோழமை சமூகத்தினரோடும் இணைந்து நலச்சங்கம் போராடி வந்தது. இக்காலகட்டத்தில் வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 8/2021 அதிமுக தலைமையிலான தமிழக அரசு கொண்டு வந்தவுடன், இராஜகம்பளத்தார் மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை, நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை, சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஆகியவை இணைந்து சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் உடனடியாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர ஆரம்பகட்ட நிதியை அளித்து பேருதவி புரிந்தது. இதனையடுத்து செப்டம்பர்-6 இல் சென்னையில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் தமிழகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட கம்பளத்தார்களை கலந்து கொள்ளச்செய்ய உறுதுணையாக இருந்தோம்.

கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துவரும் நிலையில்,  சங்கத்தின் ஆதாரமாகவும், அடையாளமாகவும் விளங்கும் கட்டிடத்தின் கட்டுமானப்பணியை நிறைவு செய்ய "சங்க நிர்வாகம்" போதிய கவனம் செலுத்தவில்லை என்று சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில், மூத்த நிர்வாகியும், மண்டல ஒருங்கிணைப்பாளருமான திரு.தங்கம் உள்ளிட்ட மூத்த ஆலோசகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஏற்கனவே சென்னை, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் பொருளாதார பற்றாக்குறையால் கடனில் தத்தளித்து வரும் நிலையில், கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த தொழில்துறையினரும் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெறுவதும், ஏற்கனவே நிதியுதவி தர ஒப்புக்கொண்டவர்களிடம் நிதியை கேட்பதற்கும் அச்சமாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் கட்டுமானப்பணியை தொடங்கி, விரைவில் முடித்து, சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் கடும் அழுத்தம் தந்தது, நிர்வாகத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த இக்கட்டான  சூழலில், நலச்சங்கம் இதுவரை நன்கொடையாளர்களிடம் பெற்றுள்ள நன்மதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே நன்கொடை வழங்கிய நல்உள்ளம் கொண்ட "பெருந்தொழிலதிபர்" ஒருவரின் உதவியை நிர்வாகம் நாடியது. கணிசமாக  ஒரு தொகையை குறிப்பிட்டு கேட்டவுடன் அடுத்த ஒரு சில நாட்களில் சென்னைக்கே மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்து அதிர்ச்சியளித்தார். அதுபோலவே சங்கத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து ஆதரவளித்து வரும் பெயர் சொல்ல விரும்பாத "பெரிய அதிகாரி", தம்பி, ஆளை அனுப்புங்க கொடுத்து விடுறேன் என்று சொன்னவர், சொல்லியதுபோலவே உடனடியாக கணிசமான தொகையை கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

உறவுகளின் இந்த ஆதரவு கட்டுமானப்பணியை மீண்டும் தொடங்கிட உதவிகரமாக இருந்தது நிர்வாகத்திற்கு பெருமகிழ்ச்சி அளித்தது. இந்த மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கில், நமது சங்கம் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், நம்மைப்போன்ற 115 மிகவும் பிற்படுத்தப்பட்டசமுதாயங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நவம்பர் 1-ஆம் தேதி வழங்கிய நீதி, இடைப்பட்ட ஒன்னரை வருட காலம் நாம் நடத்திய போராட்டமும், எடுத்த முயற்சியும் வீண்போகவில்லை என்ற மகிழ்ச்சியும் சேர்ந்துகொண்டது. ஆனால் இந்த மகிழ்ச்சியோடு கூடுதல் சுமையும் சங்க நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. ஆம், சங்கத்தின் சார்பில் வருடம்தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளில் நடைபெறும் குடும்பவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 ஆம் ஆண்டுகளில் பெரிய அளவில் உறவுகளை அழைத்து நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு குடும்பவிழாவோடு, சுயம்வரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து வருடந்தோறும் உறுப்பினர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும்  வழங்க காலண்டர் அச்சடிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கால அவகாசமோ ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இவை அனைத்திற்கும் நிதி திரட்டுவதே நிர்வாகத்திற்கு கடும் சவாலான பணியாக மாறியுள்ளது. சரி,ஜனவரி குடும்பவிழாவோடு இப்பிரச்சினை முடிவுக்கு வருமா என்றால் இல்லை. 

ஆம், வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று நம்மோடு இணைந்து 245 சமூகங்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து, தற்பொழுது உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அரசின் வரிப்பணத்தில் 245 சமுதாய மக்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை உணர மறுக்கும் தமிழகஅரசு, நம் வரிப்பணத்தில் நமக்கெதிராகவே செயல்படுவதாக அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை 7 கேள்விகளை எழுப்பி, வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கிலும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றத்தில் தோல்வி நிச்சயக்கப்பட்டது என்பது சட்டம் தெரிந்த அனைவரின் கருத்தாக உள்ளது. வாக்கு அரசியலுக்காக அரசியல் கட்சிகள் ஒருதரப்பினரை திருப்திபடுத்த முயற்சி செய்துவருகின்றன. உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பாக நமக்கு கிடைத்த வெற்றியை நிலைநிறுத்த முடியும் என்பது உறுதி. ஆனால் பிரச்சினை வெற்றியல்ல. அந்த நிச்சயக்கப்பட்ட வெற்றிக்கு கொடுக்கும் விலை தான் அதிகம்.

தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்தியாவில் மிகப்பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் வாதாட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியிலும் தலைசிறந்த வழக்கறிஞர்கள் ஆஜராவது நிச்சயம். ஏனெனில் உயர்நீதிமன்றத்தில் பாமக சார்பில் ஆஜரான பெரும்பாலான வழக்கறிஞர்கள், பல மாநிலங்களில் அரசின் தலைமை வழக்கறிஞர்களாக இருந்தவர்கள். மாநில அரசின் தலைமை வழக்கறிகஞராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை உருவாகியவர்கள் இவர்களே. இப்படியான பின்புலத்தில் இருப்பவர்கள் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை ஆதரித்து வாதிட்டாலும், சட்ட வரையறைகளும், பல நீதிமன்ற தீர்ப்புகளும் நமக்கு சாதகமாக இருந்தபடியால் மூத்த வழக்கறிஞர்கள் கே.எம்.விஜயன், பாலசுப்பிரமணியன் போன்ற ஒருசில வழக்கறிஞர்களை வைத்தே வெற்றி பெற்றுள்ளோம். உச்சநீதிமன்றத்திலும் பல புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் நமக்கு எதிராக வாதாடவுள்ள சூழலில், நமது தரப்பில் அரசியலமைப்பு சட்டத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒரிருவரையாவது நியமிப்பது அவசியம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் இதுமாதிரியான வழக்குகளில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்களின் கட்டணம் ஒரு வழக்கு விசாரணைக்கு ஒருநாள் ஆஜராகி அதிகபட்சம் 45 நிமிடங்கள் வாதிட குறைந்த பட்ச கட்டணம் 6 லட்சம், முதல் 20-30 லட்சம் வரை. இது நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், எதார்த்தநிலை இதுதான்.

எம்பிசி பட்டியலில் வன்னியர் அல்லாத 115 சமுதாயங்கள் இருந்தாலும், வண்ணார், நாவிதர், பண்டாரம் போன்ற சேவை சமூகங்களும், போயர்,நரிக்குறவர்,மீனவர் போன்ற பொருளாதரத்தில் பின்தங்கிய சமூகங்கள் நிறைந்துள்ளன. இதில் பொருளாதார ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் வலிமையான சமூகம் என்றால் கள்ளர், மறவர் சமூகங்களும், ஓரளவு அரசியல் பின்புலமுள்ள சமுதாயமாக முத்தரையர்கள் வருவார்கள். தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர் போன்ற சமூகங்கள் ஒரே அந்தஸ்தில் உள்ள, பெரிய அளவில் அரசியல், பொருளாதார பின்புலம் இல்லாத சமூகங்கள். உச்சநீதிமன்றத்தில் நாம் தடுப்பாட்டம் மட்டுமே ஆட உள்ளோம். அதற்கே ஆகும் செலவு பிரமிக்க வைக்கிறது. இதுவே வழக்கை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல். இதை எதிர்கொள்வது குறித்து சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கடந்த ஒருவாரகாலமாக சகோதர அமைப்புகளுடன் ஆலோசித்து வந்தது.

இதற்கிடையே, நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், தீவிர சமுதாயப் பற்றாளருமான திருப்பூர் ஏஞ்சல் பிரின்டர்ஸ் உரிமையாளர், தொழிலதிபர் திரு.முருகன் இல்ல திருமணத்திற்கான அழைப்பிதழ் சங்க நிர்வாகத்திற்கு வந்தது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், சங்கத்தின் வருமான வரி தாக்கல் செய்யும் கெடு அடுத்த மாதம் முடிவடைகிறது. பொருளாளர் அப்பணியில் ஈடுபட்டு வருவதால் நிகழ்ச்சிக்கு செல்வது திடீரென ரத்தாகிவிட்டது.

திருமண விழாவில் சென்னை சங்க நிர்வாகிகள் நாமக்கல் வருவதை உறுதி செய்துகொண்ட நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும், நிர்வாகத்தினரும், வித்தியாசமான முறையில் "சர்ப்ரைஸ்" கொடுக்க காத்துக் கொண்டிருந்தனர். திருமண விழாவில் கலந்துகொள்ள நாமக்கல் சென்ற சங்கத்தின் பொதுச்செயலாளர், திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முன்னாள் பிடிஓ திரு.நாகப்பன் அவர்களுடன் சென்று சில நண்பர்களை சந்தித்துக் கொண்டிருக்கும்பொழுதே, அவ்வப்பொழுது  பிடிஓ-விற்கு போன்செய்து, இருக்கும் இடத்தை உறுதி செய்திகொண்டு வந்தனர் அறக்கட்டளையினர். திடீரென சர்ப்ரஸ் சந்திப்பை ராசிபுரம் பைபாஸ் சாலை கார்னரில் நடைபெற்றது. நாமக்கல் அறக்கட்டளை தலைவர் திரு.மு.பழனிச்சாமி, அக்கம்மாபாளையம் திரு.சரவணன், ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே, பொலிரோ வாகனத்திலிருந்து இறங்கி வந்தார் விடுதலைக்களம் கட்சியின் தலைவர் கொ.நாகராஜன். ஒருசில நிமிடங்களில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்தேறியது. பஞ்சம் பிழைக்க சென்றவர்கள் சமுதாயப்பணியாற்றுவது சாதாரண விசயமல்ல என்பதை அதையே இங்கு செய்துவரும் நாங்கள் (அறக்கட்டளையினர்) உணராதவர்கள் அல்ல. "யாசகம்" பெற்றாவது நீங்கள் ஆற்றிவரும் பணி மகத்தானது. அப்படி வரும் சங்கத்தினர் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்துவிட்டு வெறும் கையுடன் அனுப்புவது எங்கள் மண்ணுக்கு பெருமை அல்ல. நீங்கள் வருவது அறிந்து அறக்கட்டளை முக்கிய நிர்வாகிகளிடம் உடனடியாக திரட்டியதொகை தான் இது என்று சொல்லி, நடுரோட்டில் நடந்த சந்திப்புக்கு மத்தியில்  ரூபாய் ஓரு லட்சம் (ரூபாய்.100000/-) கட்டிட நன்கொடையாக வழங்கி இன்ப அதிர்ச்சியளித்து நாமக்கல் மண்ணின் பெருமையை உணர்த்தினர் அறக்கட்டளை உறவுகள்.

இடஒதுக்கீடு விவகாரத்தில் முழு ஈடுபாட்டோடு, உள்ளூரில் நடத்திய பல போராட்டங்கள் தவிர்த்து, சென்னை, திருச்சி, மதுரை என எங்கு போராட்டத்திற்கு இடம் குறித்தாலும் அங்கு பெரும்படையோடு இறங்குவது அறக்கட்டளையினரின் சிறப்பு. வாகன செலவு மட்டுல்ல, உடன் வருவோருக்கு உணவு வழங்கி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதிலும் முன்னனியில் நின்று சமுதாயத்தை பொதுவெளியிலும், ஊடகங்களிலும் அடையாளப்படுத்தியதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆற்றிவரும் பங்கு அளப்பரியது என்பதை நாம் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பெரும் கனவுகளோடும், லட்சியங்களோடும் துவங்கப்பட்டது நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை. தங்கள் இலக்குகளை அடையும் முன், சகோதர அமைப்பு "எங்கோ ஒருமூலையில்" கட்டிவரும் கட்டிடத்தால் நமக்கென்ன லாபம் என்று நினைக்காமல், அறக்கட்டளை நிர்வாகிகளின் கட்டளையை ஏற்று ஒருசில மணித்துணிகளில் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்கிய நல் உள்ளங்கள், இராணுவக்கட்டுப்பாட்டோடு பணியாற்றி வருவது, அறக்கட்டளையினரின் கனவு நனவாகும் நாள் அதிகமில்லை என்பதை உறுதி செய்கிறது.

அதற்கடுத்து கொ.நாகராஜன், சரவணன் உள்ளிட்டவர்கள் விடைபெற்றுக்கொள்ள, அறக்கட்டளை தலைவரும், பிடிஓ நாகப்பன் அவர்களும், நாமக்கல் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று முக்கிய தலைவரை சந்திக்க வைத்து "கல்வி, தொழில்துறை"யில் சமூகம் சாதிக்க வேண்டிய எதிர்கால பாதை குறித்து விளக்கியதோடு, அதைநோக்கி பயணிக்க அறிவுரை வழங்கினர். சென்னை திரும்ப இரவு 9 மணிக்கு புறப்படும் அரசுப்பேருந்தில் முன்பதிவு செய்திருந்தபடியால் கூட்டத்தை நிறைவு செய்து பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். மனநிறைவுடன் பயணம் அமைந்தாலும், நேர நெருக்கடியால் இரவு உணவு கூட வழங்காமல் அனுப்பி வைக்கின்றோமே என்ற வருத்தம் அறக்கட்டளை தலைவருக்கும், நாகப்பன் அவர்களுக்கும் இருந்ததை உணராமல் இல்லை. கொக்கரசங்கோட்டை திரு.நாகராஜனை சந்தித்திருந்தால் சந்திப்புகள் நமக்கும் நிறைவைத் தந்திருக்கும்.

பேருந்து புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் அக்கம்மாபாளையம் சரவணன் அலைபேசியில் தொடர்பில் வந்தவர், நண்பர் ஒருவரை "கான்பரன்ஸ்" அழைப்பில் சேர்த்துக்கொண்டார். பேச்சினூடே சென்னை சங்கத்தில் லட்சியங்களை வெல்ல நாங்கள் என்றும் துணைநிற்போம் என்று உறுதியளத்தவர்கள், உங்கள் நாமக்கல் பயணம் நிறைவை தந்ததா? என்ற கேள்விக்கு விடைதேடினர். கம்பளத்தார் சமூகம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம், இப்பொழுதுதான் பயணைத்தையே தொடங்கியுள்ளோம், நன்கொடையாளர் பட்டியலில் "லட்சங்கள் சிலரை ஆயிரத்தில் ஒளித்து வைத்த அற்புதம் கண்டேன்" என்றவுடன் புரிந்துகொண்ட சரவணனின் புன்னகையே எங்களின் நம்பிக்கை. ஆம், வலையில் சிக்காத வைரக்கல்கள் நிறைந்த நாமக்கல் இன்னும் பல அற்புதங்களையும், இன்ப அதிர்ச்சிகளையும் அடுத்த சில நாட்களில் வழங்கும் என்ற நம்பிக்கையில்.

சென்னை வந்திறங்கும் முன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்கொள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் பங்களிப்பு ரூ.200000/- மாக இருக்க வேண்டும் என்ற சமூகநீதி கூட்டமைப்பின் ஓலை வந்து சேர்ந்தது என்ற தகவலோடு பயணங்கள் முடிவதில்லை....

பொதுசெயலாளர் பயணக்குறிப்பிலிருந்து....

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved