🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்!- தொடர்-9

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர் (8 ஆம் வாரத் தொடர்ச்சி )

எம்ஜிஆரின் தத்துவம்: "உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். நமது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் காரணமாக  மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்று இருக்கக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருநாளில் அனைவரின்  இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஒளி வெள்ளம் பிரகாசமாய் மிளிர்ந்திட  வாழ்த்துக்கள் தெரிவித்து இந்த வாரத் தொடரைத் தொடர்கிறேன்.

தமிழக மக்களிடம் மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ்  நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. 1968-ல் பொம்மை இதழின் ஆண்டு மலருக்காக எம்ஜிஆர் அவர்களிடம், ஜெயலலிதா பேட்டி காண்கிறார். அப்பொழுது நீங்கள்  சினிமா உலகில் யாரும் அடைய முடியாத உச்ச நிலையை அடைந்து விட்டீர்கள். விரும்பிய இலட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? என  வினா எழுப்புகிறார் ஜெயலலிதா. அதற்குப் பதில் அளித்த எம்ஜிஆர், கலைஞர்களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலையே தவிர, கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. அவனைத்  தாழ்த்துவதும், உயர்த்துவதும் சூழ்நிலை தான் எனக் கூறுகிறார்.

அதற்கு உதாரணமாக நாடகங்களிலும், திரைப் படங்களிலும் "இந்திய மேடைப்புலி" என்ற பட்டம் பெற்றவர் கே.பி. கேசவன் என்பவர். அவர் கதாநாயகனாக நடித்த இரு சகோதரர்கள் படத்தில் எம்ஜிஆர் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அத்துடன் அவர் எம்ஜிஆர் மீது மிகுந்த அன்பும் கொண்டவர். ஆகவே சென்னையில்  வெளியான அந்த திரைப் படத்தைக் காண இருவரும் "நியூ எல்பின்ஸ்டன்" திரையரங்கிற்குச் செல்கின்றனர். (அந்த தியேட்டர் தற்போது இல்லை ). அப்பொழுது இடைவேளையின்போது கேசவனைக் கண்டு கொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்புகின்றனர். ஆதலால் ரசிகர்களின் அன்பு மழையை தவிர்ப்பதற்காக படம் முடிவதற்குள் இருவரும் வெளியே வருகின்றனர். அதைக் கவனித்த ரசிகர்களும் வெளியே  வந்து கூட்டமாகக் கூடி விடுகின்றனர். அவர்களிடம் இருந்து கே.பி. கேசவனை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைக்கிறார் எம்ஜிஆர். (அப்பொழுது அதில் சிறிய வேடத்தில் நடித்ததால், தன்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்கிறார் எம்ஜிஆர் )

அடுத்து ஆண்டுகள் சில கடக்கிறது. எம்ஜிஆர் கதாநாயகன் ஆகப் புகழ் பெறுகிறார். அவர் நடித்த "மர்மயோகி" சென்னையில் உள்ள நியூகுளோப் திரையரங்கில் வெளியாகிறது. இப்பொழுதும் அதேபோல் இருவரும் திரையரங்கிற்குச் செல்கின்றனர். இப்பொழுது எம்ஜிஆரைக் கண்டு ரசிகர்கள் வாழ்த்துக் கோசம் எழுப்புகின்றனர். பக்கத்தில் அமர்ந்திருந்த கேசவனை எவரும் அறிந்து கொள்ளவில்லை. படம் முடிந்து வெளியே செல்லும் போது எம்ஜிஆரை மக்கள் கூட்டம்  சூழ்ந்து கொள்கிறது. இப்பொழுது கூட்டத்தை விலக்கிய கேசவன் எம்ஜிஆரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைக்கிறார். எம்ஜிஆர் மேற்கண்டதைக் கோடிட்டுக் காட்டி ஜெயலலிதாவிடம்  விளக்குகிறார். இதேபோல் அண்ணா ஒருமுறை அமெரிக்கா சென்ற பொழுது, திமுகவின் முக்கிய பிரமுகரும், படத் தயாரிப்பாளருமான இராம. அரங்கண்ணலையும் உடன் அழைத்துச் செல்கிறார்.

அப்பொழுது இருவரும் பல அடுக்கு மாடிகள் கொண்ட உயரமான கட்டிடத்தின் உச்சிக்குச்  செல்கின்றனர். அங்கிருந்து இயற்கைக் காட்சியை ரசித்துக் கொண்டே, அடேயப்பா எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்று அண்ணா அவர்களிடம் அரங்கண்ணல் வியப்புடன் கேட்கிறார். அதற்கு அண்ணா சிரித்துக் கொண்டே, இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் என்று பதில் அளிக்கிறார். வாழ்க்கையில் உயர்வு, தாழ்வுகளை  சமமாகக் கருதிய  அண்ணாவின் அதே மனநிலை தான் எம்ஜிஆரின் பேட்டியிலும் இருந்தது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அடுத்து தமிழக முதல்வராகப் பணியாற்றிய அண்ணா, இரண்டே ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலன் அளிக்காமல் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ல் அகால மரணம் அடைகிறார். அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் பங்கேற்கின்றனர். அதுவரை எங்கும் எந்த தலைவரின் இறுதி ஊர்வலத்திலும்  காணாத ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை உலகம் காண்கிறது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர்  ஐம்பதுகளில் தம்பி வா, தலைமை ஏற்க வா என அண்ணா அவர்களால் அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், தற்போது தற்காலிக முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். பின்னர் ஜூலை 27 ல் திமுகவின் தலைவராக கருணாநிதியும், பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும், பொருளாளராக எம்ஜிஆரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதே ஆண்டில் எம்ஜிஆர் தயாரித்து, நடித்து, வெளியான அடிமைப்பெண் மிகப் பெரிய வெற்றியைப் பெறுகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை  அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்ற  பாடலை சொந்த குரலில், பாட வைத்திருப்பார். அதேபோல் எம்ஜிஆருக்காக,முதன் முதலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை  "ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா" என்ற பாடலை  பாடவைத்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்பொழுது அந்த மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவியது. அதைக் கண்ட எம்ஜிஆர் அந்த மாநில அரசுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்குகிறார்.

பின்பு அந்த மாநிலத்தின் அன்றைய முதல்வர் 'மோகன்லால் சுகாதியா'  வெள்ளை தொப்பியை எம்ஜிஆருக்கு பரிசாக வழங்குகிறார். அந்த தொப்பி எம்ஜிஆருக்கு நன்றாகப் பொருந்தியதால், அன்றிலிருந்து அந்த தொப்பியை எம்ஜிஆர் வழக்கமாக அணிந்து கொண்டார். இதையடுத்து நம்நாடு படமும் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதில் எம்ஜிஆர் நகர் மன்ற தலைவர் ஆக வெற்றி பெற்று வரும்பொழுது, 'வாங்கய்யா வாத்தியாரைய்யா வரவேற்க வந்தோமய்யா, ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமய்யா' என்ற அருமையான பாடலை எம்ஜிஆருக்காகவே கவிஞர் வாலி எழுதி இருப்பார். இதற்கு முன்பே 1960 ல் எம்ஜிஆர் அவர்களுக்கு திருநெல்வேலி  மாநகர ரசிகர் மன்றத்தின் சார்பில் "வாத்தியார்" பட்டம் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது . அதேபோல் எம்ஜிஆர் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவது போல் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம்நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே' என்ற இனிமையான தத்துவ பாடலும் இடம் பெற்றது. எம்ஜிஆர் 1970 ல் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டில் சில காட்சிகளை எடுக்கத் திட்டமிடுகிறார். அப்பொழுது அங்கு நடைபெறும் எக்ஸ்போ-70 கண்காட்சியை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க விரும்புகிறார். அது செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிந்து விடும் என்பதால், செப்டம்பர் 4 ல் தன் குழுவினருடன் ஜப்பான் புறப்படுகிறார். பின்பு 5 ல் அதன் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனீதா  விமான நிலையத்தில் இறங்கிய எம்ஜிஆர், அங்குள்ள இம்பீரியல் ஹோட்டலில் தங்குகிறார். பின்னர் 6 ஆம் தேதி கண்காட்சிக்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே எட்டு இலட்சம் மக்கள் கலந்து கொண்டதால் நுழைவு வாயில் மூடப்பட்டிருக்கிறது. உடனே ஜப்பான் நாட்டின் பிரபல நடிகர் ஹிதேகி தகஹாஸி போல் எம்ஜிஆர் இந்தியாவின் பிரபல நடிகர் என அறிமுகம் செய்து அதிகாரிகளிடம் அனுமதி பெறுகின்றனர். அதன் பிறகு உள்ளே சென்ற எம்ஜிஆர் அந்த கண்காட்சிகளை பிரமாதமாக படமாக்குகின்றார். இந்த படம் 1973 ல் வெளியாகி மிக பிரமாண்ட வெற்றி பெற்றது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை உருக்குலைத்தன. இந்தப் படத்தில் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாய் விளங்கும் அணு ஆயுதம் பற்றிய ரகசியக் குறிப்பை வில்லன்களிடம் இருந்து அதே ஜப்பானிலேயே எம்ஜிஆர் மீட்பது போல் காட்சி எடுத்திருப்பார். எம்ஜிஆர் மதிநுட்பம் நிறைந்தவர் என்பதற்கு இதுவே சாட்சி. இதற்காகவே  எம்ஜிஆரைப் பெரிதும் போற்றிப் பாராட்டலாம். 

 சரித்திரம் தொடரும்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved