🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பல லட்சம் வேலைவாய்ப்புகள்! வன்னியர்களே வாருங்கள்! ஒன்றுகூடி வென்றெடுப்போம்! - சமூகநீதி கூட்டமைப்பு அழைப்பு.

வன்னிய உறவுகளுக்கு வணக்கம், 

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சாதிகளை வைத்து அரசியல் செய்யும் பிழைப்புவாதிகளுக்கு தான் தோல்வியே தவிர, வேறு எந்த சமுதாயத்திற்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை. சுதந்திர இந்தியாவில் இதுவரை பல்வேறு மாநில உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் இடஒதுக்கீடு வழக்கில் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனிப்பட்ட எந்த ஒரு சாதிக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது. மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனம் திருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

இது மருத்துவர் அய்யா அவர்களுக்கும் தெரியாதது அல்ல. சட்டத்தின் உண்மைநிலை இவ்வாறு இருக்க, இத்தனை ஆண்டுகள் எதை வைத்து வன்னியருக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு  கேட்டு போராடி வந்தார் என்பது தெரியவில்லை. இதனால் பல உயிர்களும், உடமைகளும், பொதுசொத்துக்களையும், நாசப்படுத்தியது தான் மிச்சம். இதனால் வன்னியர் சமுதாயத்தில் எண்ணற்ற தியாக சீலர்கள் இருந்தும், அது மறைக்கப்பட்டு வன்னியர் என்றாலே வன்முறையாளர்கள் என்ற அச்சம் பொதுமக்களின் பொதுபுத்தியில் ஏற்படுத்தியுள்ளது, அம்மக்களுக்கு செய்யும் பெருங்கேடு.

சாமானிய வன்னியர் சமுதாய உறவுகள், மாணவர்கள், கல்வியாளர்கள், உயர்நீதிமன்ற தீர்ப்பை தயவு செய்து நன்கு படியுங்கள், மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். இனிமேலாவது  புரிந்து கொண்டு செயல்படுங்கள். காலம்காலமாக உறவுகளாக வாழ்ந்துவரும் நமக்குள் பகையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அரசியல் செய்வதை விடுத்து மத்திய அரசுப்பணிகளில் நமக்கு கிடைக்கவேண்டிய OBC இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய மோசடி நடந்து கொண்டிருக்கிறதை கருத்தில்கொள்ளுங்கள்.

பெருங்கொண்ட  ஒரு சமூகத்தை  சிறு சமூகம் ஆட்சி செய்வது என்பது இந்தியாவைத் தவிர உலகத்தில் எங்கும் கிடையாது. 65 விழுக்காடு வாழும் OBC மக்களை ஏமாற்றி, 90 விழுக்காடு வேலைவாய்ப்புகளை வெறும் 3% உள்ள பிராமணர்போன்ற முன்னேறிய வகுப்பினர் ஆண்டு அனுபவித்துக் கொண்டுள்ளனர். 

மைய அரசின் செயலாளர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், தூதர்கள் போன்ற உயர் பதவிகளில் OBCல் ஒருவர் கூட இல்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள், அறிவியல் ஆராய்ச்சித் துறைகள், ஐஐடி போன்ற  மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்  இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பதே இல்லை. இது போன்று இன்னும் எவ்வளவோ இட ஒதிக்கீடு மோசடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இதையெல்லாம் சரி செய்ய, மத்திய அரசை முறையாக OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு  நடத்த செய்ய வேண்டும். நமக்கான பங்கினைப் பெற வேண்டும்,சமூகநீதி காத்திட வேண்டும். 

வன்னிய உறவுகளே சிந்தியுங்கள், சமூக வலைதளங்களில், பொதுநிகழ்ச்சிகளில், ஊடக விவாதங்களில் எங்கள் மீது வன்மமும், அவதூறும் வேண்டாம். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று சமூகநீதி கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் திட்டுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. உங்களை வைத்து அரசியல் ஆதாயம்தேடும் கேடுகெட்ட அரசியல்வாதிகளு பலியாக வேண்டாம். நாம் அனைவரும் சமூகத்தில், கல்வியில், வேலைவாய்ப்பில் ஒரே அந்தஸ்தில் உள்ள சமுதாயங்களே. வாருங்கள் ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வென்றிடுவோம்! நமது உரிமையை பெறுவோம்! சமூகநீதியை காத்திடுவோம்!. 

இவண்,

மு.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், சமூகநீதி கூட்டமைப்பு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved