🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்!- தொடர்-10

காசிராஜன் எழுதும் சரித்திரத்தின் சகாப்தம் எம்ஜிஆர்!- தொடர்-10

எம்ஜிஆரின் தத்துவம் : ' ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும் '

என் உயிரின் உயிரான உறவுகளே, நண்பர்களே வணக்கம். தொடர்ந்து வெற்றிகரமாக 10 ஆம் வாரமாக சுமார் இரண்டரை மாத காலம் என் எண்ணத்தில் பல வண்ணத்தில் கருவாகி உருவாகிய வரிகளை எல்லாம் கருத்துக்களாக வடித்து வருவதைத் தொடர்ந்து படித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும், பணிச்சுமையின் காரணமாக தொடர்ந்து படிக்க இயலவில்லை என்றபோதும் அவ்வப்போது படித்துவரும் நேயர்களுக்கும், படிக்கும் ஆர்வம் இருந்தும் சூழ்நிலை காரணமாக இதுவரை படிக்கவில்லை என்றாலும், இனிவரும் நாட்களிலாவது படிக்கவேண்டும் என்ற நல் உள்ளம் கொண்ட அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றியை உரித்தாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இனி இந்த வாரத் தொடரைச் சுவைப்போம்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்கிறார். பின்னர் அங்குள்ள 'துஸித்தானி' என்ற பிரமாண்ட ஹோட்டலில் தங்குகிறார். அந்த ஹோட்டலின் அழகைக் கண்ட எம்ஜிஆர், அதை அப்படியே ரசிகர்களுக்கும், மக்களுக்கும் காட்சிப்படுத்த விரும்புகிறார். அதற்காக தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டா 'மிஸ்டர் ராஜ் ' என அழைத்தபடி தன்னைப் பார்க்க வரும் காட்சியில் ஹோட்டல் முழுவதையும் அழகாகக் காட்சிப்படுத்தி இருப்பார். இது நமது சென்னையில் பிரமாண்டமாக இருக்கும் 14  அடுக்குமாடி கொண்ட LIC  யின் கட்டிடத்தை விட பல மடங்கு உயரமும், விசாலமும் நிறைந்தது என்கின்றனர். அதுமட்டும் அல்ல அனைவரும் காண வேண்டிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களில் தாய்லாந்தும் ஒன்றாகும் .  முன்பு ஒருமுறை அங்கு சென்று வந்த அனுபவம் எனக்கு உண்டு.

அப்பொழுது அங்கு நான் தங்கிய ஹோட்டல் அறையில் இருந்த தொலைக்காட்சியின் மூலம் அருகிலுள்ள ஹோட்டலின் மேல்தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கும் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். அதுபோல் அங்குள்ள புத்தர் கோவில், தரமான வைரக்கல், ராசிக்கல், முத்து வியாபாரங்களின் அழகு மாளிகை, அந்நாட்டு மன்னரின் அரண்மனை, நீர்வழிப் பாதையில் அழகான கப்பல் போன்ற பெரிய படகில்  இயற்கையை ரசித்தபடி தென்றல் தாலாட்டும் மாலை நேரப் பயணம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்... அந்நாட்டு கரன்சியின் பெயர்  (Bhat) பாட் என்பதாகும். நான் சென்ற பொழுது 1 பாட் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு 1.50 ஆக இருந்தது. அடுத்து அங்கு 'பட்டாயா' என்ற அழகு நிறைந்த கடற்கரை நகரம் உள்ளது. அங்கிருந்து ஸ்ட்ரீம்மர் என்று சொல்லக்கூடிய வேகம் மிகுந்த விசைப்படகில், கடலின் இயற்கையை ரசித்தவாறு  ஒரு தனித் தீவுக்குச் செல்லலாம். இது எனக்குப் புதுமையான அனுபவமாக, இனிமையான பயணமாக  இருந்தது என்றே சொல்லலாம். 

அங்குள்ள ஆழ்கடலிற்கு அதற்கான உடை மற்றும் சுவாசக் காற்று வசதியுடன் சென்று பவளப் பாறைகளைப் பார்வை இடலாம். அங்கு பாராசூட் பயணமும் போகலாம் . வாய்ப்பு உள்ளவர்கள் சென்று வரக்கூடிய இடங்களில் தாய்லாந்தும் ஒன்று என்பதை மீண்டும் மகிழ்ச்சியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . 1971 ல்   ரிக்சாக்காரன் படத்தில் நடித்த எம்ஜிஆருக்கு, இந்தியாவின் சிறந்த நடிகருக்கான 'பாரத்' விருது வழங்கப்படுகிறது. அதேநேரம் தமிழகத்தில் அரசியல் களமும் பரபரப்பாகிறது. 1972 ல் வரவேண்டிய சட்டமன்ற பொதுத் தேர்தலை 1971 ஆம் ஆண்டிலேயே சந்திக்க கருணாநிதி தயாராகிறார். தேர்தல் அறிவிப்பும் வெளியானது. தேர்தல் களத்தில் நடிகர் திலகம் சிவாஜி, காமராஜர் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்கிறார். திமுக கூட்டணிக்கு எம்ஜிஆர் களத்தில் இறங்குகிறார். எம்ஜிஆரின் அனல் பறக்கும் பிரச்சாரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. அத்துடன் எம்ஜிஆர் சென்ற இடமெல்லாம் கட்டுக் கடங்காத மக்கள் கூட்டம் காணப்படுகிறது. தேர்தல் முடிவில் திமுக 183 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதேபோல் நாடாளுமன்றத்தில் 23 தொகுதிகளில் வெற்றியடைகிறது. காமராஜர் நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிறார். முன்னர் அண்ணாவால் அமலாக்கப்பட்ட மது விலக்கு, இப்போது நிதி நெருக்கடி உள்ளதாகக்கூறி கருணாநிதியால்  விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதில் எம்ஜிஆருக்கு அறவே விருப்பம் இல்லை. காயிதேமில்லத், மூதறிஞர் இராஜாஜி ஆகிய இருவரும் கருணாநிதியின் இந்த முடிவை பரிசீலிக்கும்படி  வேண்டுகோள் விடுத்தனர். அதேநேரம் மதுப்பழக்கத்தின் கொடுமைகளை விளக்கும் பிரச்சாரக் குழுவிற்கு எம்ஜிஆர் தலைவராகிறார். இதன் பிரச்சாரத்தை எம்ஜிஆர், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ல்   உறுதி மொழியுடன் தொடங்குகிறார். பின்னர் திமுகவில் உள்ள மூன்று தலைவர்கள் மூலம்  கருணாநிதி ஆட்சியைக் கவிழ்க்க இந்திரா காந்தி முயற்சி செய்வதாக, பம்பாயிலிருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் நிருபர்களிடம் பேட்டியளிக்கிறார்.

பின்னர் ஏப்ரல் 8 ல் திமுகவின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. அதில் பேசிய எம்ஜிஆர், கழகம் பிளவு படவேண்டும், கழகத்தில் உள்ளவர்களிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்ற நப்பாசை கொண்டவர்களுக்கு கழகத் தோழர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது. அண்ணா உருவாக்கிய கழகத்தில் பிளவை உருவாக்கப் பார்க்கிறார்கள். நடக்குமா?  சச்சரவுகள் இருந்தால், அதை எங்களுக்குள் தீர்ப்போமே தவிர அது சந்தைக்கு வராது. திமுக ஆட்சியில் குறை என்றால் என்ன குறை என்று சொல்லுங்கள். யார் மீது குற்றம் என்று தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக நீதிமன்றம் கூட செல்லுங்கள். இப்படி எல்லாம் செய்யாமல் பத்திரிகைகளைத் தூண்டி விடாதீர்கள். இங்கு குழப்பங்கள் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம். கழகத்தைப் பிளவுபடுத்த எவரும் பிறக்கவில்லை. இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை என்று பேசி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து பிள்ளையோ பிள்ளை படம் முழுவதும் மு.க. முத்து எம்ஜிஆர் சாயலில் நடித்ததைப் பார்த்த எம்ஜிஆருக்கு ஏதோ ஒரு பொறி தட்டுகிறது. ஆனாலும் எம்ஜிஆர் மு.க. முத்துவிடம் உனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள் என்கிறார். ஆனால் மு.க. முத்துவோ அடுத்தடுத்து எம்ஜிஆர் பட நாயகிகளுடன் நடிப்பதை தொடர்கிறார். அத்துடன் எம்ஜிஆர் மன்றங்கள் வலுக் கட்டாயமாக மு.க. முத்து மன்றங்களாக மாற்றப்படுகின்றன. எம்ஜிஆர் இதையெல்லாம்  மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வருகிறார். இதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு  எம்ஜிஆரைப் பற்றி தவறாக திமுகவின் சேலம் மாவட்ட தலைவர் எஸ்.எஸ். சுப்ரமணியம் ஒரு பத்திரிகைக்கு கடிதம் எழுதுகிறார். இதைக் கேள்விப் பட்ட  எம்ஜிஆர் கோபம் அடைந்ததைக் கண்டு அவர் ஐந்து ஆண்டுகள் திமுகவிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். இதையடுத்து ஆகஸ்ட் 5 ல் மதுரை எஸ். முத்து தலைமையில் மதுரை மாவட்ட மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், இரண்டாம் நாளில் எம்ஜிஆர் கலந்து கொள்கிறார்.  முதல் நாளைவிட மறுநாளில் மக்கள் கூட்டத்தால் மாநாட்டுத் திடலே நிரம்பி வழிகிறது. எம்ஜிஆரும் பேச அழைக்கப்படுகிறார், அவரைக் காணும் ஆவலில் காத்திருந்த கூட்டம், அவர் பேசத் தொடங்கியதும் அலை கடலாய் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. மதுரை ஆரம்ப காலம் முதல் எம்ஜிஆர் ரசிகர்கள் நிறைந்த பகுதி என்பதால் அவர்களின் கரவொலியால் மதுரை மாநகரமே குலுங்கியது. அவர்களை எல்லாம் அமைதிப் படுத்திய  எம்ஜிஆர் நான்கு திசையிலும் தன் பொன்முகத்தைக் காட்டிவிட்டு, சுமார் முப்பது நிமிடங்கள் உரையாற்றுகின்றார். ஆனாலும்  எம்ஜிஆருக்கு எதிராக திமுக வில் உள்ளடி வேலைகள் தொடர்கிறது. இதையடுத்து  எம்ஜிஆர் திமுகவில் ஓரங்கட்டப்படுகிறார் என எண்ணிய அவரின் ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர்.

பின்னர் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று சென்னை, ராயப்பேட்டையில் இருக்கின்ற அன்றைய சத்யா திருமண மண்டபத்தில் ( அதிமுக தலைமை அலுவலகமான இன்றைய 'எம்ஜிஆர் மாளிகை')  எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள் கூட்டம் ஆர்.எம். வீரப்பன் தலைமையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கொடிக்குப் பதிலாக தாமரை சின்னம் பொறித்த கொடியைப் பயன்படுத்துவதற்குறிய  ஏற்பாடுகள் தொடங்கப்படுகிற து. அதற்கு முன்பு எம்ஜிஆரிடம் அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயர் மூலம் கருணாநிதி சமாதானம் பேசுகிறார். அதை வெள்ளை மனம் கொண்ட எம்ஜிஆரும்  ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகும் எம்ஜிஆருக்கு எதிரான உள்ளடி வேலைகள்  திமுகவில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் பிறகு அக்டோபர் 8 ஆம் தேதியன்று திருக்கழுக்குன்றத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எம்ஜிஆர், திமுகவினரின் சொத்துக் கணக்குப் பற்றி கேள்வி எழுப்புகிறார். பின்னர் அன்று மாலையில் சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த பொதுக் கூட்டத்திலும் அதே கேள்வி எழுப்பி முழங்குகிறார்.

 எம்ஜிஆரின் அந்த முழு உரைவீச்சு விபரம் அடுத்த வாரத்தில்.....தொடரும் சரித்திரம்...

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved